dinamalar telegram
Advertisement

சாஹோ

Share

நடிப்பு - பிரபாஸ், ஸ்ரத்தா கபூர்
தயாரிப்பு - யுவி கிரியேஷன்ஸ்
இயக்கம் - சுஜித் ரெட்டி
இசை - ஜிப்ரான்
வெளியான தேதி - 30 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 51 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தென்னிந்தியத் திரையுலகம் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக இந்தப் படத்தைச் சொல்லலாம். இந்தப் படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சிகள் போன்று இதற்கு முன் இந்திய சினிமாவில் பார்த்ததில்லை என்று தாராளமாகக் குறிப்பிடலாம். ஆனால், அது மட்டுமே ஒரு படத்திற்குப் போதுமானதல்ல, நல்ல கதையும் வேண்டும்.

அவ்வளவு கோடிகளைப் போட்டு படமெடுத்தவர்கள் இன்னும் சிறப்பான ஒரு கதையை யோசித்திருக்கலாம். சர்வதேச அளவில் படத்தைக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக ஒரு சர்வதேச கேங்ஸ்டர் கதையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். படத்தில் நம்ப முடியாத காட்சிகள் தான் அதிகம். அதனால் இந்தப் படத்தை ஒரு பேன்டஸி ஆக்ஷன் படம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

இயக்குனர் சுஜித் பேப்பரில் எழுதியதை அப்படியே திரைக்குக் கொண்டு வந்துள்ளார் என்று சொல்லலாம். பல காட்சிகள் விஷுவலாக ஒரு மிரட்டலான அனுபவத்தைக் கொடுக்கின்றன.

சர்வதேச கேங்ஸ்டர்களின் தலைவரான ஜாக்கி ஷெராப், மும்பைக்கு வரும் போது ஒரு விபத்தில் கொல்லப்படுகிறார். அவரது இடத்திற்கு அவரது மகன் அருண் விஜய் வருகிறார். அந்த கூட்டத்திற்குச் சொந்தமான லாக்கரைத் திறப்பதற்குரிய பிளாக் பாஸ் ஒன்று மும்பையில் இருக்கிறது. அதைத் திருட நீல் நித்தின் முகேஷ் முயற்சிக்கிறார். அந்த திட்டத்தை முறியடிக்க அன்டர்கவர் ஆபீசரான பிரபாஸ் தலைமையில் ஒரு குழு களமிறங்குகிறது. அதன்பின் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

பாகுபலி படத்தில் சரித்திர இளவரசனாக ஆக்ஷனில் அசத்திய பிரபாஸ், இந்தப் படத்தில் அன்டர்கவர் ஆபீசராக அசத்துகிறார். அவர் கதாபாத்திரத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் தான் படத்தின் முதுகெலும்பே. அது தெரிய வரும் போது நமக்கே ஆச்சரியமும், அதிர்ச்சியும் வருகிறது. பிரபாஸ் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் கொஞ்சம் கூட நம்ப முடியாதவை. ஆனால், அவரது தோற்றத்திற்கு அதை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். படத்தில் பிரபாஸ் ஹீரோ அல்ல சூப்பர் ஹீரோ என்று வேண்டுமானால் சொல்லலாம்.

படத்தின் நாயகி ஸ்ரத்தா கபூர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். பிரபாஸ் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு அதிகாரி. அவரது அழகில் மயங்கி பிரபாஸ் காதலிக்க ஆரம்பிக்கிறார். காக்கி சட்டை போடாமலேயே தன் கிளாமராலும் ரசிகர்களைக் கவர்கிறார்.

படத்தில் அருண் விஜய், சுன்கி பாண்டே, லால் என சர்வதேச கேங்ஸ்டர் வில்லன்கள். அருண் விஜய்க்குக் கொஞ்சம் கூடுதலான காட்சிகள். ஸ்டைலிஷாக வில்லத்தனம் செய்திருக்கிறார்.

பிரபாஸின் வலது கரமாக முரளி ஷர்மா. போலீஸ் அதிகாரியாக நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், பிரகாஷ் பெலவாடி. அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் கடுமையாக உழைத்திருப்பவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளர் மதி, சண்டைப் பயிற்சியாளர்கள். ஒவ்வொரு காட்சியிலும் அவர்கள் கைவண்ணத்தில் பிரம்மாண்டம் உச்சம் தொடுகிறது. ஜிப்ரான் பின்னணி இசையில் பரபரப்பைக் கூட்டுகிறார்.

படத்தின் ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. கேங்ஸ்டர்கள் பலரும் மாறி மாறி பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். சிலர் பேசுவது சரியாகக் கூடப் புரியவில்லை. இடைவேளை வரை படத்தில் பெரிதாகக் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை. ஒரு திருடனைப் பிடிக்க ஒரு குழுவே போராடுகிறது. இடைவேளைக்குப் பின்தான் கதைக்குள் நகர்கிறார்கள். அதையும் பல சண்டைக் காட்சிகள் ஆக்கிரமிக்கின்றன. திரைக்கதையில் ஆங்காங்கே வரும் டிவிஸ்ட்டுகள் நாம் சிறிதும் எதிர்பார்க்காதவை, குறிப்பாக கிளைமாக்ஸ்.

ஆக்ஷன் படங்களை ரசிப்பவர்களுக்கு மட்டும் இந்தப் படம் பிடிக்கலாம்.

சாஹோ - (சர்க்கஸ்) சாகசம்

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement