dinamalar telegram
Advertisement

தொரட்டி

Share


நடிப்பு - ஷமன் மித்ரு, சத்யகலா
தயாரிப்பு - ஷமன் பிக்சர்
இயக்கம் - மாரிமுத்து
இசை - வேத்சங்கர் சுகவனம், ஜித்தின் ரோஷன்
வெளியான தேதி - 2 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 3/5

குடிப்பழக்கத்திற்கு எதிராக எவ்வளவோ பேர் எவ்வளவோ பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். குடிப்பழக்கத்தால் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எழை இளைஞன் ஒருவனும், அவனுடைய வாழ்க்கையும் எப்படி சீரழிந்து போனது என்பதை இந்தப் படம் ஆழமாகவும், அழுத்தமாகவும் புரிய வைக்கிறது.

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு வரும் ஒரு நான்கைந்து படங்கள்தான் நாமும் தரமான படங்களைத் தந்து கொண்டிருக்கிறோம் என்ற பெருமையை சற்றே காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

இயக்குனர் மாரிமுத்து, இராமநாதபுரம் மாவட்டத்தின் வயல்வெளி வாழ்வியலை அவ்வளவு யதார்த்தமாய் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வயல்வெளிகளில் அறுவடை முடிந்து அடுத்த உழவுக்குள்ளாக அந்த நிலங்களில் ஆடுகளை அடைத்து வைத்து அதன் சாணத்தை அப்படியே இயற்கை உரமாக வயலுக்குப் பயன்படுத்தி நிலத்தை உழுவார்கள். அப்படி, ஊர் ஊராய் சென்று ஆடு கிடை மடக்கும் ஒரு குடும்பத்தின் கதைதான் இந்த தொரட்டி.

நாயகன் ஷமன் மித்ருவின் அப்பா, அம்மா இடம் பெயர்ந்து ஒரு ஊருக்கு வந்து குடிசை போட்டு தங்கி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வயல்களில் ஆடு கிடை மடக்கி பிழைப்பு நடத்துகிறார்கள். அந்த ஊரில் இருக்கும் மூன்று திருடர்களுடன் யதேச்சையாகப் பழக ஆரம்பிக்கிறார் ஷமன் மித்ரு. அவர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். இருந்தாலும் அவர் மீதுள்ள காதலால் நாயகி சத்யகலா பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். ஒரு பெரிய திருட்டில் ஈடுபடும் ஷமன் மித்ருவின் நண்பர்களான அந்த மூன்று திருடர்கள் தப்பி வந்த போது அவர்களைக் காட்டிக் கொடுக்கிறார் சத்யகலா. சிறைக்குச் செல்லும் அந்தத் திருடர்கள் தங்களைக் காட்டிக் கொடுத்த சத்யகலாவைக் கொல்ல வருகிறார்கள். வந்த இடத்தில் நண்பன் ஷமன் மித்ருவின் மனைவியாக இருக்கிறார் அவர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் மாரிமுத்து அமைத்த கதைக்களம், கதாபாத்திரங்கள், தேவையான காட்சிகள் படத்தைப் பற்றிப் பேச வைக்க அவருக்கு பக்கபலமாக அமைந்துள்ளன. எந்த இடத்திலும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அவர்களது யதார்த்தத்தை மீறி செயற்கையாக நடிக்கவேயில்லை.

நாயகனின் பெற்றோர், நாயகியின் பெற்றோர், ஊர் பெரிய மனிதர், மூன்று திருடர்கள், இன்ஸ்பெக்டர், டீக்கடைக்காரர் ஆகியோர் படத்தின் நாயகன், நாயகி எந்த அளவிற்கு பெயர் வாங்குகிறார்களோ அதே அளவிற்கு அவர்களையும் குறிப்பிட வைக்கிறார்கள்.

நாயகன் ஷமன் மித்ரு அப்படியே கிராமத்து இளைஞராகவே மாறியிருக்கிறார். அதிலும் குடிப்பழகத்திற்கு அடிமையான பின் அவரைப் போல பலரை சாலைகளில் விழுந்து கிடப்பதை நாம் பார்த்த ஞாபகம் நினைவுக்கு வரும். அதிகம் பேசாமல் நடிப்பாலும், பார்வையாலும், பாவத்தாலும் பாராட்டுக்களைப் பெறுகிறார் ஷமன் மித்ரு.

அட, தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்குக் கூட நடிகைகள் இருக்கிறார்களா என ஆச்சரியப்பட வைக்கிறார் நாயகி சத்யகலா. அச்சு அசலாக ஆடு மேய்க்கும் பெண்ணாகவே மாறியிருக்கிறார். கிராமத்துப் பெண்களுக்கே உரிய துணிச்சல், நெகிழ்ச்சி ஆகியவற்றை அவ்வளவு அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட வாயாடும் பெண்களை கிராமங்களில் நிறையவே பார்த்திருப்போம். ஏதாவது விருதுக்கு இந்தப் படம் கலந்து கொண்டால், சத்யகலாவுக்கு அதில் ஒரு விருது நிச்சயம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

வேத் சங்கர் சுகவனம் இசையில் பாடல்களில் கிராமிய வாசம் வீசுகிறது. ஜிதின் கே ரோஷன் பின்னணி இசையும் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் வயலும் வயல் சார்ந்த இடமும் கதையின் மற்றொரு பாத்திரமாகவே அமைந்துள்ளன.

சீரியசான கதையாகவே படம் நகர்வது மட்டும்தான் கொஞ்சம் குறையாகத் தெரிகிறது. ஓரிரு நகைச்சுவைக் கதாபாத்திரங்களை சேர்த்திருந்து கொஞ்சம் நகைச்சுவையையும் கூட்டியிருந்தால் கமர்ஷியல் ரீதியாகவும் படம் இன்னும் அதிக கவனம் பெற்றிருக்கும்.

குடிக்கச் செல்பவர்களை இந்த தொரட்டி வைத்து இழுத்து தடுக்க வேண்டும்.

தொரட்டி - தேவை

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement