dinamalar telegram
Advertisement

ஏ 1

Share

நடிப்பு - சந்தானம், தாரா அலிசா பெரி
தயாரிப்பு - சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ஜான்சன்
இசை - சந்தோஷ் நாராயணன்
வெளியான தேதி - 26 ஜுலை 2019
நேரம் - 1 மணி நேரம் 49 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறிய சந்தானம் ஆரம்பத்தில் அவருக்கு சற்றும் பொருத்தமில்லாத சில கதைகளில், சில கதாபாத்திரங்களில் நடித்து நாயகனாக தோல்வியடைந்தார். அதன் பின்தான் யோசித்து, தன்னிடம் மக்கள் நகைச்சுவை கலந்த படங்களையே எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அப்படிப்பட்ட கதைகளைத் தேர்வு செய்து நாயகனாகவும் வெற்றியடைந்தார்.

அந்த வரிசையில் இதற்கு முன்பு அவர் நாயகனாக நடித்து வெளிவந்த படங்களை விட இந்த ஏ 1 படத்தில் நிறையவே சிரிக்க வைத்திருக்கிறார். அவருக்கு மட்டும் படம் முழுவதும் முக்கியத்துவம் கொடுத்துவிடாமல் உடன் நடிப்பவர்களும் அவர்களது நகைச்சுவையை வெளிப்படுத்த வைத்த மொத்தமாக அனைவருமே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

நகைச்சுவை படத்தை இயக்குவது மற்ற படங்களை இயக்குவதை விட கொஞ்சம் கஷ்டம். ஆனால், அறிமுக இயக்குனர் ஜான்சன் அவரது முதல் படத்திலேயே அதை எளிதாக செய்திருக்கிறார்.

பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் கதாநாயகி தாரா அலிசா பெரி. அவருடைய அப்பா யாட்டின் கார்யேகர் தாசில்தாராக இருப்பவர். மிகவும் நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர். கதாநாயகி தாராவுற்கு அவருடைய சாதியிலேயே ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஆசை. லோக்கல் பையனான சந்தானத்தை, பிராமண இளைஞர் எனத் தவறாக நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறார். உண்மை தெரிந்த பின் சந்தானத்தை விட்டுப் பிரிகிறார். நெஞ்சு வலியில் துடித்த அப்பாவை சந்தானம் காப்பாற்றியதால் மீண்டும் காதலிக்கிறார். சந்தானமும் பெற்றோருடன் சென்று பெண் கேட்க அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார் யாட்டின். இதனால் மனமுடையும் சந்தானத்திற்கு நல்லது செய்வதாக எண்ணி, தாராவின் அப்பா யாட்டினை சந்தானம் நண்பர்கள் கொலை செய்துவிடுகிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நகைச்சுவை நடிகராக இருந்த போது எப்படி நம்மை சிரிக்க வைத்தாரோ அப்படியே இந்தப் படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்க வைக்கிறார் சந்தானம். ஆரம்பம் முதல் கடைசி வரை நான்-ஸ்டாப் காமெடிதான். ஆப்பாயில் சாப்பிட்டு காதலை நிரூபிக்கும் பிராமணப் பெண்” என்று டீசரில் இடம் பெற்ற காட்சிக்கும் எந்த சர்ச்சையும் இல்லாமல் சரியான முடிவைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இதே ரூட்டில் சந்தானம் பயணித்தால் நாயகனாக தொடர்ந்து தாக்குப் பிடிக்கலாம்.

தனக்கு ஜோடியாக படத்திற்குப் படம் புது நாயகிகளைத்தான் நடிக்க வைக்கிறார் சந்தானம். தாரா அலிசா பெரி இப்படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். சந்தானத்தைக் காதலிப்பதும், அப்பாவைக் கண்டு பயப்படுவதும் மட்டும்தான் படத்தில் அவரது வேலை.

சந்தானம் நண்பர்களாக மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி மூன்று பேரும் சந்தானத்திற்கு ஈடு கொடுத்து காமெடி செய்திருக்கிறார்கள். சந்தானம் அப்பாவாக எம்எஸ் பாஸ்கர் வழக்கம் போல இயல்பான நடிப்பில் அசத்துகிறார். தாராவின் அப்பாவாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கோமாவில் இருப்பவராக நடித்த அந்த தாடிக்காரராக நடித்த யாட்டின் கார்யேகர். இன்ஸ்பெக்டராக வரும் சாய்குமார் ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் ஒன்றும் செய்யாமல் போகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் மாலை நேர மல்லிப்பூ...., சிட்டுக்கு சிட்டுக்கு... பாடல்கள் சிக்க வைக்கின்றன.

இடைவேளை வரை கலகலப்பான பல காட்சிகளுடன் படம் நகர்கிறது. அதன்பின் சந்தானம் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட யாட்டின் கார்யேகர் இறுதிச் சடங்குக்காக வீட்டில் கிடத்தப்பட்டு இருக்கும் போது நடைபெறும் சம்பவங்கள்தான் கிளைமாக்ஸ் வரை செல்கிறது. தாங்கள் கொலை செய்ததில் இருந்து தப்பிக்க சந்தானம் அண்ட் கோ என்ன செய்கிறது என்பதுதான் இடைவேளைக்குப் பிறகான மொத்த காட்சிகளும். ஒரு பக்கம் சடலத்தை வைத்துக் கொண்டு மறுபக்கம் சிரிக்கவும் வைக்கிறார்கள். சரி, படம் இன்னும் கொஞ்சம் போகும் என்று பார்த்தால் திடீரென படத்தை முடித்துவிட்டார்கள். காமெடி படம் என்பதால் பல காட்சிகளில் லாஜிக் பார்க்க முடியவில்லை. ஆனாலும் பிராமண சமூகத்தை பற்றி மறைமுகமாக சில கிண்டலான காட்சிகளை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து உத்தமனாக காட்டிய கதாநாயகியின் அப்பாவை, அப்படிப்பட்ட மனிதராக காட்டியிருக்க வேண்டாம்.

சமீப காலங்களில் நம்மை அதிகமாக சிரிக்க வைத்த படங்கள் எதுவும் வரவில்லை. அந்தக் குறையை இந்தப் படம் போக்கியிருக்கிறது.

ஏ 1 - ‛அட்ராசிட்டி காமெடி!

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement