Advertisement

கடாரம் கொண்டான்

நடிப்பு - விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன்
தயாரிப்பு - ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - ராஜேஷ் எம் செல்வா
இசை - ஜிப்ரான்
வெளியான தேதி - 19 ஜுலை 2019
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

ஒரு படம் பார்ப்பதற்கு விஷுவலாக மட்டும் பிரம்மாண்டமாகவும், மேக்கிங்கில் மட்டும் அசத்தலாகவும் இருந்தால் போதாது, சரியான கதை இருக்க வேண்டும், சரியான கதாபாத்திர வடிவமைப்பு இருக்க வேண்டும். நல்ல கதையும், அதைச் சுற்றிய நல்ல கதாபாத்திரங்களும் மட்டுமே ஒரு படத்தைப் பற்றி அதிகம் பேச வைக்கும்.

கடாரம் கொண்டான் படம் விஷுவலாக மட்டுமே மனதைக் கவரும் ஒரு படமாக இருக்கிறது. அது கூட வெளிநாடான மலேசியா என்பதால் நமக்கு ரிச் ஆகத் தெரியலாம். மற்றபடி ஆகா, அற்புதம் என்று சொல்லும் அளவிற்கு இந்தப் படத்தில் காட்சிகள் குறைவுதான். இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, சிறந்த நடிகரான விக்ரமை வீணடித்துவிட்டார் என்று கூட சொல்லலாம். விக்ரமின் மிரட்டலான ஸ்டைலிஷான தோற்றம் வேற லெவலாக இருப்பது போல அவருக்கான ஆக்ஷன்களையும் வேற லெவலில் அமைத்திருக்கலாம்.

ஹீரோயிசம் காட்ட எகிறி அடிக்க வேண்டிய காட்சிகளில் கூட விக்ரமை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம், அபிஹாசன் போலீஸ் கட்டுப்பாட்டில் கைகளில் விலங்கிட்டு அமர்ந்திருப்பார்கள். விஸ்வரூபம் படத்தில் அப்பாவி கமல்ஹாசன் திடீரென எகிறி அடித்து அசத்தியது போல விக்ரமும் இங்கு எகிறி அடிக்கப் போகிறார் என்று பார்த்தால் சாதாரணமாக யோசித்து, கீழே உடைந்துவிழுந்த மது பாட்டிலை வைத்து மிகச் சாதாரண சாகசம் செய்கிறார். படத்தில் விக்ரம் ஹீரோயிசம் பல இடங்களில் மிஸ் ஆவது ஒரு குறையாகத் தெரிகிறது.

கர்ப்பிணி மனைவி அக்ஷராஹாசனை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும் காதல் கணவன் டாக்டராக இருக்கும் அபிஹாசன். ஒரு சாலை விபத்தில் அடிபட்டு அபிஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் விக்ரம். அக்ஷராவைக் கடத்தி, விக்ரமை மருத்துவமனையை விட்டு வெளியில் அழைத்து வரச் சொல்லி அபிஹாசனுக்கு யாரோ மிரட்டல் விடுகிறார்கள். மனைவி அக்ஷராவைக் காப்பாற்ற அவர்கள் சொன்னபடி விக்ரமை மருத்துவமனையிலிருந்து வெளியில் அழைத்து வருகிறார் அபிஹாசன். விக்ரமின் ஆக்சிடென்ட் கேசை விசாரிப்பதில் மலேசிய போலீசின் இரண்டு உயரதிகாரிகளுக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது. அவர்கள் இருவருமே விக்ரம் தப்பித்ததை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நரைத்த தாடியுடன் நடுத்தவர வயது தோற்றத்தில் விக்ரம். அண்டர்கவர் ஆபீசர், டபுள் ஏஜென்ட் என விக்ரம் பற்றி பல தகவல்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர் என்னவாக இருக்கிறார், எதற்கு என்னென்னமோ செய்கிறார் என்பதை நம்மால் தொடரமுடியவில்லை. விக்ரம் யார் என்பது பற்றி நமக்கு முதலிலேயே ஒரு சரியான, தெளிவான அறிமுகத்தைக் கொடுத்திருந்தால் அது படத்தைப் புரிந்து பார்ப்பதற்கு வசதியாக இருந்திருக்கும். வழக்கம் போல் சின்னச் சின்னக் காட்சிகளிலும் நடிப்பின் நுணுக்கங்களை அட்டகாசமாய் வெளிப்படுத்துகிறார் விக்ரம். ஆனால், அவர் பேசுவதும் குறைவு, அவருடைய ஆக்ஷனும் படத்தில் குறைவு. படம் முடிந்து யோசித்தால் படத்தில் விக்ரம் ஒரு சிறப்புத் தோற்றத்தில்தான் நடித்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது.

படத்தின் கதையே அபிஹாசன், அக்ஷராஹாசன் தம்பதியினைரைச் சுற்றித்தான் நகர்கிறது. அவர்களுக்கு ஒரு அழகான டூயட் வேறு சேர்த்திருக்கிறார் இயக்குனர். இருவரும் தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்ள ஒரு காட்சி, சண்டையிட்டுக் கொள்ள ஒரு காட்சி, அடுத்த காட்சியிலேயே அக்ஷரா கடத்தப்படுகிறார், அபி மிரட்டப்படுகிறார். அக்ஷராவுக்கும் படத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு குறைவுதான். அபிஹாசன் தான் படத்தின் நாயகன் எனத் தோன்றுகிறது. அவரும் மாடியிலிருந்து குதித்து ஆக்ஷனெல்லாம் செய்கிறார். ஆனால், அவை எதையும் நம்ப முடியவில்லை. ஒரு அப்பாவி டாக்டர், போலீசை இப்படி ஓடவிடுவாரா என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன.

படத்தில் அந்த கேள்விகளுடன் மேலும் சில கேள்விகளும் கேட்கத் தோன்றுகிறது. போலீஸ் தலைமை அலுவலகத்திற்குள் சர்வ சாதாரணமாய் நுழைந்து விக்ரம் ஒரு பென் டிரைவ்வைத் தேடுகிறார். அபிஹாசன் அவரது மனைவி அக்ஷராவைத் தேடுகிறார். மலேசிய தெருக்களில் நடக்கும் சிறு குற்றங்களைச் செய்பவர்களை சிசிடிவி காமிரா மூலம் கண்டுபிடித்து உடனே அழைத்து வரும் மலேசிய போலீஸ், அவர்கள் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த, போலீஸ் தேடும் குற்றவாளிகளான விக்ரம், அபி ஆகியோர் நுழைந்ததை சிசிடிவி காமிரா மூலம் பார்க்கவே மாட்டார்களா?. விக்ரமை போலீஸ் துரத்தும் அந்த சேசிங் காட்சியும், அபியை போலீஸ் ஓடியே விரட்டும் காட்சியும் போய்க் கொண்டேயிருக்கிறது.

மற்ற கதாபாத்திரங்களில் மலேசிய போலீஸ் ஆக நடித்திருக்கும் அந்த பெண் அதிகாரியும், ஆண் அதிகாரியும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். இன்னொரு ஜுனியர் அதிகாரி, அக்ஷராவைத் தற்கொலை செய்ய வைக்க முயற்சிக்கும் அந்தக் காட்சி போலீஸ் அராஜகத்தின் உச்சம்.

ஜிப்ரான் பின்னணி இசை சிறப்பு. வேறெதுவும் தேவையில்லை... பாடல் வசீகரிக்கிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் படத்தை ஹாலிவுட் படம் அளவிற்கு காட்ட வேண்டும் என முயற்சித்திருக்கிறார்.

இரண்டு மணி நேரத்திற்குள் படத்தை முடித்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். இடைவேளை வரை படத்தில் பெரிதாக எந்தக் காட்சியும் ஈர்க்கவில்லை. இடைவேளையும் வெகு சீக்கிரமே வந்தது போல் ஒரு உணர்வு. இடைவேளைக்குப் பின் விக்ரமின் ஆக்ஷன் நம்மை அசத்தும் என எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

கடாரம்கொண்டான் - ராஜா அல்ல இளவசரன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • Arul - Boston,யூ.எஸ்.ஏ

  Point Blank movie is far better than Kadaram Kondan, and changed Vikram style like Frank Grillo.

 • Arul - Boston,யூ.எஸ்.ஏ

  They copied Point Blank movie, but it's far better than Kadaram Kondan. And they tried to put makeup to Vikram like Frank Grillo.

 • Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா

  படம் சரியான குப்பை. மஹா வேஸ்ட் ஒரு சினிமாவிற்கு ஜீவ சக்தியான கதையே இல்லாமல் எதோ ஒன்றை சினிமா என்று பெயர் பண்ணியிருக்கிறார்கள்.

 • Ramkumar Valmikanathan - Chandler,இந்தியா

  என்ன எடிட்டர் சார்..... கடாரம் கொண்டான் படத்துக்கு விமர்சனம் எழுத சொன்னா .. நீங்க Point Blank படத்துக்கு விமர்சனம் எழுதி இருக்கீங்க ... அப்புறம் netflix ல அந்த படத்த பாத்து... Anti -indian ன்னு பேர் வாங்கி .. தேவையா எங்களுக்கு...

 • R.Subramanian - Chennai,இந்தியா

  ஆங்கில படத்தை போல் எடுக்க முயற்சித்து இருக்கிறார்கள் அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள், கதை கூட ஆங்கில படங்களை போலவே உள்ளது (பெரிதாக ஒன்றும் இருக்காது ஆனால் விறுவிறுப்பு இருக்கும்) இந்த படத்தில் செண்டிமெண்ட் கொஞ்சம் சேர்த்து இருக்கிறார்கள்.

 • Rajesh Pb -

  just saw point blank movie in Netflix..almost similarin Tamilnadu none have imagination

 • nizamudin - trichy,இந்தியா

  வேண்டாம் ஒரு கருத்து போதும்

 • nizamudin - trichy,இந்தியா

  கமலா ஹசன் படம் இது அதான் நிறைய குறைகள் அரசியல் ரீதியாக தெரிகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement