dinamalar telegram
Advertisement

தோழர் வெங்கடேசன்

Share

நடிப்பு - அரிசங்கர், மோனிகா சின்னகொட்லா
தயாரிப்பு - காலா பிலிம்ஸ்
இயக்கம் - மகாசிவன்
இசை - சகிஷ்னா
வெளியான தேதி - 12 ஜுலை 2019
நேரம் - 1 மணி நேரம் 51 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் இன்னும் சொல்லப்படாத கதைகள் எவ்வளவோ இருக்கின்றன என்பதை இந்தப்படம் பார்க்கும் போது யோசிக்க முடிகிறது. இதுவரையிலும் இப்படி ஒரு கதையை, பிரச்சினையை தமிழ் சினிமாவில் யாரும் சொன்னதில்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.

இயக்குனர் மகாசிவன் ஒரு யதார்த்தமான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதோடு தாமதமாகக் கிடைக்கும் நீதி எந்த விதத்திலும் பயன் தராது, பாதிப்பைத்தான் தரும் என்பதையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சோடா கம்பெனி வைத்து நடத்தி வருபவர் அரிசங்கர். அவர் தினமும் இரவு சாப்பிடும் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் ஷர்மிளா இறந்து போனதால், தனியாக நிற்கும் ஷர்மிளாவின் மகள் மோனிகா சின்னகொட்லா-வை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஒரு நாள் வெளியில் செல்லும் போது அரசுப் பேருந்து மோதி அரிசங்கரின் இரு கைகளும் போய்விடுகிறது. கை இழந்த நிலையில் இருக்கும் அவருக்கு மோனிகா எல்லாமுமாக இருக்கிறார். தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என போக்குவரத்துக் கழகத்தின் மீது வழக்கு தொடுக்கிறார் அரிசங்கர். அவருக்கு நியாயம் கிடைத்ததா, நீதி கிடைத்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படம்.

வெங்கடேசன் ஆக அறிமுக நாயகன் அரிசங்கர். அறிமுகப்படத்திலேயே ஆச்சரியப்படும் அளவிற்கு அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். கிராமத்தில் சாதாரண வீடு, ஒரு நாளைக்கு 200, 300 ரூபாய்தான் வருமானம். யாரும் பெண் கொடுக்காததால் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை. இருந்தாலும் ஒரு முதலாளியாகவே இருக்க வேண்டும் என்ற வைராக்கியம். அப்படிப்பட்ட ஒரு கிராமத்து இளைஞனை கண்முன் நிறுத்தியிருக்கிறார் அரிசங்கர். கை இழந்த நிலையிலும் தனக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று போராடும் ஒரு அப்பாவி. நாட்டில் அப்பாவிகளுக்குக் கிடைக்கும் தாமதமான நீதி ஏழை மக்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை இவரது கதாபாத்திரம் மூலம் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர்.

அதிகமாகப் பேசாமலேயே அரிசங்கர் மீதுள்ள காதலை பல்வேறு விதங்களில் காட்டுபவராக மோனிகா சின்னகொட்லா. சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட இயல்பாய் வெளிப்படுத்துகிறார். அரிசங்கருக்கு கை போனாலும் இவர் சோடா சுற்றி, அதை சைக்கிளில் வைத்து எடுத்துக் கொண்டு உழைக்கும் பெண்ணாக மனதில் இடம் பிடிக்கிறார்.

இவர்கள் இருவரைச் சுற்றித்தான் படம் முழுமையாக நகர்கிறது. ஆரம்பத்தில் அரிசங்கர் நண்பர்களாக இருவர் வருகிறார்கள். ஆனால், அவர்கள் பேசிக் கொள்ளும் போது ஓய்..ஓய்.. என்று சொல்லிக் கொள்வது செயற்கைத்தனமாய் இருக்கிறது. கவுன்சிலர், எஸ்ஐ, போலீஸ் ரைட்டர், பக்கத்து வீட்டுக்காரர், பஸ்ஸை ஓட்டுபவர் என மற்ற சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிப்பவர்களைக் கூட பார்த்துப் பார்த்து தேர்வு செய்து யதார்த்தமாய் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

சகிஷ்னா இசையமைத்திருக்கிறார். பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் ரசிக்க வைக்க முயல்கிறார். தமிழ் சினிமாவில் அதிகம் இடம் பெறாத காஞ்சிபுரத்தை கதைக்களமாக வைத்திருக்கிறார் இயக்குனர். அதை தன் காமிராவில் இயல்பாய் பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேத் செல்வம்.

இடைவேளை வரை காதல், நட்பு, கலகலப்பு என நகரும் கதை, பின் சிக்கல், வழக்கு, போராட்டம் என கொஞ்சம் தள்ளாடுகிறது. ஆனாலும், நமது நாட்டில் ஒரு சாமானியன் நீதிக்காக எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இயக்குனர். கிளைமாக்சை அப்படி முடித்திருக்க வேண்டாம்.

புது கதைக்களம், புது கதை என்பதால் ரசிக்க முடிகிறது. படம் முடிந்த பின் அரசுப் பேருந்துகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிக் காட்டுவது கண்ணீர் வரவழைக்கிறது.

தோழர் வெங்கடேசன் - ரசிகர்கள் கை கொடுக்கலாம்

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement