dinamalar telegram
Advertisement

கேப்மாரி

Share

நடிப்பு - ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யா
தயாரிப்பு - கிரின் சிக்னல்
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
வெளியான தேதி - 13 டிசம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - அதற்குத் தகுதியில்லாத ஒரு படம்

தமிழ் சினிமாவின் சாபக் கேடாக எப்போதாவது ஒரு முறை மிக மோசமான, கீழ்த்தரமான படங்கள் வெளிவரும். இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு நல்ல படத்தைக் கொடுத்து, எப்படியாவது நாமும் பேசப்பட மாட்டோமா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர், முன்னணி ஹீரோ விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடமிருந்து இப்படி ஒரு படத்தைக் கொடுத்து இன்றைய இளம் தலைமுறையை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் காட்சிகளை வைத்து இப்படிப்பட்ட கேவலமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு முன்புதான் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலரைப் பார்க்க நேர்ந்தது. இந்த மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் சொல்லத் துடிக்கும் மணிகண்டன் போன்ற இன்னும் சில இயக்குனர்களுக்கு மத்தியில் கேப்மாரி போன்ற படத்தைக் கொடுத்து தன்னையும் ஒரு இயக்குனர் என எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்லிக் கொண்டிருந்தால் அவரை உண்மையான சினிமா ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே படத்தின் டைட்டிலுக்கு முன்பாகவே நன்றி - காமசூத்ரா புத்தகம் என போட்ட முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். படுக்கையறைக் காட்சிகளைக் கூட ஆபாசமில்லாமல், விரசமில்லாமல் சொல்ல முடியும். அதற்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம். ஆனால், இந்தப் படத்தில் காட்டியிருக்கும் படுக்கையறைக் காட்சிகளை வைத்து ஏ படம் என பெரிதாக போஸ்டரில் போட்டு, ஒரு காலத்தில் பல ஊர்களில் காலை காட்சிகளில் சில மலையாளத் திரைப்படங்களைத் திரையிட்டது போல திரையிட்டால் நல்ல வசூலைக் குவிக்கலாம்.

எந்த விதத்தில் எல்லாம் ஒரு காட்சியை ஆபாசமாக கேமிரா ஆங்கிள் மூலம் காட்ட முடியும் என்பதை ஒளிப்பதிவாளர் ஜீவன், பல படங்களைப் பார்த்து கற்றுத் தேர்ந்திருப்பார் போலிருக்கிறது. தமிழில் சில படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் இவர் என்பதை நினைக்கும் போது...............

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெய், ரயிலில் நள்ளிரவு பயணத்தில் கூட பயணிக்கும் வைபவி சாண்டில்யாவுக்கும் பீர் கொடுத்து போதையாக்கி உடல் ரீதியாக இணைகிறார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் இருவரும் உடனேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். திருமணம் நடந்து தனி வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஜெய் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதுல்யாவுக்கு, ஜெய் மீது ஒரு தலைக் காதல். அது ஜெய்யின் திருமணத்திற்குப் பிறகும் தொடர்கிறது. ஒரு நாள் அதுல்யாவை வீட்டில் விடும் போது இருவரும் வீட்டில் பீர் குடித்து போதையாகி உடலால் இணைகிறார்கள். அதனால், தமிழ் சினிமா வழக்கப்படி அதுல்யா கர்ப்பமாகிறார். ஜெய், வைபவி இருக்கும் வீட்டிற்கே வருகிறார். ஒரே வீட்டில் இருவருடனும் வாழ்க்கை நடத்துகிறார் ஜெய். அடிக்கடி பிரச்சினைகள் வர அவர்கள் மூவரின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படம் ஜெய், அதுல்யா ஆகியோரை நம்பி எடுக்கப்படவில்லை. வைபவியின் கிளாமரை நம்பி மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. அவரும் படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வரை எந்த வஞ்சனையும் இல்லாமல் மிக தாரளமாக நடித்திருக்கிறார்.

சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த ஜெய் தானா இவர் என்பதை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. வைபவிக்கு முன்பெல்லாம் அதுல்யா தேறவில்லை.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் சத்யன், தேவதர்ஷினி, சித்தார்த் விபின் என அனைவருமே அடிக்கடி இரட்டை அர்த்தங்களில் பேசுகிறார்கள்.

சித்தார்த் விபின் தான் படத்தின் இசையமைப்பாளர். ஒரு பாடலும் ரசிக்கும்படி இல்லை. படுக்கையறை காட்சிகளுக்கு மட்டுமே பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

சரி, படத்தின் முடிவிலாவது ஏதோ ஒரு கருத்தைச் சொல்லி, இதுவரை சொன்னதற்கெல்லாம் ஒரு விமோசனத்தைத் தேடிக் கொள்வார்கள் என்று பார்த்தால், அதையெல்லாம் செய்துவிடுவோமா என படத்தை முடித்திருக்கிறார்கள்.

கேப்மாரி - குப்பை மாரி

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement