dinamalar telegram
Advertisement

மோசடி

Share

நடிப்பு - விஜு ஐயப்பசாமி, பல்லவி டோரா
தயாரிப்பு - ஜேசிஎஸ் மூவீஸ்
இயக்கம் - கே. ஜெகதீசன்
இசை - ஷாஜகான்
வெளியான தேதி - 21 ஜுன் 2019
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

2016ம் ஆண்டில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, அதற்குப் பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டுக்கள், 2000 ரூபாய் நோட்டுக்கள் வர உள்ளது என இந்திய அரசு அறிவித்தது.

அதனால், பலரும் தாங்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணங்களை உடனடியாக மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி, அதற்குப் பதிலாக புதிய நோட்டுக்களைப் பெற கூட்டம் முண்டியடித்தது.

கோடி கோடியாக பணம் வைத்திருந்தவர்கள் கமிஷனுக்கு ஆட்களைப் பிடித்து அவர்களிடம் தங்கள் கருப்புப் பணங்களைக் கொடுத்து மாற்ற வைத்தார்கள். அந்தக் காலக்கெடுவுக்குள் பணங்களை மாற்ற பகீரப் பிரயத்தனம் செய்தார்கள்.

அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைதான் இந்த 'மோசடி'. இயக்குனர் ஜெகதீசன் நல்ல கதையைத்தான் யோசித்திருக்கிறார். ஆனால், அதை சினிமாவாக உருவாக்குவதில் 'மேக்கிங்'கில் கோட்டை விட்டிருக்கிறார்.

விஜு ஐயப்பசாமி மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து சில போலியான விஷயங்களைச் செய்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள். விஜு தான் எதற்காக இப்படி ஏமாற்று வேலையில் இறங்கினேன் எனச் சொல்கிறார். அதற்கான காரணம் பிளாஷ்பேக். விஜு ஏன் இதைச் செய்தார், ஏமாற்று வழக்கிலிருந்து அவரும், அவரது நண்பர்களும் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழில் 2014ம் ஆண்டில் வந்த 'சதுரங்க வேட்டை' படத்தை இயக்குனர் ஜெகதீசன் பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அந்தப் படத்தில் இருந்த ஏமாற்று வேலைகளைப் போன்றே இந்தப் படத்திலும் இடைவேளை வரை காட்சிகளை வைத்திருக்கிறார்.

புதையல், கருப்பு வைரம் என பூனை, சங்கு, பண இரட்டிப்பு என பல ஏமாற்று காட்சிகள் படத்தில் உள்ளன. இடைவேளைக்குப் பின் பணமதிப்பிழப்பு சமயத்தில் கருப்புப் பணத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பது சுவாரசியமாக உள்ளது.

படத்தில் நடித்திருக்கும் பலரும் மலையாள நட்சத்திரங்கள் போலிருக்கிறது. அனைவரும் மலையாள வாடையுடன் தமிழ் பேசுகிறார்கள். முழுக் கதையும் சேலத்தில் நடந்தாலும் கேரளாவில் நடப்பதைப் போன்ற உணர்வே ஏற்படுகிறது.

விஜு ஐயப்பசாமி தான் படத்தின் ஹீரோ. விதவிதமாக கெட்டப் போட்டு ஏமாற்றுக்காரராக இடைவேளை வரையிலும், பின்னர் அமைச்சரின் நம்பிக்கையான உதவியாளராக இடைவேளைக்குப் பின்னும் அவரது கதாபாத்தில் முடிந்தவரையில் நடிக்க முயற்சித்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் அவருக்கு ஒரு காதலி, அமைச்சர் தம்பியால் ஏமாற்றம் என கதை கொஞ்சம் தடம் மாறுகிறது.

இவரைத் தவிர படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவருமே புதுமுகங்கள் போலிருக்கிறது. ஒவ்வொருவரும் வசனத்தை ஒப்புவிக்கிறார்கள். ஒருவர் கூட கதாபாத்திரத்துடன் ஒட்டவில்லை. அமைச்சர், அவரது தம்பியாக நடித்திருப்பவர் மட்டுமே ஓரளவிற்குப் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு என டெக்கிக்கல் விஷயங்கள் எதுவுமே படத்தில் சிறப்பாக அமையவில்லை.

கடைசியில் கருப்புப் பண எதிர்ப்பு, லஞ்சம், ஊழல், டிஜிட்டல் பணம் என எதிர்கால இந்தியா எப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும் என முடித்திருக்கிறார்கள். அதற்காக மட்டும் கொஞ்சம் பாராட்டலாம்.

மோசடி - ஏமாற்றுக்காரன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement