dinamalar telegram
Advertisement

வெண்ணிலா கபடி குழு 2

Share

நடிப்பு - விக்ராந்த், பசுபதி, அர்த்தனா பினு
தயாரிப்பு - சாய் அற்புதம் சினிமாஸ்
இயக்கம் - செல்வசேகரன்
இசை - செல்வகணேஷ்
வெளியான தேதி - 12 ஜுலை 2019
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2/5

2019ம் ஆண்டில் வெளிவந்துள்ள மற்றுமொரு இரண்டாம் பாகத் திரைப்படம். முதல் பாகப் படங்கள் தனி விதத்தில் முத்திரை பதித்த நிலையில் எதற்காக இப்படி இரண்டாம் பாகப் படங்களை எடுத்து முதல் பாகத்தின் மரியாதையை குறைக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

இயக்குனர் செல்வசேகரன் கதைக்கான பின்னணி, கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் ஒரு யதார்த்தம் இழையோட இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், திருப்புமுனையான அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது.

குற்றாலம் அருகில் ஒரு கிராமத்தில் அரசு பஸ் ஓட்டுனராக இருக்கிறார் பசுபதி. கபடி விளையாட்டின் மீது அவ்வளவு ஆர்வம் கொண்டவர். வேலையை விட்டு கூட எங்கு கபடி நடக்கிறதோ அங்கு சென்றுவிடுவார். தொடர்ந்து அப்படி சென்றதால் வேலையை விட்டு சஸ்பென்ட் செய்யப்படுகிறார். சஸ்பென்ட் ஆகி வீட்டுக்கு வரும் அப்பா பசுபதியை, சற்றே ஏளனமாகப் பேசுகிறார் மகன் விக்ராந்த். மகனைக் கண்டிக்கும் அம்மா அனுபமா, பசுபதி யார் என்பதை மகனுக்குப் புரிய வைக்கிறார். திறமையான கபடி விளையாட்டு வீரரான பசுபதி, வீண் பழியால் பழனிக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து வெளியேறி குற்றாலத்தில் வந்து செட்டிலாகியுள்ளார். கபடி என்றாலே பிடிக்காத விக்ராந்த், அப்பாவுக்குத் தெரியாமல், சென்னை செல்வதாகச் சொல்லிவிட்டு, சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி பெறுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் நாயகன் விக்ராந்த்தா அல்லது பசுபதியா என்ற சந்தேகம் வருகிறது. படத்தின் கதை பசுபதியை மையப்படுத்திதான் நகர்கிறது. அதற்கேற்றபடி ஒரு காட்சியில் விக்ராந்த்தை சிலர் கொல்ல வர, அவர்களைக் கூட பசுபதிதான் காப்பாற்றுகிறார்.

இடைவேளைக்குப் பின்னர்தான் படம் விக்ராந்த்தைச் சுற்றி நகர்கிறது. கிராமத்து இளைஞராக கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாகச் செய்துள்ளார் விக்ராந்த். இடைவேளை வரை காதல், காதல் என அர்த்தனா பினு பின்னாடி சுற்றுகிறார். பின்னர் கபடி, கபடி என கணக்கம்பட்டி கிராமத்தைச் சுற்றுகிறார்.

கபடி விளையாட்டின் மீது வெறியராக நடித்திருக்கிறார் பசுபதி. குடும்பத்தை நேசிக்கும் அளவிற்கு கபடியையும் நேசிக்கிறார். சமயங்களில் அதைவிட அதிகமாகவே நேசிக்கிறார். இருந்தாலும் தன் குடும்பத்தினர் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறார் என்பதைப் புரிய வைக்கும் காட்சியில் கண் கலங்க வைக்கிறார். அப்படிப்பட்ட பாசமான மனிதருக்கு கிளைமாக்சில் அப்படி ஒரு முடிவைக் கொடுத்திருக்கக் கூடாது இயக்குனர்.

அர்த்தனா பினுவுக்கு அதிக வேலையில்லை. பாவாடை, தாவணியில் பாந்தமாய் வந்து போகிறார். விக்ராந்தைப் பார்த்து சிரிப்பதும், கொஞ்சம் கேலியாகப் பேசுவதையும் தவிர அவருக்கு வேலையில்லை.

அர்த்தனாவின் அப்பாவாக ரவி மரியா. எதற்குத் இப்படி கத்தி நடிப்பாரோ தெரியவில்லை. இடைவேளைக்குப் பின்னர்தான் சூரி வருகிறார். இருந்தாலும் ஒரு காட்சியில் கூட சிரிக்க வைக்கவில்லை. கிஷோர் வழக்கம் போல அவரது கதாபாத்திரத்தில் நிறைவு.

குற்றாலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அழகை ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி அழகாக படம் பிடித்திருக்கிறார். சாலைகளின் அழகு கூட ரசிக்க வைக்கிறது. செல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.

இடைவேளைக்குப் பின் படம் இப்படித்தான் போகப் போகிறது என்று புரிந்துவிடுகிறது. கொஞ்சம் பரபரப்பு, விறுவிறுப்பு என வித்தியாசமாக யோசித்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

வெண்ணிலா கபடி குழு 2 - நிலா அல்ல பிறை

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement