Advertisement

இருபத்தியொன்னாம் நூற்றாண்டு (மலையாளம்)

இருபத்தியொன்னாம் நூற்றாண்டு (மலையாளம்) - விமர்சனம்

நடிகர்கள் : பிரணவ் மோகன்லால், சாயா டேவிட், மனோஜ் கே ஜெயன் மற்றும் பலர்

இசை : கோபிசுந்தர்

இயக்கம் : அருண்கோபி

முதல் படத்திலேயே நூறுகோடி வசூலை அள்ளிய மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்துள்ள இரண்டாவது படம் மற்றும் திலீப்பை வைத்து ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அருண் கோபியின் இரண்டாவது படம் என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் இருபத்தியொன்னாம் நூற்றாண்டு. இந்தப் படம் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டி உள்ளதா..? பார்க்கலாம்.

கோவாவில் கெஸ்ட் ஹவுஸ் நடத்தி வருகின்றனர் மனோஜ் கே.ஜெயன் மற்றும் அவரது மகன் பிரணவ்.. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தற்செயலாக நாயகி சோயாவை காப்பாற்றி அழைத்து வந்து தனது கெஸ்ட் ஹவுசில் தங்க வைக்கிறார் பிரணவ். அப்படியே கொஞ்ச நாட்களில் சாயாவின் மேல் பிரணவுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் அதை வெளிப்படுத்திய மறுநாளே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போய்விடுகிறார் சாயா. தந்தையின் ஆலோசனைப்படி சாயாவின் முகவரியை வைத்துக்கொண்டு கேரளாவிற்கு அவரை தேடி நண்பனுடன் செல்கிறார் பிரணவ்.. சென்ற இடத்தில் சாயா ஒரு கோடீஸ்வரர் மகள் என்பதும் அதேசமயம் ஒரு சர்ச்சில் கன்னியாஸ்திரியாக இருக்கிறார் என்பதும் தெரியவர அதிர்ச்சியாகிறார் பிரணவ்

கன்னியாஸ்திரியாக மாறிய சாயா, பின் எதற்காக கோவாவில் வந்து அவ்வளவு ஜாலியாக ஆடிப்பாடி சுற்றினார்..? பிரணவ் மீது காதல் இருந்தும் எதற்காக அப்படி சொல்லாமல் கொள்ளாமல் கோவாவை விட்டு ஓடினார்..? அவர் கன்னியாஸ்திரியாக மாற காரணம் என்ன..? பிரணவால் சாயாவின் காதலை மீண்டும் பெற முடிந்ததா என்கிற பல கேள்விகளுக்கு மீதி கதை விடை சொல்கிறது.

முதல் படத்தில் ஆக்சன் ரோல் என்பதால் பெரிய அளவில் நடிப்பை வெளிப்படுத்தும் வேலை இல்லாமல் தப்பித்த பிரணவிற்கு இந்த படம் சரியான சோதனை வைத்துள்ளது. காதல், சென்டிமென்ட், சோகம் கலவையான பயிற்சி கொடுத்து, அவரை கஷ்டப்படுத்தி இருப்பது நன்றாகவே தெரிகிறது.. அவரும் ஓரளவு சமாளித்து நடித்துள்ளார்.. அடுத்தடுத்த படங்களில் பிக்கப் செய்வார் என நம்பலாம்.

கதாநாயகி சாயா டேவிட் முதல் பாதி முழுவதும் துறுதுறு பெண்ணாக நம்மை வசீகரித்து சந்தொஷப்படுத்துபவர், அப்படியே இரண்டாம் பாதியில் நமது மொத்த எரிச்சலையும் வாங்கிக்கொள்ளும் வித்தியாசமான விதமான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்.

நீண்ட நாளைக்கு பின்பு வழக்கமான அதே கலாட்டாவான கேரக்டரில் மனோஜ் கே.ஜெயனை பார்க்க முடிவது ஆறுதல். பிரணவின் நண்பராக படம் முழுவதும் லொடலொடவென பேசிக்கொண்டு வரும் அந்த நண்பர் கேரக்டர் கொஞ்சம் ஓவர் டோஸ் தான். கிளைமாக்ஸுக்கு சற்று முன்பு என்ட்ரி கொடுக்கும் கோகுல் சுரேஷ் (சுரேஷ்கோபியின் மகன்) பக்கா பெர்பார்மன்ஸ் கொடுத்திருக்கிறார்..

தங்களது முதல் படத்திலேயே மூன்றாம் நான்காம் படம் பண்ணும் பக்குவத்துடன் செம ஹிட் கொடுத்த அறிமுக ஹீரோ பிரணவ் மோகன்லாலும், பிரமிக்க வைக்கும் திரைக்கதையுடன் நம்மை அசர வைத்த இயக்குனர் அருண்கோபியும், இந்த படத்தை ஏதோ தங்களது முதல் படம் போல ஜஸ்ட் லைக் தட் ரொம்பவே சாதாரண ஒரு படமாக கொடுத்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. எதற்காக இந்த இருவரும் தமது நிலையிலிருந்து இப்படி ஓரிரு படிகள் கீழே இறங்கினார்கள் என்பது புரியாத புதிர்.

அதேபோல ஆக்சன் காட்சிகள் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் என டைட்டிலை பார்த்ததும் நிமிர்ந்து உட்காரும் நம்மை படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தலையில் தட்டி உட்கார வைத்திருக்கிறது மிக மெதுவாக நகரும் வழக்கமான திரைக்கதை.. படத்தில் மன்னிக்கவே முடியாத இரண்டு விஷயங்கள் என குறிப்பிட்டால், ஒன்று படத்தின் துவக்கத்திலேயே மிக பூதாகரமாக காட்டப்படும் பிரணவின் தந்தையின் கடன் பிரச்சனை..

அதற்கடுத்ததாக பிரணவின் தங்கையை சீண்டும் கும்பலுக்கு பிரணவ் பதிலடி கொடுப்பதும் அதைத்தொடர்ந்து அவர்கள் பிரணவை தேடுவது.. இந்த இரண்டு விஷயங்களையும் இடைவேளைக்குப்பின் அம்போவென விட்டுவிட்டு மூன்றாவது விஷயத்திற்குள் நுழைந்துவிட்டது எந்தவித்ததில் நியாயம்..? கிளைமாக்ஸ் சேசிங்கும் அந்த ரயில் சண்டைக்காட்சியும் தெளுங்குப்படத்திற்கு சவால் விடும் வகையில் இருப்பது சோகம். இறுதியில் இந்த படத்திற்கு இருபத்தியொன்னாம் நூற்றாண்டு என எதற்காக டைட்டில் வைத்தார்கள் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்..

மொத்தத்தில் இந்த இருவரின் மூன்றாவது படம் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக இருக்கும் என இப்போது இந்த எதிர்பார்ப்போம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement