dinamalar telegram
Advertisement

கே 13

Share

நடிப்பு - அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்
தயாரிப்பு - எஸ்பி சினிமாஸ்
இயக்கம் - பரத் நீலகண்டன்
இசை - சாம் சிஎஸ்
வெளியான தேதி - 3 மே 2019
நேரம் - 1 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 2/5

வழக்கமான கதைகளிலிருந்து விலகி படமெடுக்க வேண்டும் என்றால் உடனடியாக நமது இயக்குனர்கள் தேர்வு செய்யும் கதைக்களம் ஒன்று த்ரில்லர் கதைகளாக இருக்கும் மற்றொன்று பேய்க் கதைகளாக இருக்கும்.

பேய்க் கதைகள் நிறையவே வந்து ரசிகர்களை பயமுறுத்திவிட்டதால் பலரின் பார்வையும் த்ரில்லர் கதைகள் மீதுதான் இருக்கிறது. என்ன மாதிரியான கதையைத் தேர்வு செய்து படமாக எடுத்தாலும் இந்த அந்த ஹாலிவுட் படத்தின் கதை, இந்த கொரியன் படத்தின் கதை என ரசிகர்கள் சில நாட்களில் கண்டுபிடித்து சொல்லிவிடுவார்கள்.

ஒரு வீட்டுக்குள் நடக்கும் மரணம், அதில் சிக்கிக் கொள்ளும் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. இடைவேளை வரை எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் நகர்த்தியிருக்கும் அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன், இடைவேளைக்குப் பின்தான் கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் திருப்பம் என திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், 'ஏ' சென்டர் ரசிகர்களையும் குறிப்பிட்ட ரசிகர்களைத்தான் இந்தப் படம் ரசிக்க வைக்கும். பி அன்ட் சி ரசிகர்களுக்குப் புரிந்தால் பெரிய விஷயம்.

ஒரு ஹோட்டர்ல் பாரில் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தைச் சந்திக்கிறார் அருள்நிதி. இருவரும் முழு போதையில் கிளம்பி ஷ்ரத்தாவின் வீட்டுக்கு வருகிறார்கள். விடியும் போது பார்த்தால் அருள்நிதி ஒரு சேரில் கட்டப்பட்டு இருக்கிறார். அருகில் ஷ்ரத்தா கையில் கத்தி வெட்டுடன் உயிரிழந்து கிடக்கிறார். ஷ்ரத்தாவின் பிளாட் ஆன கே 13 என்ற வீட்டில் நடக்கும் அந்த மர்ம மரண சம்பவத்திலிருந்து அருள்நிதி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

அருள்நிதிக்கு படம் முழுவதும் ஒரே விதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். பயம், விதவிதமாக பயப்படுவதைத் தவிர வேறு எந்த எக்ஸ்பிரஷனும் அந்தக் கதாபாத்திரத்திக்கும் தேவைப்படவில்லை. கிளைமாக்சில் அருள்நிதியின் உண்மையான குணம் என்ன என்பது தெரிய வரும் போது அது அதிர்ச்சிகரமாக இல்லை. ஏதோ, படத்துக்குள் படம் போலிருக்கிறது எதுவும் புரியாமலே ரசிகர்கள் எழுந்து போகிறார்கள்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் பெரும் காட்சியில் 'செத்த பிணமாக' மட்டுமே நடித்திருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் அருள்நிதியை பாரில் பார்க்கும் போது மட்டும்தான் அவர் நடிப்பதற்கு சில காட்சிகளை சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

மற்ற நடிகர்களுக்குப் படத்தில் வேலையே இல்லை. யோகி பாபு, ஒரே ஒரு கட்சியில் கொரியர் டெலிவரி செய்துவிட்டுப் போகிறார். மதுமிதாவும் அதே காட்சியில் வந்து ஒரு வரி வசனம் பேசிவிட்டுச் செல்கிறார். விஜய் சேதுபதி படங்களில் அடிக்கடி வந்து தலைகாட்டும் காயத்ரியும் இந்தப் படத்தில் வழக்கம் போல வந்து தலை காட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

சாம் சி.எஸ். முடிந்தவரையில் பின்னணி இசையில் கொஞ்சம் மிரட்சியைக் காட்ட முயற்சித்திருக்கிறார். ஒரு வீட்டுக்குள்ளேயே முடிந்த வரையில் காட்சிகளில் வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங்.

ஒரு படத்தை நமக்குப் புரிவது போல் எடுப்பதைவிட ரசிகர்களுக்குப் புரிவது போல் எடுப்பதுதான் சிறப்பு. ஆரம்பத்திலிருந்து அதுதான் படத்தின் மையக் கதை என்று நினைத்து பார்க்க ஆரம்பித்தால், அது படத்தின் கதையல்ல, படத்துக்குள் இருக்கும் படத்தின் கதை என குழப்பியடிக்கிறார் இயக்குனர். அதனால், முதலில் பார்த்த காட்சிகளுடன் கிளைமாக்சில் ஒன்ற முடியாமல் போய்விடுகிறது. ஒரு குறும்படத்திற்கு உண்டான விஷயத்தை கொஞ்சம் நீளம் குறைந்த திரைப்படமாக எடுத்து முடித்திருக்கிறார்கள்.

கே - 13 - ஓகே இல்லை...

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement