Advertisement

அருவம்

Share

நடிப்பு - சித்தார்த், கேத்தரின் தெரேசா
தயாரிப்பு - டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் - சாய் ஷேகர்
வெளியான தேதி - 11 அக்டோபர் 2019
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடங்கள்
ரேட்டிங் - 2.25/5

சமூக அக்கறையுடன் ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நாம் தினமும் சாப்பிடும் உணவில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ கலப்படங்கள் இருக்கின்றன. அது பற்றி எல்லாம் தெரிந்த கொள்ள முடியாமலே அவற்றை நாம் சாப்பிட்டு வருகிறோம்.

இயற்கையாக விளையும் பழங்கள், பால், மற்ற உணவுப் பொருட்கள் என அனைத்திலும் கலப்படம் இருக்கத்தான் செய்கிறது. அவற்றைக் கண்டுபிடித்து தவறு செய்பவர்களுக்கு தண்டனை தரவும், அவற்றைத் தடுக்கவும் அரசாங்கத்திலேயே சில துறைகள் உள்ளன. அவர்கள் உண்மையிலேயே சரியாக செயல்படுகிறார்களா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

அப்படி உணவு கலப்படத்தைப் பற்றிய ஒரு வெளிப்படையான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் சாய் ஷேகர் ஒரு நல்ல கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதேசமயம் சொல்ல வந்த விஷயத்தை படத்தின் மையக் கருவை உடனே சொல்லாமல் என்னென்னமோ சொல்லிவிட்டு பின்னர்தான் கதைக்கே வருகிறார். அதையும் பேய்ப் படமாகக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.

அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் கேத்தரின் தெரேசா. வாசனையோ, நாற்றமோ அதை நுகரும் சக்தி அவருக்கு இல்லை. சமூக சேவையில் அக்கறையுடன் செயல்படுபவர். கேத்தரினைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவரைக் காதலிக்கிறார் சித்தார்த். உணவுப் பாதுகாப்புத் துறையில் அதிகாரியாக இருக்கிறார். முதலில் சித்தார்த்தின் காதலை மறுக்கும் கேத்தரின் பின்னர் அவர் மீது காதல் கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளியில் சிறு விபத்தில் சிக்குகிறார் கேத்தரின். மருத்துவமனையில் இருக்கும் அவருக்கு நுகரும் சக்தி திடீரென வருகிறது. அதற்கடுத்து மத்திய அமைச்சர் ஒருவர், அவருடைய நண்பர் கொல்லப்படுகிறார்கள். அவர்களைக் கொன்றது கேத்தரின் என மத்திய அமைச்சரின் தம்பி கண்டுபிடித்து கேத்தரினைக் கொல்லத் துடிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

காதல் கதையாக ஆரம்பித்து, சமூகக் கதையாக மாறி, பேய்க் கதையாக டிவிஸ்ட் அடித்து பழி வாங்கும் கதையாக முடிவுக்கு வந்து இரண்டாவது பாகத்திற்கும் ஆரம்பம் போட்டு முடிகிறது படம். ஒரு நல்ல ஆக்ஷன் படத்துக்குரிய கதையை பேய்ப் படமாக மாற்றியதால் அதன் சுவாரசியம் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

சித்தார்த், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக, மிகவும் நேர்மையானவராக நடந்து கொள்கிறார். இடைவேளைக்குப் பின்தான் அவர் வேலை சார்ந்த காட்சிகள் படத்தில் வருகின்றன. டீ, தண்ணீர், மருந்து, பால், பருப்பு ஆகியவற்றில் என்னென்ன மாதிரியான கலப்படங்கள் எப்படி எல்லாம் நடக்கின்றன என்பதைக் காட்டும் காட்சிகள் அதிர்ச்சிகரமானவை. சித்தார்த்தின் நேர்மையும், நடவடிக்கையும் அவருக்குப் பொருத்தமாக உள்ளன. கண்டிப்பான அதிகாரியாக மிடுக்குடன் நடித்திருக்கிறார் சித்தார்த்.

அரசு பள்ளி ஆசிரியை ஆக கேத்தரின் தெரேசா. அரசு பள்ளி ஆசிரியைகள் புடவை மட்டும்தான் அணிய வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் கேத்தரின் சுடிதார் உள்ளிட்ட மற்ற ஆடைகளை அணிந்து வருகிறார். சமூக சேவைகளில் சிறந்த ஆர்வம் கொண்ட கதாநாயகி என்பதை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பது. ஜோசியம் பார்க்க கிளியை வைத்து பிழைப்பு நடத்துபவரிடம் சென்று இந்தக் கதாநாயகிகள் வீரம் காட்டுகிறார்கள். அது போல நாயை சங்கிலியில் பிணைத்து வீட்டில் வளர்க்கும் எத்தனையோ ஆயிரம் பேரிடம் சென்று அப்படி வீரம் காட்டுவதில்லை. சுதந்திரமாகத் திரிய கிளிகளுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறதா, நாய்களுக்கு இல்லையா ?. கேத்தரின் முகபாவத்திற்கும் அவருடைய பின்னணி குரலுக்கும் பொருத்தமில்லாமல் தெரிகிறது. முடிந்தவரை தன் கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சித்திருக்கிறார் கேத்தரின்.

மெயின் வில்லனாக கபீர் சிங். பல படங்களில் பார்த்த அதே மாதிரியான வில்லன். மகளிடம் தோழமையாகப் பழகும் அப்பாவாக ஆடுகளம் நரேன். நாயகன் சித்தார்த்தின் நண்பராக சதீஷ் சில காட்சிகளில்.

தமனின் பின்னணி இசை பரவாயில்லை. படத்தில் இரண்டே பாடல்கள்தான். ஒரு முழுமையான டூயட் பாடலையாவது வைத்திருக்கலாம்.

அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடிந்த திரைக்கதை படத்தின் மைனஸ். பேய்ப் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என பார்த்துப் பழகிவிட்டது. நல்ல கருத்தை எடுத்துக் கொண்டு தடம் மாறிவிட்டார்கள்.. சித்தார்த் தான் அருவம் என்ற டிவிஸ்ட்டை மட்டும் இடைவேளை வரை காப்பாற்றியிருக்கிறார்கள்.

அருவம் - அரை மனம்

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement