dinamalar telegram
Advertisement

உத்தரவு மகாராஜா

Share

உத்தரவு மகாராஜா - விமர்சனம்

நடிப்பு - உதயா, பிரபு, பிரியங்கா, செரா மற்றும் பலர்
இயக்கம் - ஆசிப் குரைஷி
இசை - நரேன் பாலகுமார்
தயாரிப்பு - ஜேசன் ஸ்டுடியோஸ்
வெளியான தேதி - 16 நவம்பர் 2018
ரேட்டிங் - 1.5/5

தமிழ் சினிமாவில் தீராத ஆசையில் சிலர் இருப்பார்கள். தாங்கள் நடிக்கும் படம் ஓடுகிறதோ இல்லையோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே மாட்டார்கள். அடுத்தடுத்து படங்களைக் கொடுத்துக் கொண்டு, என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நடித்துக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் உதயா.

தன் நடிப்பு ஆசைக்காக வேறு ஒரு தயாரிப்பாளருக்குத் தொந்தரவு தராமல், தானே நடித்து ஒரு இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுப்பதில் பெரிய மனது வேண்டும். இதற்கு முன் தான் நடித்த படங்களை விட இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென முடிவெடுத்து இந்த 'உத்தரவு மகாராஜா' படத்தை எடுத்திருக்கிறார் போலிருக்கிறது.

சலவைத் தொழில் செய்யும் பாஸ்கரின் மகன் உதயா. சிறு வயதிலேயே ஒரு கோட் அணிய ஆசைப்பட்டு அவமானப்படுகிறார். அப்போதே மன நோய் பாதிக்கப்பட்டவராகிறார். இளைஞனான பின்னும் அவருக்கு அந்த பாதிப்பு தொடர்கிறது. அந்த மனநோய்க்கு 'டிஐடி' என்று பெயராம். அவருக்குள் அடிக்கடி யாரோ ராஜா குதிரையில் வந்து உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அதற்கேற்றபடி அவர் பைத்தியம் பிடித்தவர் போல நடக்கிறார். ஆனால், உதயாவுக்குள் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என இன்ஸ்பெக்டர் ஸ்ரீமன் நினைக்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்குகிறார். அதை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் முழுவதும் உதயா நடித்துத் தள்ளியிருக்கிறார். மன நோய் பாதிக்கப்பட்டவர் என்பதால் எப்படி நடித்தாலும் பரவாயில்லை. அவர் கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார். கண்களில் கான்டாக்ட் லென்ஸ், தாடி, எப்போதும் கோட் சூட் என தோற்றத்தை கதாபாத்திரத்திற்கேற்றபடி மாற்றியிருக்கிறார்.

படத்தின் பிளாஷ் பேக்கில் வரும் நாயகி யதார்த்தமாக நடித்திருக்கிறார். அந்த கிராமத்துப் பெண் கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருக்கிறார். உதயாவின் இப்போதைய காதலியாக நடித்திருப்பவர் நடிக்க முயற்சிக்கிறார், ஆனால் வரவில்லை.

பிரபுவின் கதாபாத்திரத்தை, படத்தின் வில்லன் என்பதா அல்லது குணச்சித்திரக் கதாபாத்திரம் என்பதா ?. கனமான கதாபாத்திரத்தில் கனமான தோற்றத்தில் கனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரபு.

பிரபுவுடன் நட்பாக ஒரு மகள் போல் பழகும் நாயகி சுட்டித்தனமாக நடித்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலப்பாக கவர்கிறார்.

படத்தில் தேவையற்ற பாடல்கள் இல்லாதது மிகப் பெரும் ஆறுதல். கொடைக்கானல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ரசனையாக படமாக்கியிருக்கிறார்.

ஸ்ரீமன் பொறுப்பான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். கோவை சரளா, வழக்கம் போல காமெடி என்ற பெயரில் கூச்சல் போடுகிறார். மனோபாலா, தனஞ்செயன், ஆடம்ஸ் இவர்களும் படத்தில் இருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் ஆசிப் குரைஷி இயக்கியிருக்கும் படம். திரைக்கதையில் கொஞ்சம் குழப்பி அடித்திருக்கிறார். ஒரு வித்தியாசமான கதை, இன்னும் தெளிவான திரைக்கதையுடன் கொடுத்திருக்கலாம்.

உத்தரவு மகாராஜா - தொண்டன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement