dinamalar telegram
Advertisement

வடசென்னை

Share

நடிப்பு - தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர்
இயக்கம் - வெற்றிமாறன்
இசை - சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு - உண்டர்பார் பிலிம்ஸ்
வெளியான தேதி - 17 அக்டோபர் 2018
நேரம் - 2 மணி நேரம் 46 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

'பொல்லாதவன், ஆடுகளம்' என இரண்டு வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி இந்த 'வடசென்னை' படத்தையும் மீண்டும் ஒரு வித்தியாசமான படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறது.

'வடசென்னை' என்றாலே சண்டை, சச்சரவு, கத்தி, ரத்தம், கொலை என அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. அதையே தான் இந்தப் படமும் சொல்கிறது. மற்ற படங்கள் தந்த அடையாளம் வேறு, ஆனால், இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் தரும் அடையாளம் வேறு.

உண்மையில் ஒரு பாகத்தில் சொல்லிவிட முடியாத கதைதான் இந்தப் படம். இந்த முதல் பாகத்தின் முடிவில் 'வடசென்னை 2 - அன்புவின் எழுச்சி' விரைவில் என படத்தை முடிக்கிறார்கள். இந்த முதல் பாகத்தில் அன்பு யார் என்று சொல்வதிலேயே படம் நிறைவுறுகிறது. அதில் அன்புவின் காதல், அன்புவின் ஆரம்பம், அன்புவின் முதல் அசால்ட், அன்புவின் சிறை வாழ்க்கை என படம் நகர்கிறது.

அன்புதான் படத்தின் மையம் என்றாலும் ராஜன் தான் படத்தின் நதிமூலம், ரிஷிமூலம் ஆக இருக்கிறார். ராஜன், கப்பல்களிலிருந்து 'ஊக்கு' போட்டு பொருட்களைக் கடத்தி தொழில் செய்து வருபவர். ஊருக்குள் மரியாதையான மனிதராக இருக்கிறார். அவரிடம் செந்தில், குணா வேலையாட்களாக இருக்கிறார்கள். ஊர் பிரச்சினை ஒன்றில் தலையிட வேண்டிய சூழல் வந்ததால் தான் செய்யும் தொழிலை விட்டு ஊர் பிரச்சினையில் கவனம் செலுத்துகிறார் ராஜன். எம்ஜிஆர் இறந்த சமயத்தில் செந்தில், குணா தனியாக 'ஊக்கு' போடும் வேலையில் இறங்குகிறார்கள். இதனால், ஆத்திரமடையும் ராஜன் அவர்களை தெருவில் வைத்து அவமானப்படுத்துகிறார். அந்த அவமானம் தாங்காமல் அவர்கள், ராஜனைக் கொலை செய்துவிடுகிறார்கள். ராஜனின் காதல் மனைவி சந்திரா, தன் கணவனைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார். வருடங்கள் கடக்கிறது. சிறையில் இருக்கும் செந்திலை அன்பு கொல்ல முயற்சித்து செந்தில் நரம்பு பாதிக்கப்பட்டு ஊனம் ஆகிறான். அன்பு செந்திலைக் கொலை செய்ய என்ன காரணம் ?, சந்திராவின் பழி வாங்கல் என்ன ஆனது என்பதுதான் இந்த 'வடசென்னை'யின் முதல் பாகத்தின் கதை.

கதையாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்னமும் சொல்லலாம், ஒரு பக்கத்திற்குள் அடங்கிவிடாத ஒரு கதை.

படத்தின் கதை இடைவேளை வரை சிறைச்சாலை, பின்னர் குப்பம் என இரண்டே இடங்களில் தான் மாறி மாறி நடக்கிறது. அது கொஞ்சம் அலுப்பைத் தந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற திரைக்கதை படத்தின் விறுவிறுப்பைக் கொஞ்சமும் குறைக்காமல் காப்பாற்றுகிறது. 'வடசென்னை' மக்களின் வாழ்வியல் அவ்வளவு இயல்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு குழுக்களின் மோதல், பழி வாங்கல், கொலை, சிறை என படம் நகர்ந்தாலும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும், அரசியல் நிலவரங்களையும் படம் யதார்த்தமாய் பேசுகிறது. மக்களின் பிரச்சினைக்கான ஒரு ஆரம்பமாகவும் முதல் பாகத்தின் முடிவு அமைந்துள்ளது.

படத்தில் எந்த ஒரு இடத்திலும் தனுஷைப் பார்க்க முடியவில்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை அன்பு மட்டுமே கண்களுக்குத் தெரிகிறார். அந்த அளவிற்கு அன்பு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் தனுஷ். தாடியுடன் கெத்தாகத் திரிந்தாலும், படத்தில் கொஞ்ச நேரமே வரும் அந்த சின்னப் பையன் அன்பு கதாபாத்திரத்தில் அவ்வளவு குறும்பு, காதல். அந்தக் காதலை இன்னும் கொஞ்சம் வைத்திருக்கலாமே என்று ஏங்க வைத்திறார். சிறைக்குள் தனுஷ் எதற்காக வந்திருக்கிறார் என்பது தெரிய வரும் போது அதிர்ச்சி. சாதாரண கேரம் போர்டு பிளேயர் ஆக இருப்பவர் கொஞ்சம் கொஞ்சமாக ரவுடி ஆக மாறும் வளர்ச்சி காண்பிக்கப்படும் விதம் அற்புதமான 'டீடெய்லிங்'. இந்த அன்புவின் வளர்ச்சியைப் பார்த்தபின் அடுத்து அன்புவின் எழுச்சி எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுகிறது.

அன்புவின் காதலி பத்மா-வாக ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் தனக்கென தனி இடத்தைப் பிடித்த ஷோபா-விற்குப் பிறகு அந்த இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பிடிப்பார் என்றால் அது மிகையில்லை. முதல் காட்சியிலேயே 'கெட்ட' வார்த்தை பேசி மிரள வைக்கிறார். இந்தப் படம் ஐஸ்வர்யாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்லும்.

சந்திரா-வாக ஆன்ட்ரியா. வடசென்னை படத்தில் ஆன்ட்ரியாவா என பலரையும் ஆச்சரியப்பட வைத்தவர். அவருடைய நடிப்பால் மேலும் ஆச்சரியப்பட வைக்கிறார். இப்படி நடிக்கத் தெரிந்த ஆன்ட்ரியாவை தமிழ்த் திரையுலகம் இதுவரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதில்லை. ஆன்ட்ரியாவின் நடிப்புத் திறமையை இந்தப் படத்தின் மூலம் மற்றவர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

படத்தின் மையப் புள்ளி ராஜன் ஆக அமீர். கொஞ்ச நேரமே வந்தாலும் மிரள வைக்கிறார். செந்தில் ஆக கிஷோர், குணாவாக சமுத்திரக்கனி, வேலுவாக பவன், தம்பி ஆக டேனியல் பாலாஜி, அரசியல்வாதியாக ராதாரவி, பஞ்சாயத்து செய்யும் சுப்பிரமணிய சிவா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் அவரவர் கதாபாத்திரத்தில் தனி மிரட்டலுடன் நடித்திருக்கிறார்கள். இவர்களைக் காட்டிலும் ஐஸ்வர்யாவைப் பெண் கேட்க வந்த காட்சியில் ஐஸ்வர்யாவின் தம்பியாக நடித்திருப்பவர் அவரது அப்பாவை மிரட்டும் காட்சியில் மொத்த கைத்தட்டலையும் வாங்கிவிடுகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களில் வடசென்னை வீசினாலும், பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தி இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவும், சிறை அரங்கை அமைத்துள்ள கலை இயக்குனர் ஜாக்கியும் தனியாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மொத்தமாகப் பார்த்தால் அனைவரின் உழைப்பும், ஈடுபாடும் ரசிக்க வைக்கிறது, வியக்க வைக்கிறது. அதே சமயம், நம்மை, ஈர்க்கும் விஷயங்கள் எவையெவை என்று பார்த்தால், அவை கொஞ்சம் குறைவுதான். பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் சரளமாக வருகிறது. அதிலும் ஐஸ்வர்யா பேசும் ஒரு மோசமான கெட்ட வார்த்தை தமிழ்த் திரையுலக வரலாற்றில் இதுவரை எந்தப் படத்திலும் வராதது.

வடசென்னை - தௌலத், அதாவது கெத்து!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement