Advertisement

பேரன்பு

நடிப்பு - மம்முட்டி, சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் மற்றும் பலர்
இயக்கம் - ராம்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு - ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ்
வெளியான தேதி - 1 பிப்ரவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

தமிழ் சினிமாவில் மற்ற மொழி நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே ஆசைப்பட்டு வந்து நடித்துவிட்டுப் போவார்கள். அதிலும் குறிப்பாக மலையாள நடிகர்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்முட்டி தமிழில் நடித்து வெளிவந்திருக்கும் படம் பேரன்பு.

தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் இந்தக் காலத்திலும் நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள மம்முட்டியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு ஜோடி இல்லாமல், ஒரு டூயட் இல்லாமல், ஒரு அறிமுகப் பாடல் இல்லாமல், சண்டைக் காட்சிகள் இல்லாமல் ஒரு நடிகரால் நடிக்க முடியும் என்றால் அது மம்முட்டி போன்ற மலையாள நடிகர்களால் மட்டும்தான் நடிக்க முடியும்.

தான் இயக்கிய தங்க மீன்கள் படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அப்பா, மகள் பாசத்தை வேறு ஒரு கோணத்தில் காட்டி நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர் ராம். தமிழ் சினிமா இதுவரை மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய படங்களைக் கொடுத்ததேயில்லை என்று கூட தாராளமாகச் சொல்லலாம். அப்படியே ஒரு சில படங்கள் வந்திருந்தாலும் அந்தப் படங்கள் இந்த அளவிற்கு அவர்களின் உணர்வுகளை முழுமையாக சொல்லியிருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

இயக்குனர் ராம், உணர்வு பூர்வமாக நேரடியாக பார்த்து அனுபவப்பட்டிருந்தால் மட்டுமே இப்படி ஒரு கதையையும், கதாபாத்திரத்தையும் திரைப்படமாக வடித்திருக்க முடியும் என்று நமக்கு எண்ண வைக்கிறது. இந்தப் படத்திற்கு பேரன்பு என்ற இதைவிடப் பொருத்தமான ஒரு தலைப்பை வைத்துவிட முடியாது.

மம்முட்டி படத்தில் சொல்வதைப் போல் மூளை முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டவர் அவருடைய 14 வது மகள் சாதனா. இரண்டு கைகள், கால்கள் வெவ்வேறு பக்கம் திரும்பியிருக்க, சரியாகப் பேசவும் முடியாதவர் சாதனா. இப்படிப்பட்ட மகளை வளர்க்கப் பிடிக்காமல் மம்முட்டியை விட்டுப் பிரிகிறார் அவரது மனைவி.

மகளுடன் ஆள் அரவமே இல்லாத ஒரு மலைப் பிரதேசத்தில் தனி வீட்டிற்கு மகளுடன் வருகிறார் மம்முட்டி. துபாயில் வேலை பார்த்த காரணத்தால் மகளை விட்டுப் பிரிந்தே இருந்ததால் மகள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மம்முட்டியுடன் பாசமாகப் பழக ஆரம்பிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டை, அஞ்சலி ஏமாற்றிப் பறித்துக் கொள்கிறார். பின்னர் மகளுடன் சென்னைக்கு வருகிறார். அங்கு மகளை வைத்துக் கொண்டு அவர் சந்திக்கும் போராட்டங்கள், பிரச்சினைகள் தான் படத்தின் மீதிக் கதை.

இவற்றை அத்தியாயம், அத்தியாயம் ஆக இயற்கையை மையப் புள்ளியாக வைத்து அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் இயக்குனர் ராம். படத்தின் ஆரம்பமே நம்மை வேறு ஏதோ ஒரு உலகத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறது. அதிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லாத அந்த மலைப் பிரதேசம், அதனுள் ஒரு வீடு, பக்கத்தில் சிறு ஏரி, மர வீடு என அந்தப் பிரதேசம் நம்மை என்னவோ செய்கிறது. போதாக்குறைக்கு தன் இசையில் மனதில் வேறு எதையெதையோ வாசிக்கிறார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. அந்தப் பின்னணியை, நடக்கும் காட்சிகளை நாமே நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

தமிழில் மீண்டும் நடிக்க வந்தால் அது ஒரு வித்தியாசமான படமாக இருக்க வேண்டும் என மம்முட்டி நினைத்திருப்பார் போலிருக்கிறது. இந்த பேரன்பு படத்திற்காகத்தான் இத்தனை வருடங்களாக காத்துக் கொண்டிருந்திருக்கிறார் போலும். ஒரு நடுத்தர வயது அப்பாவாக, இப்படி ஒரு மகளை வைத்துக் கொண்டிருக்கும் அப்பாவாக, ஏமாற்றிவிட்டுச் சென்ற மனைவியின் கணவனாக இப்படித்தான் ஒருவர் இருப்பாரா என நம்மை வியக்க வைக்கிறார். வேலைக்காக வந்த அஞ்சலி மீது மெல்ல காதல் கொண்டு அவரை நம்பி ஏமாறுவதில் கூட ஒரு அப்பாவி அப்பாவாகத்தான் இருக்கிறார். இப்படிப்பட்ட மகளைப் பேணிக் காக்கும் ஒவ்வொரு அப்பாவும், அம்மாவும் தெய்வங்கள் தான். மலையாள நடிகர் மம்முட்டி கூட தமிழில் இப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவர் வயது நம் ஹீரோக்கள்...ம்ம்ம்ம்...

தங்க மீன்கள் படத்தில் சிறுமியாகப் பார்த்த சாதனா, இந்தப் படத்தில் கொஞ்சும் குமரி ஆக மாறியிருக்கிறார். அப்பா மம்முட்டியைப் பிடிக்க ஆரம்பித்ததும் அவரைக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அந்தப் பேச்சு போகப் போக நமக்கும் புரிய ஆரம்பித்து விடுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு கோபம் அதிகம் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியே கோபப்படுகிறார் சாதனா. படம் முழுவதும் அந்தக் கைகளையும், கால்களையும், வாயையும் எப்படி அப்படியே வைத்து நடித்தார் என்பது ஆச்சரியம்தான். ஏற்கெனவே கிடைத்த ஒரு தேசிய விருது மீண்டும் ஒரு முறை அவர் வீட்டைத் தேடி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அஞ்சலி, கொஞ்ச நேரமே வருகிறார். அவர் எதற்காக திடீரென வருகிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தாலும், அதற்கான காரணம் தெரிய வந்ததும் அவர் மீது கோபம் தான் வருகிறது. ஆனாலும், அவர் எதற்காக அப்படிச் செய்தார் என்பதன் காரணத்தை அவரைச் சொல்லவிடாமலே வைத்துவிட்டார் இயக்குனர்.

திருநங்கை அஞ்சலி அமீர், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின்தான் அவர் வந்தாலும், அவருக்கான முக்கியத்துவம் படத்தில் இருக்கிறது. அது என்ன என்பது படத்தின் சஸ்பென்ஸ்.

யுவன்ஷங்கர் ராஜா, ராம் கூட்டணியில் நா.முத்துக்குமார் இல்லாதது தெரிகிறது. இந்தப் படத்திற்கு ஆனந்த யாழை மீட்டுகிறாய்... போன்ற உருக வைக்கும் ஒரு பாடல் இருந்திருந்தால் அது இந்தப் படத்தின் உணர்வுகளை இன்னும் எங்கோ கொண்டு சென்றிருக்கும்.

வழக்கமான சினிமாவிலிருந்து இது வேறு மாதிரியான ஒரு சினிமா. “எந்தக் குறையும் இல்லாத குழந்தைகள் உங்களுக்கு இருப்பதே மகிழ்ச்சியானதுதான்,” என மம்முட்டி பேசும் அந்த வசனம் நம்மை என்னவோ செய்கிறது.

படம் மம்முட்டி, சாதனா ஆகிய இருவரைச் சுற்றியேதான் அதிகம் நகர்கிறது. படத்தின் ஆரம்பத்தில் சில சமயங்களில் மூன்றாம் பிறை படம் ஞாபகத்திற்கு வந்து செல்கிறது. 14 வயது சிறுமிக்காக ஆண் துணை வேண்டும் என மம்முட்டி கேட்பது சரியா?. இப்படி சில கேள்விகள் எழுகின்றன.

பேரன்பு - பெயர் சொல்லும் படம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Mohanraj Gowthaman - chennai,இந்தியா

  மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கபட்ட பெண் குழந்தைகள் படும் அவஸ்தைகள் பல இருக்க காம உணர்வு பற்றி மையப்படுத்தி அதுவும் 14 வயது பெண் குழந்தைக்கு உள்ளதுபோல் காட்டி அதர்க்கு அப்பா ஆண் விலை மகனை தேடுவது போல் காட்டியிருப்பது அபத்தம். கதை கரு சரியில்லை. பல காட்சிகள் சினிமாட்டிக்காக உள்ளது

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  ஹ்ம்ம்...அவர் வயது நம்மூர் ஹீரோக்கள் அப்புடின்னு ஒரு பெரு மூச்சு விடீங்க... நீங்க சொன்ன மம்முட்டி வயதுடைய கிட்டத்தட்ட அதே வயது நம்மூர் ஹீரோக்கள்... 1. கமல்ஹாசன், 2. ரஜினிகாந்த் 3. சத்யராஜ் 4. விஜயகாந்த் 5. பாகியராஜ் 6. மோகன் 7. தியாகராஜன் 8. கார்த்திக் 9.சுரேஷ் 10 பிரபு 11 . டீ ராஜேந்தர் 12 ஆனந்தபாபு 13 அர்ஜுன் 14 பாண்டியராஜன் 15 ராமராஜன் 16 ராம்கி 17 சரத்குமார் 18 ராஜ்கிரண் 19 பார்த்திபன் எனக்கு தெரிஞ்சு உயிரோட இருக்கிற ஹீரோக்கள் இவர்கள். இதுல யார் நடிச்சிருக்கணும்ன்னு நெனைக்குறீங்க? இந்த லிஸ்டில் இல்லாத உங்க அபிமான ஹீரோ யாரு பேரன்பில் மம்முட்டி ரோல் பண்ணனும்ன்னு நெனைக்குறீங்க? அதுக்குமுன்னே இந்த படத்தின் இயக்குனர் மேல் சொன்ன நாம்மூர் வயதுவந்த ஹீரோக்களில் யாரிடம் இந்த கதைக்கு அணுகி எந்த ஹீரோ இதை மறுத்தாங்கன்னு பத்திரிக்கை துறையில் உள்ள உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இல்லையா? என்னது இயக்குனர் யாரையும் அணுகலாய? அப்போ எப்புடி மம்முட்டி நடிச்சாரு? அவரே போய் வழிய வாய்ப்பு கேட்டாரா? ஒரு எழவும் புரியலை...எதுக்காக இப்படி பெருமூச்சு விடீங்க? அதெல்லாம் சரி ஹிந்தியில் பல பெண் கதாநாயகிகளை முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வந்திருக்கு உதாரணத்துக்கு மணிகர்ணிகா..அந்த விமர்சனத்தில் ஏன் நம்ம ஊர் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இந்த மாதிரி பெண்களை மட்டும் மையமா வச்சு நெரிய படங்களை இயக்குவதில்லைன்னு ஒரு மூச்சு சத்தத்தையும் உங்ககிட்ட காணோமே? ஏன் இந்த ஓர வஞ்சனை...?

 • balaji - chennai,இந்தியா

  விமர்சனம் உண்மை. மம்முட்டி பாத்திரத்திற்கு நம் நடிகர்கள் கண்டிப்பாக நடிக்க மாட்டார்கள். ஹீரோயிசம் பற்றி ரொம்ப கவலை படுவார்கள் .

 • K Narayanan -

  Sir, There are many malayalam films where there are no herione, no songs n no fights. Some of them were super hits too.. Its only in Tamil, Telugu and Bollywood such nonsense are there except a good story. Its a good sign and welcome step that film without herione, songs and fight are coming with Good story

 • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

  படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம் அதே நேரம் ஒரு சிறிய விண்ணப்பம் படத்தில் மம்மூட்டி அவர்கள் நன்றாக நடித்திருக்கிறார் என்று எவ்வளவு வேண்டுமானாலும் புகழுங்கள் ஓகே ஆனால் நம்ம ஊரு நடிகர்கள் ம்.ம்.. ச். போன்ற விமர்சனங்கள் ஏன் அவரவர்களின் வாய்ப்பு அவரவர்களுக்கு..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement