dinamalar telegram
Advertisement

விண்வெளி பயணக் குறிப்புகள்

Share

நடிப்பு - அத்விக் ஜலந்தர், கோபாலகிருஷ்ணன், பூஜா ராமகிருஷ்ணன் மற்றும் பலர்
இயக்கம் - ஜெயப்பிரகாஷ்
இசை - கணேஷ் ராகவேந்திரா
தயாரிப்பு - லெமூரியன் திரைக்களம்
வெளியான தேதி - 20 ஜுலை 2018
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 2/5

வித்தியாசமாக படம் எடுக்க முனையும் சிலர் அதை மக்களின் ரசனைக்கு ஏற்பவும் எடுக்க நினைக்க வேண்டும். பெரிய நடிகர்கள் நடித்த படங்களையே தியேட்டருக்கு வந்து பார்க்க பலர் தயங்கும் காலம் இது. அப்படியிருக்க, முற்றிலும் புதுமுகங்கள் என்றால் அதை வியாபார ரீதியாகவும் கொண்டு போய் சேர்க்க கொஞ்சம் கூடுதலாக உழைக்கவும் வேண்டும்.

இயக்குனருக்கு தான் நினைத்ததை எடுக்க உரிமை உண்டு. அது போலவே, அவரை நம்பி பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளரையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து அவருக்கு பணத்தைத் திரும்பக் கிடைக்கும் விதத்திலும் படத்தை எடுக்க வேண்டும்.

இந்த 'விண்வெளி பயணக் குறிப்புகள்' படம் உண்மையிலேயே வித்தியாசமான முயற்சிதான். ஆனால், படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் இருந்தால், யாரை நம்பி ரசிகர்கள் படத்திற்கு வருவார்கள். நாயகன், நாயகி தவிர மற்றவர்களையாவது கொஞ்சம் தெரிந்த முகமாக நடிக்க வைத்திருக்கலாம்.

நடித்த புதுமுகங்கள் யாருமே குறைவைக்கவில்லை, யதார்த்தமாகவே நடித்திருக்கிறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதே சமயம் படத்திற்குப் பெயர் கிடைப்பதை விட கொஞ்சம் வசூலும் கிடைக்க வேண்டும் என படக்குழுவினர் செயல்பட்டிருக்க வேண்டும்.

கதையை மட்டும் வித்தியாசமாக யோசிக்காமல், சில காட்சிகளையும் வித்தியாசமாக யோசித்திருக்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ். அதே சமயம் படத்தை உருவாக்கிய விதத்தில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை. பல காட்சிகள் ஒரு குறும்படத்தை விட மோசமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தேதியில் பல குறும்படங்கள், டிவி சீரியல்கள் கூட திரையில் பார்ப்பதற்கு ஒரு பிரமிப்பைத் தருகின்றன. அவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு ஒரு திரைப்படம் இருக்க வேண்டாமா ?.

கிராமத்தில் யாருக்கும் அடங்காமல், அரசியல் பின்னணி, கட்டப் பஞ்சாயத்து என முரட்டு பெரிய மனிதனாகத் திரிந்து கொண்டிருக்கிறார் நாயகன் அத்விக் ஜலந்தர். விண்வெளிக்கு செல்லப் போவதாகச் சொல்லி பலரையும் மிரட்டி பணம் வசூலிக்கிறார். யாருக்கும் அடங்காதவர் ஒரு சந்தர்ப்பத்தில் ஊரை விட்டே ஓட காட்டுக்குள் மறைந்து வாழ நேரிடுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

அத்விக் ஜலந்தர், பெயரைப் பார்த்தால் வட இந்தியர் போல தெரிகிறது. ஆனால், தமிழகக் கிராமத்து முரட்டுத்தனமான இளைஞர் கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார். அதிலும், காதலி வீட்டுக்குள் இருக்கும் படுக்கை அறைக்குள் காதலியின் கணவன் முன்பே நுழைவதெல்லாம் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு காட்சி.

படத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள்தான். ஆனால், யாருமே நடிப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக காட்டுக்குள் அத்விக்குடன் இருக்கும் உதவியாளர் மற்றவர்களைக் காட்டிலும் கைதட்டலைப் பெறுகிறார்.

நாயகன் அத்விக் ஜலந்தரைச் சுற்றித்தான் மொத்த படமும் நகர்கிறது. படத்தில் நாயகி என்றெல்லாம் யாரையும் சொல்ல முடியாது.

பெண் மந்திரி ஒருவர் குடிப்பது போல எல்லாம் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஊரின் முன்னாள் தாதா ஒருவர் அவருடைய மகனை நாயகனுக்கு எதிராக மோத வைக்க பயிற்சி கொடுப்பதெல்லாம் சுவாரசியமாகவே சிரிக்க வைக்கின்றன.

ஒரு படத்தைப் பார்க்கும் உணர்வு குறைவாகவே இருக்கிறது. அத்விக், விண்வெளிக்குச் செல்ல ஊர் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பது போன்ற சில காட்சிகளை ஆரம்பத்திலேயே இன்னும் விரிவாக்க் காட்டியிருந்தால் படத்துடன் ஒன்றிப் பார்க்க முடிந்திருக்கும். கிளைமாக்ஸ் காட்சி சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று.

விண்வெளி பயணக் குறிப்புகள் - குறிப்பு ஓ.கே., ஆனால் பயணம்...

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement