dinamalar telegram
Advertisement

மணியார் குடும்பம்

Share

நடிப்பு - உமாபதி, மிருதுளா முரளி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி மற்றும் பலர்
இயக்கம் - தம்பி ராமையா
இசை - தம்பி ராமையா, தினேஷ்
தயாரிப்பு - வியு சினிமாஸ்
வெளியான தேதி - 3 ஆகஸ்ட் 2018
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகள் நிறையவே இருக்கிறார்கள். அப்பா இயக்கவும், மகன் நடிக்கவும் ஆரம்பமாகி பின்னர் பெரிய நடிகர்களாக உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். வாரிசுகளை வளர்த்தாலும் படங்களும், நேரமும் சரியாக இருந்தால் தான் அவர்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று உயர முடியும்.

பல படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் தம்பி ராமையா ஒரு இயக்குனர் என்பது இன்றைய ரசிகர்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

'மனுநீதி' படத்தை 2000ம் ஆண்டு இயக்கி இயக்குனராக அறிமுகமான தம்பி ராமையா, அடுத்து 8 வருடங்கள் கழித்து வடிவேலு நடித்த 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' படத்தை இயக்கினார். இப்போது 10 வருடங்கள் கழித்து 'மணியார் குடும்பம்' படத்தை அவருடைய மகனை நாயகனாக நடிக்க வைத்து, இயக்கி நடித்திருக்கிறார்.

ஊரில் வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பம் தம்பி ராமையாவுடையது. யார் உதவி என்று வந்து கேட்டாலும் வீட்டில் உள்ள பொருட்களை விற்றாவது அவர்களுக்கு உதவி செய்வார்கள். தம்பி ராமையாவைப் போலவே அவருடைய மகன் உமாபதியும் எந்த வேலைக்கும் போகாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். தன் மகனுக்காக, தங்கை மகள் மிருதுளா முரளியைப் பெண் கேட்டுப் போகிறார் தம்பி ராமையா. ஆனால், மச்சான் ஜெயப்பிரகாஷ், அவர்களை அவமானப்படுத்துகிறார். இதனால், ஆத்திரமடையும் உமாபதி ஏதாவது ஒரு வேலையோ, தொழிலோ செய்து உயர்ந்து, ஜெயப்பிரகாஷையே வீடு தேடி வந்து பெண் கேட்க வைக்கிறேன் என சபதம் செய்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

உமாபதி, நன்றாக நடனமாடுகிறார். இன்றைய வளரும் நாயகர்களில் இவர் அளவுக்கு நடனத் திறமை வாய்ந்தவர்கள் யாரும் இல்லை என தாராளமாகச் சொல்லலாம். அந்தத் திறமையை நடிப்பிலும் வளர்த்துக் கொள்வது நலம். குறிப்பாக வசனத்தை அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கப் பயிற்சி எடுப்பது ரொம்பவே நல்லது. நுனி நாக்கிலேயே வசனத்தை உச்சரிக்கிறார்.

மிருதுளா முரளி வழக்கமான தமிழ்ப் பட நாயகி. நல்ல வேலையில் இருந்து சம்பாதித்தாலும் வேலைக்கே போகாத முறைமாமனை விழுந்து விழுந்து காதலித்து, உதவியும் செய்கிறார்.

வறட்டு கௌரவத்துடன் வாழும் மணியக்காரர் குடும்ப வாரிசு தம்பி ராமையா. எந்த அவமானத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் மீது எதுவுமே படவில்லை என்பது போன்ற நடிப்பை அவ்வளவு இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார். தேசிய விருது வாங்கியவராயிற்றே, இப்போதைய குணச்சித்திர நடிகர்களில் இவருடைய முத்திரை தனிதான்.

மற்ற கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், ராதாரவி, மொட்ட ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, பவன் எனப் பலரும் இருந்தாலும் யாரும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. மொத்த திரைக்கதையும், தம்பி ராமையாவையும், அவருடைய மகன் உமாபதியையும் மட்டுமே சுற்றி நகர்கிறது.

'இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக் பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறார். தியேட்டரில் அட நம்ம யாஷிகா என்று ஆனந்தப்படுகிறார்கள். டிவியில் கலக்கி வரும் ராமர், தங்கதுரை வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, வசனம், இயக்கம் தம்பி ராமையா. 18 வருடங்கள் முன்பு அவர் இயக்குனராக அறிமுகமான 'மனுநீதி' படத்தை மக்கள் மறந்திருந்தாலும் அந்தப் படத்தின் முரளி, வடிவேலு நகைச்சுவையை மறந்திருக்க மாட்டார்கள். அப்படி மறக்க முடியாத ஒரு படமாக இந்த 'மணியார் குடும்பம்' படத்தை தன் மகனுக்காகவும் அவர் கொடுத்திருக்கலாம்.

இடைவேளைக்குப் பின் கதை எங்கெங்கோ, எப்படியோ போகிறது. ஆரம்பத்தில் இருந்த ஒரு தெளிவு, பின்னர் தள்ளாட்டம் ஆடுகிறது.

மணியார் குடும்பம் - மகனுக்காக...!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement