dinamalar telegram
Advertisement

கீ

Share

நடிப்பு - ஜீவா, நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி, அனைகா
தயாரிப்பு - குளோபல் இன்பொடைன்மென்ட்
இயக்கம் - காளீஸ்
இசை - விஷால் சந்திரசேகர்
வெளியான தேதி - மே 10, 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரு படத்தின் முன்னோட்டம் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைக்கும் என்பதற்கு இந்த கீ படமும் ஒரு உதாரணம். இந்தப் படத்தின் டிரைலர் ஒரு வருடத்திற்கு முன்பே வெளிவந்து, இந்தப் படம் மீது ஒரு நம்பிக்கையைக் கொடுத்து.

கம்ப்யூட்டர், மொபைல் போன் ஹேக்கிங் பற்றி வெளிவந்த இரும்புத்திரை படம், இந்தப் படத்திற்கு முன்பே வெளிவந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அதை நியாயமாக கீ படம் தான் கொடுத்திருக்க வேண்டும். அவர்களால் சரியான நேரத்தில் படத்தை வெளியிட முடியாத காரணத்தால் இப்போது இரும்புத்திரை போன்று இந்தப் படத்தை எதிர்பார்த்து வந்தோம் என ரசிகர்களை சொல்ல வைத்திருக்கிறது.

அறிமுக இயக்குனர் காளீஸ், தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத கதைக்களமான டெக்னாலஜி விஷயத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உலகில் நமது ரகசியங்களை எளிதில் திருடிவிடலாம், நம்மை நமக்குத் தெரியாமலேயே ஒருவரால் கண்காணிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

சொல்ல வந்த விஷயத்தை அவர் தெளிவாகச் சொல்லியிருந்தால் இந்த கீ படம் தமிழ் சினிமாவின் பிரமாதமான படம் வரிசையில் இடம் பெற்றிருக்கும். ஆனால், மையக்கதையை விட்டுவிட்டு, சம்பந்தமில்லாமல், காதல், சென்டிமென்ட் என தடம் மாறி திரைக்கதையை அமைத்து படத்திற்கு வரவேண்டிய பெயரை அவரே கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் (?) ஜீவா, ஒரு சிறந்த ஹேக்கர். அதற்காக விருதுகளைக் கூட வாங்கியிருக்கிறார். அவருடைய அப்பாவை யாரோ கார் ஏற்றி கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், தன்னை கொல்ல நடந்த சதி என்பது ஜீவாவிற்குத் தெரிய வருகிறது. அவருடைய தோழியான அனைகா, ஜீவாவின் உயிருக்கு ஆபத்து என எச்சரித்தது அப்போதுதான் ஜீவாவிற்கு ஞாபகத்திற்கு வருகிறது. அனகாவைப் பார்க்க அவர் வீட்டிற்குச் செல்ல, விபத்தொன்றில் அனைகா இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அனைகாவின் வீட்டில் உள்ள ஒரு ரகசியப் பெட்டகத்தில் இருக்கும் ஹார்ட்டிஸ்க் ஒன்றை ஜீவா கண்டுபிடித்து எடுக்கிறார். அதன் பின்னர்தான் அவருக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது. தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கதையாக எழுதும் போது எவ்வளவு பரபரப்பாக, விறுவிறுப்பாக இருக்கிறது. ஆனால், இதை திரைக்கதையில் அப்படியோ கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். சில தேவையில்லாத காட்சிகளை படத்திலிருந்து தூக்கினால் படம் ரசிப்பதற்கு நன்றாக இருக்கும். படத்தின் ஆரம்பமும், கிளைமாக்ஸுக்கு முன்பாகவும்தான் இயக்குனர் நினைத்ததைக் கொடுத்திருக்கிறார். மற்ற காட்சிகளை ஹேக் செய்தால் கூட தப்பில்லை.

கல்லூரி மாணவர் என்று சொன்னால் இன்னும் நம்பும்படியாகத்தான் இருக்கிறார் ஜீவா. ஆனால், அவர் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் படிக்கிறார் என்று நாமே புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய கதாபாத்திர வடிவமைப்பிலும் கொஞ்சம் குழம்பியிருக்கிறார் இயக்குனர். முழுவதுமாக ஒரு ஹேக்கராகக் காட்டியிருக்க வேண்டும், இல்லை ஒரு காதலனாக, கல்லூரி மாணவனாகக் காட்டியிருக்க வேண்டும். இருந்தாலும் ஜீவா முடிந்தவரையில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 2999வது முறையாக ஒரு லூசுத்தமான கதாநாயகியை இந்தப் படத்திலும் பார்க்கும் கொடுமையை என்னவென்று சொல்ல... நிக்கி கல்ராணி உருவத்திற்கும் அவருடைய குழந்தைத்தனமான நடிப்பிற்கும் துளியும் சம்பந்தமில்லை.

படத்தின் வில்லனாக மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா. இவர்தான் பார்ப்பதற்கு அப்படியே ஹேக்கர் போல இருக்கிறார். சிரிக்காத, சீரியசான இவரது வில்லத்தனமும் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது.

படத்தின் இரண்டாவது கதாநாயகியாக அனைகா சோதி. ஆரம்பக் காட்சிகளில் அரைகுறை ஆடையுடன் அத்துமீறும் காட்சிகளில் அரங்கை அலற வைக்கிறார். ஒளிப்பதிவாளரும் பார்த்துப் பார்த்து ஆங்கிள் வைத்திருக்கிறார்.

ஆர்ஜே பாலாஜி அடிக்கும் 5 ஜோக்குகளில் ஒன்று மட்டுமே சிரிக்க வைக்கிறது. ஜீவாவின் பெற்றோர்களாக தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், சுகாசினி. இவர்களும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் சுமார் ரகமாகக் கூட இல்லை. எடிட்டர் இன்னும் காட்சிகளைக் கட் செய்து படத்தை சுருக்கியிருக்கலாம்.

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் இனி, தங்கள் மொபைல் போனில் கண்டதை வைத்துக் கொள்ள மாட்டார்கள். இணையங்களில் கண்ட சைட்டுகளைப் பார்க்க மாட்டார்கள். குறிப்பாக இலவசம் என்ற வரும் லின்க்கை கிளிக் செய்ய மாட்டார்கள். அப்படி நடந்தால் அது இயக்குனர் காளீஸுக்குக் கிடைத்த வெற்றி.

கீ - ஓகே!

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement