dinamalar telegram
Advertisement

கூட்டாளி

Share

நடிப்பு - சதீஷ், கிரிஷா குருப், கல்யாண் மாஸ்டர், அருள்தாஸ் மற்றும் பலர்
இயக்கம் - எஸ்.கே.மதி
இசை - பிரிட்டோ மைக்கேல்
தயாரிப்பு - எஸ்பி பிக்சல்ஸ்
வெளியான தேதி - 23 பிப்ரவரி 2018
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் படங்களின் காப்பி கதைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறோம். யு டியூப் வந்த பிறகுதான் அப்படிப்பட்ட காப்பிக் கதைகள் வருவது குறைந்துவிட்டது. அப்படி காப்பியடித்து படமாக்குபவர்கள் எளிதில் சிக்கிவிடுகிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம்.

இருந்தாலும் சில சமயங்களில் ஒரே கதைகளைக் கொண்ட சில படங்கள் அடுத்தடுத்து வருவதும் நடக்கிறது. அப்படி வந்துள்ள படம் தான் 'கூட்டாளி'. இந்தப் படத்தின் கதையும் கடந்த மாதம் விக்ரம், தமன்னா நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'ஸ்கெட்ச்' படத்தின் கதையும் ஏறக்குறைய ஒன்று தான்.

'ஸ்கெட்ச்' படம் முதலில் வந்ததால் இந்த 'கூட்டாளி' படத்தை காப்பியடித்த படம் என்று சொல்லிவிடப் போகிறார்கள். விசாரித்ததில், 'கூட்டாளி' படத்தைத்தான் முதலில் ஆரம்பித்து படமாக்கியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் 'ஸ்கெட்ச்' படம் ஆரம்பமாகியுள்ளது. 'கூட்டாளி'யில் இருந்த எந்த ஆகாத கூட்டாளி படத்தின் கதையை போட்டுக் கொடுத்தாரோ 'ஸ்கெட்ச்' முதலில் வந்துவிட்டது.

சதீஷ், அவருடைய நண்பர்கள் மூவருடன் ஒரு கார் ஷெட்டியில் தங்கியிருக்கிறார்கள். மார்வாடியான உதயபானு மகேஷ்வரனிடம் இவர்கள் வேலை செய்கிறார்கள். தவணை பணம் கட்டாதவர்களிடமிருந்து வண்டிகளைத் தூக்கி வருவதுதான் இவர்களது வேலை. சதீஷுக்கும் நாயகியான கிரிஷா குருப்-புக்கும் இடையே காதல். இவர்களின் காதல் விவகாரம் கிரிஷாவின் அப்பா இன்ஸ்பெக்டரான கல்யாணுக்குத் தெரிகிறது. மகளை விட்டுப் பிரிந்து வாழ்ந்தாலும் மகளின் காதலை எதிர்க்கிறார் கல்யாண். இதனிடையே, சதீஷையும் அவர்களது நண்பர்களையும் சிலர் கொல்ல முயற்சிக்கிறார்கள். அதன் பின் 'கூட்டாளி'கள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'அழகி' படத்தில் கொஞ்சம் வளர்ந்த சிறுவனாக நடித்த சதீஷ் தான் இந்த 'கூட்டாளி' படத்தின் நாயகன். எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான இளைஞனாக நடித்திருக்கிறார். எந்தக் காட்சியிலும் அவர் நடிக்கிறார் என்று சொல்ல முடியாதபடி யதார்த்தமாக நடித்திருக்கிறார். கதையின் நாயகன் தேவைப்படும் இயக்குனர்கள் சதீஷை தாராளமாக அணுகலாம்.

படத்தின் நாயகி கிரிஷா குருப்-புக்கு அழகான பிரைட்டான கண்கள். அவர் பேசி வருவதற்கு முன்பாகவே அவருடைய கண்கள் பேசி விடுகின்றன.

சதீஷின் நண்பர்களாக அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ். இவர்களில் அப்புக்குட்டி நகைச்சுவை என்ற பெயரில் பொறுமையை சோதிக்கிறார். மற்ற இருவரும் அவர்கள் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.

அருள்தாஸ் வழக்கமான ஏரியா தாதா. மற்றொரு ஏரியா தாதாவாக நந்தகுமார், வராத நடிப்பை வரவைக்க முயற்சிக்கிறார். மார்வாடியாக உதயபானு மகேஷ்வரன், இன்ஸ்பெக்டராக கல்யாண் இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

பிரிட்டோ மைக்கேல் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சுரேஷ் நட்ராஜன் சென்னையின் குப்பம் பகுதிகளை இயல்பாய் படம் பிடித்திருக்கிறார்.

இடைவேளை வரை படம் எந்த பரபரப்பும் இல்லாமல் நகர்கிறது. இடைவேளைக்குப் பின்னர்தான் படத்தின் கதைக்குள்ளேயே செல்கிறார்கள். சதீஷ், கிரிஷா காதல், அவர்கள் காதலுக்கு கல்யாண் எதிர்ப்பு, சதீஷைக் கொல்லத் துடிப்பவர்கள் என இடைவேளைக்குப் பின் படத்தில் பரபரப்பு அதிகம்.

இது போன்ற சிறிய பட்ஜெட் படங்களை படம் வெளியிடுவதற்கு முன்பே ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இந்தப் படத்தின் கதையைக் கொண்டு வெளியான 'ஸ்கெட்ச்' படம் பெரிய நடிகர்கள் நடித்ததால் மக்களிடம் போய் சேர்ந்தது. ஆனால், 'ஸ்கெட்ச்' படத்தை விடவே நன்றாக இருக்கும் இந்தப் படம் வெளிவந்துள்ளது எத்தனை பேருக்குத் தெரியும்.

சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இனியாவது படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் ஒரு படத்தைத் தயாரித்தால் நல்லது.

கூட்டாளி - பிரிவிலும் பிரியாத நட்பு

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement