dinamalar telegram
Advertisement

கடிகார மனிதர்கள்

Share

நடிப்பு - கிஷோர், கருணாகரன், லதா ராவ் மற்றும் பலர்
இயக்கம் - வைகறை பாலன்
தயாரிப்பு - கிரைஸ்ட் பி
இசை - சாம் சி.எஸ்.
வெளியான தேதி - 3 ஆகஸ்ட் 2018
நேரம் - 1 மணி நேரம் 55 நிமிடம்

சினிமா என்பது பலருக்கும் பணம் சம்பாதிக்கும் ஒரு துறையாகத்தான் இருக்கிறது. மக்கள் ரசிக்கும் படங்களைக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் பலரும் படங்களை எடுக்க வருகிறார்கள்.

ஆனால், ஒரு சிலர் மட்டுமே மக்களின் வாழ்க்கையைத் திரைப்படங்களில் பிரதிபலிக்க வைத்து ஒரு யதார்த்தப் படைப்பைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். அப்படி ஒரு படமாகத்தான் இந்த 'கடிகார மனிதர்கள்' படத்தை இயக்குனர் வைகறை பாலன் கொடுத்திருக்கிறார்.

கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர் கிஷோர். மனைவி லதாராவ், இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என சராசரியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐந்தாறு குடும்பங்கள் உள்ள ஒரு வாடகை வீட்டில் இவரும் ஒரு குடும்பமாக தனக்கு இரண்டு குழந்தைகள் தான் என்று சொல்லி வாடகைக்கு வருகிறார். கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்பவர், அவருடைய அந்த வாடைகை வீட்டு குடியிருப்பில் எப்படியான கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதுதான் இந்தப் படம்.

அந்த வாடகை வீடு காம்பவுண்டிற்குள் நாமும் ஒரு குடித்தனம் இருந்து பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வைகறை பாலன்.

சென்னையில் 3500 ரூபாய்க்குக் கூட வாடகை கொடுத்து வசிக்க முடியாத நிலையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற ஒரு ஏழைக் குடும்பத்துக் கஷ்டத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

கதையின் நாயகனாக கிஷோர். அந்த ஏக்கமும், பரிதாபப் பார்வையும் அவருடைய கதாபாத்திரத்தை மேலும் கனமாக்குகின்றன. மூன்றாவது மகனை வீட்டின் உரிமையாளருக்குத் தெரியாமல் பெட்டியில் மறைத்து வைத்து எடுத்துச் செல்லும் நிலைமையை நினைத்து அவர் பரிதவிப்பது கண்ணீர் வரவைக்கும். ஒரு வீடு கிடைப்பதற்கு எப்படிப்பட்ட பொய்களை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது என்பது வாடகைக்கு குடியிருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

கிஷோர் மனைவியாக லதாராவ். கஷ்டங்களை அனுபவித்தாலும் ஒரு கணவனுக்கு கடினமான நேரத்திலும் தோள் கொடுக்கும் பாசமான மனைவியாக நடித்திருக்கிறார். இவர் போன்ற யதார்த்தமான நடிப்பைக் கொடுக்கும் நடிகைகள் பல இயக்குனரின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பது வருத்தமானதுதான்.

வீட்டு உரிமையாளராக பாலாசிங். ஒரு கெடுபிடியான ஹவுஸ் ஓனர் எப்படியிருப்பார் என்பதை அப்படியே காட்டியிருக்கிறார். அவருடைய அம்மாவாக வரும் பாட்டியும் அசத்தல்.

படம் சீரியசாக போகக் கூடாது என்பதற்காக கருணாகரன் கதாபாத்திரத்தை வைத்து கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவருடைய கதாபாத்திரத்திலும் காதலும், கலகலப்பும் இருந்தாலும் கடைசியில் ஒரு சோகமும் வந்துவிடுகிறது.

வீட்டில் உள்ள மற்ற குடித்தனக்காரர்களும் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிதான் என்றாலும் மற்றவர்களை விட சிசர் மனோகர், பாவா லட்சுமண் அவர்களைப் பற்றி பேச வைக்கிறார்கள்.

சாம் சி.எஸ் இசையில் டைட்டில் பாடல் கருத்தாழமிக்க வரிகளாக அமைந்து உருக வைக்கிறது. இது மாதிரியான சிறிய படங்களுக்கும் வளரும் இசையமைப்பாளர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்.

படத்தில் வரும் ஒரு தேவையற்ற கொலையும், கிளைமாக்ஸ் காட்சியும் சினிமாத்தனமாக அமைந்தது இந்த யதார்த்த படத்தின் திருஷ்டி.

நல்ல கதை, சராசரி மக்களின் பிரச்சினை என ஒரு வாழ்வியலை சித்தரிக்கும் இது மாதிரியான சிறிய படங்களுக்கும் திரையுலகினரின் ஆதரவும், ரசிகர்களின் ஆதரவும் இருந்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லது.

இந்த ஆண்டில் வெளிவந்த குறைந்த பட்ஜெட் படங்களில் 'ஒரு குப்பைக் கதை' படத்திற்குப் பிறகு இந்த 'கடிகார மனிதர்கள்' படத்திற்கும் தனி இடம் கிடைக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement