dinamalar telegram
Advertisement

கொளஞ்சி

Share

நடிப்பு - கிருபாகரன், நசாத், சமுத்திரக்கனி, சங்கவி
தயாரிப்பு - மயன்தாரா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - தனராம் சரவணன்
இசை - நடராஜன் சங்கரன்
வெளியான தேதி - 26 ஜுலை 2019
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

நம்மைச் சுற்றியே இன்னும் படமாக்கப்படாத பல கதைகள் உள்ளன என்பார்கள் சீனியர் படைப்பாளிகள். இன்னும் எவ்வளவோ கதைகள், கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கைக்குள் புதைந்து கொண்டிருக்கின்றன. அவை அடிக்கடி படமாக திரைக்கு வராமல் போனாலும் அவ்வப்போதாவது வந்து நமது வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த 'கொளஞ்சி' படமும் ஒரு வாழ்வியல் படம்தான். கிராமத்தில் பெரியார் கொள்கைகளை பேசிக் கொண்டு இருப்பவர் சமுத்திரக்கனி. மனைவி சங்கவி, இரண்டு மகன்கள் என அளவான குடும்பம் அவருடையது. பள்ளியில் படிக்கும் மூத்த மகன் கிருபாகரன் பயங்கரமான வால்தனம் செய்பவன். ஊரில் எப்போதும் ஏதாவது வம்பு செய்து கொண்டிருப்பவன். அதனாலேயே அவனை எப்போதும் அடித்து, உதைத்துக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. இளைய மகன் மீதுதான் அவருக்கு அதிக பாசம். ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி, சங்கவி இருவருக்கும் சண்டை வரை, அப்பாவின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறும் அம்மா சங்கவியுடன் கிருபாகரனும் சென்று விடுகிறான். பிரிந்தவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

கிருபாகரன் கதாபாத்திரப் பெயர்தான் 'கொளஞ்சி'. படம் முழுவதும் அந்தக் கதாபாத்திரத்தைச் சுற்றியேதான் இருக்கிறது. கிருபாகரன் அவனது நண்பன் நசாத் இருவரும் அடிக்கும் கலாட்டாக்கள் நம்மை நமது சிறு வயது பருவத்திற்கு அழைத்துச் செல்லும். இன்று அப்படியான கலாட்டாக்கள் குறைந்து போய்விட்டது. சிறுவர், சிறுமியர் அனைவரும் டிவி முன்பும், மொபைல் போன் வைத்தும்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்து தெருக்களில், தோப்பில், வயல்வெளியில் விளையாடுவதெல்லாம் குறைந்து போய்விட்டது.

'கொளஞ்சி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிருபாகரன் அவ்வளவு யதார்த்தமாய் நடித்துள்ளார். அவர் 9வது படிக்கும் போது எடுத்த படமாம், இப்போது 12ம் வகுப்பு படிக்கிறேன் என்கிறார். மூன்று வருட தாமதத்திற்குப் பிறகு படம் வந்தாலும் எக்காலத்திற்கும் பொருத்தமான குடும்பம், காதல், கடவுள், கடவுள் மறுப்பு என தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் தனராம் சரவணன்.

கிருபாகரன் நண்பனாக நசாத். 'அப்பா' படத்தில் நடித்த சிறுவன். இந்தப் படத்தில் கிருபாகரன் கூடவே எந்நேரமும் இருக்கும் உற்ற நண்பன். அந்த சிறு வயதில் நட்புக்கு அவர் கொடுக்கும் மரியாதை சிறப்போ சிறப்பு. அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு மற்றவர்களைக் கிண்டலடித்து நம்மையும் அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.

கிருபாகரன், நசாத் ஆகிய இருவருக்குப் பிறகே மற்ற நடிகர்களைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. ஒரு மகன் மீது பரிவும், மற்றொரு மகன் மீது கோபமும் காட்டும் அப்பாவாக சமுத்திரக்கனி. பெரியாரிசம் பேசுபவர் மனைவி சங்கவியை கை நீட்டி அடிப்பதும், வெளியில் இருந்து வந்த மனைவியிடம் போய் சமைக்கும் வேலையைப் பார் என்று சொல்வதும் அவரது கதாபாத்திரத்திற்கு முரணாக உள்ளது. மனைவி வீட்டை விட்டுப் போன பின் அவரே வீட்டில் சமைத்து இளைய மகனுக்கு உணவளித்திருக்கலாம். ஆனால், ஹோட்டலுக்குத்தான் அழைத்துப் போகிறார். இருப்பினும் முரட்டு அப்பாவாக தன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சங்கவி. கணவன் வெறுக்கும் பையன் மீது அதிக பாசம் காட்டும் அம்மாவாக சில காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். பாசத்தோடு மட்டும் படம் நகரக் கூடாது என்பதற்காக ராஜாஜ், நைனா சர்வார் காதல் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். முறைப் பெண்ணைக் காதலிப்பதற்காக அவர் கஷ்டப்படுவது கொஞ்சம் ஓவர்தான். அதற்கு சிறுவன் கிருபாகரன் உதவி என்பதெல்லாம் கொஞ்சம் வரம்பு மீறிய காட்சிகள். இப்படியான யதார்த்த படங்களுக்குள் அவற்றைத் தவிர்த்திருக்கலாம் இயக்குனர் தனராம். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கூட அந்தந்த கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள்.

நடராஜன் சங்கரன் இசையில் பின்னணி இசை ஓகே. இது மாதிரியான படங்களில் இரண்டு, மூன்று சூப்பர் ஹிட் பாடல்கள் இருந்திருந்தால் அது படத்திற்கு மேலும் பலத்தைக் கொடுத்திருக்கும். ஒளிப்பதிவாளர் விஜயன் முனுசாமி கிராமத்தை அதன் இயல்பான அழகுடன் படமாக்கியிருக்கிறார்.

'கொளஞ்சி' கதாபாத்திரத்தை மட்டும் சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்து அந்தக் கதாபாத்திரத்திற்கான பிரச்சினை என்ன தீர்வு என்ன என்பதோடு படம் இருந்திருந்தால் இன்னும் நெகிழ்வாக இருந்திருக்கும். ஆனால், காதல், கணவன் மனைவி பிரச்சினை என மேலும் சில கூடுதல் பிரச்சினைகள் சேர்ந்ததால் மையத்தை விட்டு படம் நகர்ந்து எங்கெங்கோ சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில பல காட்சிகள் இதற்கு முன் வெளிவந்த சில படங்களை ஞாபகப்படுத்துகிறது. 8வது வரை எந்த மாணவ, மாணவிரும் பெயில் ஆக்கப்பட மாட்டார்கள். ஆனால், 'கொளஞ்சி'யும் அவனது நண்பனும் பெயில் ஆகிறார்கள். இப்படி சில இடங்களில் இயக்குனர் கவனக் குறைவுடன் காட்சி அமைத்திருக்கிறார். இருப்பினும் ஒரு கிராமத்தில் 2 மணி நேரம் இருந்துவிட்டு வரும் ஒரு உணர்வு வருகிறது. அதைக் கொடுத்ததற்கு இயக்குனரைப் பாராட்டலாம்.

கொளஞ்சி - குறும்பும், மருந்தும்...

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement