Advertisement

சகா

நடிப்பு - சரண், பிருத்வி, கிஷோர், ஸ்ரீராம், பாண்டி மற்றும் பலர்
தயாரிப்பு - செல்லி சினிமாஸ்
இயக்கம் - முருகேஷ்
இசை - ஷபிர்
வெளியான தேதி - 1 பிப்ரவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 1.75/5

தமிழ் சினிமாவோ, வேறு எந்த மொழி சினிமாவோ சிறுவர்கள், சிறுமியர்களைப் பற்றிய கதை என்றால் மிக மிக கவனமாகப் படமாக்கப்பட வேண்டும். ஏதோ ஒரு விஷயம் படம் பார்க்கும் அந்த வயதுக்காரர்களைக் கவர்ந்துவிட்டால் அது நல்லதாக இருந்தால் பரவாயில்லை, கெட்டதாக இருந்தால் அதன் பலனோ, பாவமோ யாரைச் சேரும்.

வித்தியாசம் என்ற பெயரில் இந்தப் படத்தில் இளம் குற்றவாளிகளை கதையின் கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் இடைவேளை வரை சிறுவர்களுக்கான சிறையிலேயே படம் நகர்கிறது. ஒரு காட்சியில் கூட அது ஒரு சீர்திருத்தப் பள்ளியும்தான் என்ற விதத்தில் காட்டவில்லை. சினிமாவுக்காக தன் வசதிக்கேற்றபடி மேலும் சில காட்சிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் முருகேஷ்.

அனாதைகளான சரண், பாண்டி இருவருமே ஒன்றாக வளர்ந்தவர்கள். அவர்களை வளர்த்த அம்மாவைக் கொன்றவர்களை பதிலுக்கு கொன்று விட்டு சிறைக்குள் வருகிறார்கள். வந்த இடத்தில் பெண்களைக் கடத்தி விற்கும் பிருத்வியின் பகையைச் சம்பாதித்துக் கொள்கிறார்கள். பாண்டியை சிறைக்குள்ளேயே கொன்று விடுகிறார் பிருத்வி. விடுதலையாகி வெளியிலும் சென்றுவிடுகிறார். தன் நண்பனைக் கொன்றவனை சிறையிலிருந்து தப்பித்து கொல்ல வேண்டும் எனத் துடிக்கிறார். சிறைக்குள் கிடைக்கும் புது நண்பன் கிஷோருடன் சிறையிலிருந்து தப்பிக்கிறார். சரண், பிருத்வியை பழிக்குப் பழி வாங்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் கதையை யார் மீது நகர்த்த வேண்டும் என்பதில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறிப் போயிருக்கிறார். சரண், கிஷோர், ஸ்ரீராம் என மூவர் மீதும் மாறி மாறிப் பயணிக்கிறது. சரண் தான் படத்தின் நாயகன் போலத் தெரிந்தாலும் மற்றவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

'வடசென்னை' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக நடித்தவர்தான் சரண். இந்தப் படத்திலும் 'வடசென்னை' கதாபாத்திரம் போலவே குட்டி ரவுடியாக நடித்திருக்கிறார். சிறு வயதிலேயே 'பசங்க' படத்தில் யதார்த்த நடிப்பால் மிரட்டியவர்கள் கிஷோர், ஸ்ரீராம். இந்தப் படத்தில் கிஷோர் கொஞ்சம் அப்பாவியாகவும், ஸ்ரீராம் பழி வாங்கத் துடிக்கும் கோபக்காரராகவும் நடித்திருக்கிறார்கள். பிருத்விதான் படத்தின் வில்லன். பரவாயில்லை, வில்லத்தனத்தில் நன்றாகவே முறைக்கிறார். படத்தில் நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை.

சிறை வார்டன் ஆக தீனா. வழக்கம் போல உருட்டி மிரட்டுகிறார். பெரிய ஹீரோக்களையே மிரட்டுபவர், இந்தப் படத்தில் சின்னப் பசங்களை மிரட்ட வேண்டும். அதை அதிகமாகவே செய்கிறார், பதிலுக்கு அவர்களிடமும் அடி வாங்குகிறார்.

பாடல்கள் அடிக்கடி வந்து போகின்றன. பின்னணி இசை பரவாயில்லை, சில காட்சிகளில் மட்டும் இரைச்சலாக ஒலிக்கிறது. ஷபிர் பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார்.

கிளைமாக்சுக்கு முன்பாக மட்டும் எதிர்பாராத டிவிஸ்ட்டை வைத்திருக்கிறார்கள். திரைக்கதையை சுற்றி வளைக்காமல், நேரடியாகச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சிறு வயதில் தவறு செய்வது எவ்வளவு தவறானது, கொடுமையானது, அதனால் எப்படிப்பட்ட கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற விதத்தில் படத்தில் கொஞ்சம் பாடமும் எடுத்திருக்கலாம். இருப்பினும் முன்னணி நடிகர்களை எதிர்பார்க்காமல் வளரும் இளம் நடிகர்களை வைத்து இந்தப் படத்தைக் கொடுக்க முயற்சித்ததற்கு பாராட்ட வேண்டும். இயக்குனர் முருகேஷ் அடுத்த படத்தில் கவனத்துடன் செயல்பட்டால் ஒரு இடம் நிச்சயம் கிடைக்கும்.

சகா - சாகா நட்பு

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement