dinamalar telegram
Advertisement

சாவி

Share

நடிப்பு - பிரகாஷ் சந்திரா, சுனுலட்சுமி, உதயபானு மகேஷ்வரன், ராஜலிங்கம், நந்தலாலா மற்றும் பலர்
இயக்கம் - இரா. சுப்பிரமணியன்
இசை - சதீஷ் தாயன்பன்
தயாரிப்பு - தி பார்க்லேன்ட்
வெளியான தேதி - 5 ஜனவரி 2018
நேரம் - 1 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் பலருக்கும் நாயகனாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிலருக்கு மட்டும்தான் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

சினிமாவில் யார் வேண்டுமானால் நடிக்க வரலாம், அதே சமயம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதையும், கதாபாத்திரங்களும் சிறப்பாக இருந்தால் புதுமுக நடிகர்களும், வளரும் நடிகர்களும் ஒரு நாள் நல்ல நிலையை அடைவார்கள்.

இதற்கு முன் 'முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம்' ஆகிய படங்களில் நடித்த பிரகாஷ் சந்திரா இந்த 'சாவி' படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். 'அறம்' படத்தில் ஆழ்துளைக் குழாயில் விழுந்த குழந்தையின் அம்மாவாக பரிதவிப்பை வெளிப்படுத்திய சுனுலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

மதுரைப் பின்னணியில் நடக்கும் கதை. நடைபாதையில் சாவி செய்து விற்கும் கடை வைத்திருப்பவர் பிரகாஷ் சந்திரா. அவருக்கும் ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் சுனுலட்சுமிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. ஒரு வீட்டில் நடக்கும் கொள்ளையில் பிரகாஷ் சந்திரா சிக்க வைக்கப்படுகிறார். அடுத்து அவருடைய அண்ணனையும் யாரோ கொலை செய்து விடுகிறார்கள். இதனால், தலைமறைவாக இருக்கும் பிரகாஷ் சந்திரா, கொள்ளை, கொலைக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறார். இதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

மதுரை, மதுரை தெருக்கள், மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்துப் பக்கம் என படத்தின் கதைக் களத்தைப் பொருத்தமாகப் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் இரா. சுப்பிரமணியன்.

படத்தில் நடித்துள்ள பிரகாஷ் சந்திரா, சுனுலட்சுமி இருவருமே அவர்களது கதாபாத்திரத்தில் அப்படியே ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல படத்தில் வில்லனாக நடித்துள்ள ராஜலிங்கம், அவருக்கு உதவியாக இருந்து பிரகாஷ் சந்திராவிடம் சிக்கிக் கொள்பவர், இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் உதயபானு மகேஷ்வரன், பிரகாஷ் சந்திராவின் அண்ணனாக நடித்திருப்பவர், கான்ஸ்டபிள் ஆக நடித்திருக்கும் நந்தலாலா, என அனைவருமே சினிமாத்தனமில்லாத முகங்களாக யதார்த்தமான மனிதர்களாகவே தெரிகிறார்கள். அதிலும் சுனுலட்சுமியின் அப்பாவாக நடித்திருப்பவர் நிஜமாகவே குடித்துவிட்டு நடித்திருப்பார் போலிருக்கிறது, அவ்வளவு பொருத்தமாக நடித்திருக்கிறார். கதாபாத்திரங்களுக்காகவும், அதற்கான பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்ததற்காகவும் இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.

இந்த மாதிரியான சிறிய பட்ஜெட் படங்களும் திரையுலகினராலும், திரை ரசிகர்களாலும் கவனிக்கப்பட வேண்டும். பெரிய நடிகர்கள், பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் படங்களை மட்டும் பார்க்காமல் உண்மையிலேயே சினிமா மீதுள்ள காதலால் எடுக்கப்படும் படக்குழுவினருக்கு ரசிகர்கள் ஆதரவு தரலாம்.

'சாவி' படத்திற்குப் போனால் மாட்டிக் கொள்வோம் என்று யோசிக்காமல் ரசித்துவிட்டு வரலாம்.

சாவி - தியேட்டர்கள் திறக்கட்டும்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement