Advertisement

எங்க காட்டுல மழை

Share

நடிப்பு - மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புகுட்டி, அருள்தாஸ் மற்றும் பலர்.
இயக்கம் - ஸ்ரீ பாலாஜி
இசை - ஸ்ரீ விஜய்
தயாரிப்பு - வள்ளி பிலிம்ஸ்
வெளியான தேதி - 3 ஆகஸ்ட் 2018
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்

தமிழ் சினிமாவில் வளரும் நடிகர்களை வைத்து படங்களை இயக்கும் போது கதையிலும், திரைக்கதையிலும் அதிக கவனம் செலுத்தினால் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். அல்லது படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களாவது இனிமையாக அமைந்து ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வர வைக்க வேண்டும்.

'குள்ளநரிக் கூட்டம்' என்ற ஒரு சுவாரசியமான படத்தைக் கொடுத்த இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கியிருக்கும் படமா 'எங்க காட்டுல மழை' என யோசிக்க வைக்கிறது. அந்தப் படத்தில் ஒரு அழகான குடும்பம், சுவாரசியமான காதல், நம்ப முடியாததாக இருந்தாலும், நடந்தாலும் தவறில்லை என சொல்லக் கூடிய கிளைமாக்ஸ் என தன் முதல் படத்தில் முத்திரை பதித்திருந்தார்.

ஆனால், இந்தப் படத்தில் கதையிலும் சரி, கதாபாத்திரத் தேர்விலும் சரி இயக்குனரின் கணிப்பு தவறாகியிருக்கிறது. படத்தில் நடித்துள்ள அனைவருமே நடித்துத் தள்ளுகிறார்கள். அதிலும் குறிப்பாக நாயகனும், நாயகியும் மீட்டருக்கு மேலேயே நடித்திருக்கிறார்கள். திரைக்கதையிலும் சுவாரசியமில்லை, பரபரப்பில்லை. நகைச்சுவையாக சொல்ல வரும் விஷயங்கள் கூட சிரிப்பை வர வைக்கவில்லை.

'குள்ளநரி'யால் கவர்ந்த இயக்குனர் காட்டில் கோட்டை விட்டுவிட்டது வருத்தம் தான். மதுரையிலிருந்து நண்பனைத் தேடி சென்னைக்கு வருகிறார் மிதுன். சில பல தேடல்களுக்குப் பிறகு நண்பன் அப்புக்குட்டியைக் கண்டுபிடிக்கிறார். இன்ஸ்பெக்டர் அருள்தாசுடனான ஒரு முன்பகையில் அவரிடமிருந்த ஒரு பையைத் திருடி விடுகிறார் மிதுன். வீட்டிற்கு வந்த பார்த்தால் அதில் டாலர் நோட்டுகள் கத்தை கத்தையாக இருக்கின்றன. பையை, தங்கியுள்ள பாழடைந்த வீட்டில் மறைத்து விட்டு, சில கட்டுக்களை மட்டும் எடுத்துக் கொண்டு ரூபாயாக மாற்ற ஐதராபாத் செல்கிறார்கள் மிதுனும், அப்புக்குட்டியும். திரும்பி வந்து பார்த்தால் அவர்கள் தங்கியிருந்த பாழடைந்த வீடு காவல் நிலையமாக மாறியுள்ளது. வீட்டினுள் இருக்கும் பணப் பையை அவர்கள் எடுக்க வேண்டும். அதே சமயம் பணத்தை அருள்தாசிடம் பறி கொடுத்த டாலரைக் கடத்தும் கும்பலும் அந்தப் பணத்தைத் தேடுகிறது, அருள்தாசும் தேடுகிறார். யார் கையில் அந்த பை கிடைத்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த மிதுன் இந்தப் படத்தில் தனி கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். தோற்றத்திலும், நடிப்பிலும் விமலை ஞாபகப்படுத்துகிறார். காட்சிக்குக் காட்சி தான் நடிக்கிறோம் என்பதை ஓவர் நடிப்பில் வெளிப்படுத்தி சோதனை செய்கிறார்.

நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணனும், மிதுனுக்கு சளைக்காமல் போட்டி போட்டு நடிக்கிறார்.

தேசிய விருது பெற்ற அப்புக் குட்டி தோற்றத்திலும் இளைத்து நடிப்பிலும் இளைத்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் அருள்தாசுக்கு மெயின் வில்லனை விட அதிக முக்கியத்துவம். படத்தில் இரண்டு நாய்கள் மனதுக்குள் பேசிக் கொள்வதாகக் காட்டுவதெல்லாம் வித்தியாசம் என்ற போர்வையில் ஓவராகத் தெரிகிறது.

ஸ்ரீவிஜய் இசையில் எந்தப் பாடலும் மனதில் இடம் பிடிக்கவில்லை. ஒரு சில வரிகளில் கதையாகப் பார்த்தால் நன்றாகத் தெரிகிறது. ஆனால், எங்கெங்கோ சுற்றிச் செல்லும் திரைக்கதையும், சுவாரசியமற்ற காட்சிகளும் காட்டில் கண்ணைக் கட்டிவிட்டது போல இருக்கிறது.

எங்க காட்டுல மழை - தூறல் கூட இல்லை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement