dinamalar telegram
Advertisement

டூரிங் டாக்கீஸ்

Share

தினமலர் விமர்சனம்
இளையராஜா இசையில், எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் திரைப்படம், இன்டர்வெல்லுக்கு முன் ஒரு கதை, இன்டர்வெல்லுக்கு பின் ஒரு கதை... என இரண்டு வெவ்வேறு கதைகள் கொண்ட ஒரே திரைப்படம், அதில் ஒருகதையில் முதல்முறையாக நடிகர் விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தனது 74 வயதில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம்... என ஏகப்பட்ட பெருமைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் டூரிங் டாக்கீஸ்.
முதல் கதைப்படி, 74 வயதான எஸ்.ஏ.சி., 24 வயது இளைஞரின் மனநிலை கொண்டவர். தன் இளம் பிராயத்து காதலால், கல்யாணம் செய்து கொள்ளாமல் சிகரெட், தண்ணி என ஜாலியாக வாழும் அவருக்கு ஏகப்பட்ட வியாதிகள். ஆனாலும், அதையும் தாண்டி தன் காதலியை ஒருமுறையாவது பார்த்துவிட்டு உயிரை விட வேண்டுமென்பது ஆசையாக, லட்சியமாக இருக்கிறது. தன் காதலி சிம்லாவில் இருப்பதாக கேள்விப்பட்டு, தன் இளம் பிரயாத்து காதலையும், காதலியையும் தேடி தன் உயிர் போகும் உடல் நிலையையும் பொருட்படுத்தாது, காதலியின் இளம் பிராயத்து புகைப்படத்துடன் சிம்லா போகும் ஏஸ்.ஏ.சந்திரசேகர், அங்கு காதலியை கண்டாரா.? இல்லையா..? என்பது தான் டூரிங் டாக்கீஸ் படத்தின் முதல் கதை! இந்த கதையுடன் எஸ்.ஏ.சி., இளம் பிரயாத்து காதலை அபி சரவணன், பாப்ரிகோஷ் ஜோடி நடிக்க ஆங்காங்கே காட்சிப்படுத்தி அதை ரசிகர்களுக்கு பிளாஷ்பேக் விருந்தாக்கி இருப்பதில் இயக்குநராக ஜெயித்திருக்கிறார் எஸ்.ஏ.சி.,
அதேநேரம், எஸ்.ஏ.சியின் நண்பர் மனோபாலாவுக்கு வயதான எஸ்.ஏ.சியின் காதலியை சிம்லாவில் எப்படி அடையாளம் தெரிந்தது? அதை எஸ்.ஏ.சியை தேடி வந்து எப்படி சொல்ல முடிந்தது (எஸ்.ஏ.சி.க்கு தான் காதலிக்கு எத்தனை வயதானாலும் அவரது காதலியின் பேசும் கண்களை பார்த்து கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டென்றால், எஸ்.ஏ.சி.யிடமே காதலியின் இளம்வயது ஒரே ஒரு பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் மட்டுமே இருக்கும் சூழலில் மனோபாலாவால் இவரது காதலியை எப்படி கண்டுபிடிக்க முடிந்தது என்பது ஆச்சர்ய அபத்தம்!).
அதுபோகட்டும், தன்னிடம் பிக்பாக்கெட் அடித்த இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு காதலியை சிம்லாவில் தேடும் எஸ்.ஏ.சி., அந்த பிக்பாக்கெட் இளைஞர்களிடம், தன் இளம் பிரயாயத்தில் காதலிக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து முதன் முறையாக சல்லாபித்த கதையை தனது 74 வயதில் கூச்ச நாச்சமில்லாமல் உளறிக் கொட்டுவது மேலும் அபத்தமாக இருக்கிறது. சரி இதுவும் கடந்து போகட்டும்... என படம்பார்த்தால், இறுதியில் எஸ்.ஏ.சி. தன் காதலியை முழு மூச்சாக தேடிக்கண்டு பிடித்து அவர் கையில் தான் இளம் பிரயாத்தில் வாங்கிய மோதிரத்தை கொடுத்துவிட்டு, அந்த காதல் பாட்டி அம்மாவின் பேரன் பேத்திகள் கண் எதிரிலேயே, அந்த அவரது கைகளில் உயிரை விடுவது பற்றியும்... அந்தபாட்டியின் குடும்ப உறவுகள் பற்றியும் எஸ்.ஏ.சி.யே கவலைப்படவில்லை... ரசிகர்களும் கவலைப்படாதிருந்தால் சரி!
இது எல்லாவற்றுக்கும் மேல் தன் காதலியை, அவரது அப்பா துப்பாக்கியை காட்டி மிரட்டி எஸ்.ஏ.சி.யுடனான திருமணத்தை தடுத்து, அந்த ஊரையே காலி செய்து கொண்டு போன கதை எல்லாம் எஸ்.ஏ.சி.க்கு எப்படி தெரியும்.? அது எஸ்.ஏ.சி. ப்ளாஷ்பேக்கில் எப்படி விரியும்...? என யாரும் கேட்காமல் இருந்தால் டூரிங் டாக்கீஸின் முதல் கதை... தூள் டக்கராக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்!
டூரிங் டாக்கீஸின் இரண்டாவது கதை இண்டர்வெல்லுக்கு முந்தைய கதைக்கு நேர் எதிர்பக்க கதையாகும்! செல்வி 5ம் வகுப்பு எனும் இந்தப்படத்தின் கதையும், காட்சிப்படுத்தலும் தான் டூரிங் டாக்கீஸ் படத்திற்கு கொடுத்த காசிற்கு நமக்கு ஆறுதல் தரும்படி அம்சமாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறதென்றால் மிகையல்ல!
கீழ்ஜாதி ஏழை குடும்பத்தில் பிறந்த கதாநாயகி, பெரிய குடும்பத்துடன் மோதி ஜெயிக்கும் பீரியட் பிலிம்மாக உருவாகி இருக்கும் இப்படம் நிச்சயம் ரசிகர்களை உலுக்கி எடுத்துவிடும்! ஆனால் டூரிங் டாக்கீஸின் இண்டர்வெல்லுக்கு அப்புறம் காட்சிப்படுத்தப்படும் இப்படத்தை காண டூரிங் டாக்கீஸின் முதல் கதையை கண்ட ரசிகர்கள் முழுதாக இருக்க வேண்டும்... அவ்வாறு அமைதியாக இருப்பார்களா.? என்பதே நம் கேள்வி.?!
தனி ஒரு மனுஷியாக பெரிய குடும்பத்தை எதிர்த்து கதாநாயகி சுனு லக்ஷ்மியின் போராட்டம், தன் மகளுடன் 5ம் வகுப்பு படிக்கும் மாணவியை கற்பழிக்கும் ரோபோ ஷங்கரின் கொடூரம், பெரியவர் ஆடுகளம் ஜெயபாலனின் காமம், தொலைக்காட்சி நிருபர்கள் அஸ்வின்-காயத்ரியின் துணிச்சல், செவ்வாளை, சாய் கோபியின் திருட்டுக்கு துணைபோகும் ஜாதீயம், தாசில்தாரையே உயிரோடு மண்ணில் புதைக்கும் அப்பனையும், அவன் சகாக்களையும் சுட்டுதள்ளும் சிறுமியின் தைரியம்... என இப்பட நட்சத்திரங்களின் நடிப்பாலும், இயக்குநரின் காட்சிப்படுத்தலாலும் பிரேம் டூ பிரேம் மின்னுகிறது டூரிங் டாக்கீஸின் இரண்டாவது கதை!
ஆனாலும், மூத்திரத்தை குடிக்கும் பாணங்களில் கலப்பதும், மலத்தை சாப்பாடு ஆக்குவதும் ஜாதி முதலாளிகளை பழிவாங்க படம் பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை... ஒடுக்கப்பட்ட ஜாதியினரை கேவலப்படுத்துவதாகவே தெரிகிறது. ஏன் இப்படி.? இயக்குநருக்கே வௌிச்சம்!
இப்படத்தின் முதல்கதையில் டாக்டராக வரும் ஏ.வெங்கடேஷில் தொடங்கி இளம் காதலி ஹேமா எனும் காதநாயகி, பாப்ரி ஜோஷ், பாட்டி காதலி ஹேமமாலினி, இளம் காதநாயகர் அபி சரவணன், கதையின் நாயகர் எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட எல்லோரும் இரண்டாவது கதையில் வரும் பாத்திரங்கள் போன்றே நடிப்பிலும் துடிப்பிலும் பளிச்சிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அருண் பிரசாத்தின் ஔிப்பதிவு, இளையராஜாவின் இசை உள்ளிட்ட பிளஸ் பாயிண்டுகள், எஸ்.ஏ.சி.,யின் இயக்கத்தில் இரண்டாவது கதையில், டூரிங் டாக்கீஸை தூக்கி நிறுத்தியிருக்கின்றன.
மொத்தத்தில், டூரிங் டாக்கீஸ் - முன்பாதி டுமீல் - பின்பாதி டக்கர் டாக்கிங்ஸ்
கல்கி சினி விமர்சனம்
ஒரு படத்தில் இரண்டு கதையை சொல்லி ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர். முதல் படத்தில் ஆன்டனி... 75 வயது ஆன எஸ்.ஏ.சி. தன் காதலியைத் தேடி சிம்லா வருகிறார். வழிநெடுக அவர் காதல் நினைவுகள், இளமைக்கால காதலியாக கல்கத்தா நாயகி 'பர்பி கோஸ்' இளமை பொங்க இளமை நாயகன் 'அபி சரவணனுடன்' அடிக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.
எஸ்.ஏ.சி. இறந்து விடுவார் என்ற சஸ்பென்ஸ் வைத்து, காதலியைத் தேடும் பயணத்தில் காதலியைப் பார்த்ததும் உயிர் விடும் காட்சிகள் மனத்தை கனமாக்குகிறது. ஒளிப்பதிவாளர் அருண்பிரசாத் சிம்லா அழகை அள்ளி வந்துள்ளார்.
அடுத்து இரண்டாவது கதை, 'செல்வி 5ம் வகுப்பு' கொண்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் நடக்கும் கதை. ரோபோ சங்கரும், செவ்வாழையும், சாய் கோபியும், ஆடுகளம் ஜெயபாலும் அந்தக் கிராமத்தில் வைத்ததுதான் சட்டம்.
கிராமத்தில் வாழும் பூங்கொடிக்கு அவர் தங்கை 'செல்வி'தான் உலகம். அந்தச் செல்வியை ரோபோ சங்கரும், சாய் கோபியும் கெடுத்து தூக்கிப் போட, பூங்கொடி வெகுண்டெழுந்து எப்படிப் பழிவாங்குகிறார் என்பதே இன்னொரு கதை.
புதுமுக நடிகை 'சனுலட்சுமி' பூங்கொடியாக வந்து அற்புதமாக நடிப்பைத் தந்துள்ளார். படம் இளையராஜாவின் இசையால் நிற்கிறது. பாரதியாரின் பாடலான 'நெஞ்சு பொறுக்குதில்லையே' பாடல் அருமை. வசனம் எழுதிய கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்டலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement