Load Image
Advertisement

இந்திய திரையிசையின் “கலைவாணி” பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்

இந்திய திரையிசையின் “கலைவாணி” பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் 1. “மீரா ஆப் மாடர்ன் இந்தியா” என அழைக்கப்படும் கலைவாணியின் பூரண அருள் பெற்ற கானக் குயில் பாடகி வாணி ஜெயராமின் 78வது பிறந்த தினம் இன்று… 2. கலைவாணி என்ற இயற்பெயரை கொண்ட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், தமிழ்நாட்டிலுள்ள வேலூரில் 1945ல் நவம்பர் 30 அன்று பிறந்தார். 3. இவர் சிறுமியாக இருந்தபோதே இவருடைய தாயார், இவரை ரங்க இராமானுஜ அய்யங்கார் என்பவரிடம் வாய் பாட்டு பயிற்சிக்காக சேர்த்துவிட, அவரிடம் சில முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளை கற்றறிந்தார். 4. கர்நாடக இசையை கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி ஆர் பாலசுப்ரமணியம் மற்றும் ஆர் எஸ் மணி ஆகியோரிடம் கற்று, தனது 8வது வயதில் அகில இந்திய வானொலியில் அனைவரும் அறியும்படி தனது முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார். 5. சென்னை 'குயின் மேரிஸ் கல்லூரி'யில் தனது பட்டப் படிப்பை படித்து முடித்த வாணி ஜெயராம், சென்னை பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி பணியாளராக தனது முதல் பணியை ஆரம்பித்தார். 6. தனது திருமணத்திற்குப் பிறகு 60களின் பிற்பகுதியில் மும்பைக்கு இடம் பெயர்ந்து, மும்பை பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோதே, இவரது இசை ஆர்வத்தை நன்கு அறிந்த இவரது கணவர், இவரை ஹிந்துஸ்தானி இசை பயில வலியுறுத்தி அதன் வாயிலாக உஸ்தாத் அப்துல் ரஹ்மான்கான் என்பவரிடம் ஹிந்துஸ்தானி இசையையும் பயின்றார். 7. தனது விடாப்பிடியான, கடுமையான பயிற்சிக்குப் பின், 1969ஆம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சியை பொது மேடையில் நிகழ்த்தினார். இதற்குப் பின் வங்கிப் பணியிலிருந்து விடுபட்டு, இசையை தனது முழுநேரப் பணியாக மாற்றிக் கொண்டார். 8. இதே காலகட்டத்தில் புகழ் பெற்ற ஹிந்தி இசையமைப்பாளர் வசந்த் தேசாய் அறிமுகம் கிடைக்க, அவர் இசையமைப்பில் வெளிவந்த மராத்தி ஆல்பம் ஒன்றில் பாடகர் குமார் கந்தர்வ் என்பவரோடு இணைந்து பாடும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றார். 9. 1971ஆம் ஆண்டு வசந்த் தேசாய் இசையமைப்பில் இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வெளிவந்த “குட்டி” என்ற ஹிந்தி திரைப்படத்தில் இவர் பாடிய “போலே ரே பப்பி ஹரா” என்ற பாடல் இவருக்கு பின்னணிப் பாடகி என்ற அந்தஸ்தை வழங்கியதோடு, இவரது திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனைப் பாடலாகவும் அது அமைந்தது. 10. 1973ம் ஆண்டு தமிழில் எஸ் எம் சுப்பையா நாயுடுவின் இசையில் “தாயும் சேயும்” என்ற படத்தில் தனது முதல் பாடலை பாடினார். ஆனால் படம் வெளிவரவில்லை. அதே ஆண்டில் சங்கர்-கணேஷ் இசையமைப்பில் “வீட்டுக்கு வந்த மருமகள்” என்ற திரைப்படத்திற்காக பாடகர் டி எம் சௌந்தரராஜனோடு இணைந்து இவர் பாடிய “ஓரிடம் உன்னிடம் நான் கேட்பது” என்ற பாடலே இவர் தமிழ் திரைப்படத்திற்காக பாடிய முதல் பாடலாக அமைந்தது. 11. தொடர்ந்து இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில், எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த “சொல்லத்தான் நினைக்கிறேன்” என்ற திரைப்படத்தில் இவர் பாடியிருந்தாலும், எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த “தீர்க்க சுமங்கலி” திரைப்படத்தில் இவர் பாடிய “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடல்தான் இவரை தமிழ் திரையிசையில் வெகுவாக பேச வைத்த பாடலாக அமைந்தது. 12. மீண்டும் 1975ஆம் ஆண்டு கே பாலசந்தர், எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் கவிஞர் கண்ணதாசன் கூட்டணியில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில் இவர் பாடிய “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்” என்ற பாடல் இவருக்கு தேசிய விருதினை பெற்றுத் தந்தது. 13. 1977ஆம் ஆண்டு இயக்குநர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த “புவனா ஒரு கேள்விக்குறி?” என்ற திரைப்படத்தில் பாடகர் பி ஜெயச்சந்திரனோடு இவர் இணைந்து பாடிய “பூந்தென்றலே நல்ல நேரம் காலம்” என்ற பாடல்;தான் இசைஞானி இளையராஜாவின் இசையில் இவர் பாடிய முதல் பாடல். 14. இதற்குப் பின் இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த ஏராளமான படங்களில் பல வெற்றிப் பாடல்களை தந்து தமிழ் திரையிசை ரசிகர்களின் நெஞ்சம் நிறைந்திருக்கின்றார் வாணி ஜெயராம். 15. தமிழில் எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன், சங்கர்-கணேஷ், ஜி கே வெங்கடேஷ், வி குமார் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை ஜாம்பவான்களின் இசை வார்ப்புகளில் ஏராளமான பாடல்களை பாடிய வாணி ஜெயராம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசையமைப்பிலும் “வண்டிச்சோலை சின்ராசு” என்ற திரைப்படத்தில் பாடியிருக்கின்றார் என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று. 16. தனது நீண்ட நெடிய திரையிசைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒரியா, குஜராத்தி மற்றும் பெங்காளி என அனைத்து மொழிகளிலும் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கின்றார். ஏராளமான பக்திப் பாடல்களும் தனி ஆல்பங்களாக இவரது குரலில் வெளிவந்திருக்கின்றன. 17. “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்” என பாடி, நம் இதயச் சுரங்கத்துள் எத்தனையோ கேள்விகளை எழுப்பி பறந்து சென்ற அந்த கானக் குயிலின் பிறந்த தினமான இன்று அவரை நினைவு கூர்வதில் நாம் பெருமை கொள்வோம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement