Advertisement

20 ஜவான்கள் கொலைக்கு பதிலடி என்ன?

மக்கள் தொகையில் உலகின் நம்பர் 1 நாடான சீனாவும் நம்பர் 2 நாடான இந்தியாவும் போரில் இறங்குமோ என்று உலக நாடுகள் கவலையுடன் பார்க்கின்றன. நமது வீரர்கள் 20 பேரின் உயிரை பறித்த சீனாவை சும்மா விடக்கூடாது என்று இந்தியா முழுவதும் மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆனால், இந்திய ராணுமம்தான் எல்லை தாண்டி வந்து நமது வீரர்களை கொன்றது என சீன அரசு பொய் பிரசாரம் செய்வதால், சீன மக்களும் கொதித்து போயிருக்கிறார்கள். மூன்று ஜவான்கள் மட்டும் கொல்லப்பட்டதாக நேற்று வந்த முதல் தகவல்கள் கூறின. மோசமாக காயம் அடைந்த மேலும் 17 பேர் லடாக்கின் ஜீரோ டிகிரிக்கும் குறைவான குளிரை தாங்க முடியாமல் மரணம் அடைந்ததாக இரவில் தகவல் கிடைத்தது. மரண எண்ணிக்கை இன்னும் ஏறலாம் என்கிறார்கள். நமது மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை மொத்தமாக சொந்தம் கொண்டாடுகிறது சீனா. அந்த எல்லையில் 1975 ல் நடந்த சண்டையில் இந்திய ஜவான்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அதன் பிறகு இந்த 45 ஆண்டுகளில் ஒரு உயிரை கூட இந்தியா பறி கொடுக்கவில்லை. முந்தாநாள் இரவில் நடந்தது துப்பாக்கி சண்டை அல்ல. பாறை துண்டுகளாலும் இரும்பு கம்பிகளாலும் இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர் என்று தகவல்கள் கசிகின்றன. சீன தரப்பில் 43 பேர் மரணம் அடைந்ததாக சில செய்திகள் உலா வருகின்றன. அத்தனை பேர் இறந்து போயிருந்தால் சீனாவில் மக்களின் ரியாக்ஷன் இன்னும் மோசமாக இருந்திருக்கும் என நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர். பலியான உயிர்களுக்கு சீனா பதில் சொல்லிதான் ஆக வேண்டும். ஆனால், சீனாவின் பலத்தோடு ஒப்பிடும்போது இந்தியா உடனடியாக ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்க முடியாத நிலைதான் இருக்கிறது. ஆனால் வேறு வழிகள் இருக்கின்றன. குறிப்பாக பொருளாதார வழி. அடுத்தது டிப்ளமேடிக் சேனல் என்று சொல்லப்படுகிற சர்வதேச ராஜதந்திர வழி. கொரோனா வருகைக்கு பிறகு பல வகையிலும் நெருக்கடிகளை சந்திக்கும் சீனா, ஆயுத பலத்தை பயன்படுத்தி அத்தனை பிரச்னைகளில் இருந்தும் மக்களின் கவனத்தை திருப்ப நினைக்கிறது. அதற்கு இந்தியா இடம் தர கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா-சீனா எல்லைக்கோடு 3,440 கிலோ மீட்டர் நீளமானது. இதில் பெரும்பாலான இடங்களில் பிரச்னை இல்லை. ஆனால் மேற்கே காஷ்மீரில் தொடங்கி கிழக்கே அருணாச்சல் வரையில் ஏற்கனவே 38,000 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சீனா, இந்த மூன்று மாதத்தில் லடாக்கில் புதிதாக 60 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. அதாவது, இத்தனை காலமாக இந்திய ராணுவம் ரோந்து போய் கொண்டிருந்த ஏரியாவில் திடீரென சீனா தனது படைகளையும் ஆயுதங்களையும் குவித்து முகாம்கள் அமைத்து விட்டது. அங்கிருந்து சீனப்படையை காலி செய்யும் முயற்சியில்தான் இப்போது நமக்கு இந்த இழப்பு நேர்ந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே சீனாவின் தந்திரம் இதுதான். நாலைந்து இடங்களை திடீரென ஆக்கிரமிப்பது. இந்தியா அதை பிரச்னையாக்கி சண்டை போட்டதும், ஒரு இடத்தை கைவசம் வைத்துக் கொண்டு மீதி இடங்களில் படையை வாபஸ் பெறுவது. அந்த ஒரு இடம் என்பது ராணுவ ரீதியாக நமக்கு மிகவும் முக்கியமான இடமாக இருக்கும். மேடான பகுதியாக அல்லது தாராளமாக தண்ணீர் கிடைக்கும் பகுதியாக இருக்கும். இப்படியே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆக்கிரமிப்புகள் செய்து கபளீகரம் செய்வது சீனாவின் உலகறிந்த தந்திரம். தென் சீன கடலிலும் இதே வேலையை செய்கிறது. கப்பல் கப்பலாக ரப்பிஷ் கொட்டி புதிதாக தீவுகளை உருவாக்கி, அங்கு படைகளையும் கண்காணிப்பு முகாம்களையும் அமைத்து சிறு நாடுகளை மிரட்டுவது அதன் பழக்கம். நம்மை தவிர 13 நாடுகளுடன் எல்லையை ஷேர் செய்கிறது சீனா. கிட்டத்தட்ட எல்லா நாடூடனும் இதே பிரச்னை இருக்கிறது. அவை சிறு நாடுகள் என்பதால் வாய் அளவில் எதிர்ப்பு காட்டுவதோடு முடிந்து போகிறது. இந்தியாவிடம் அப்படி முடியாது என்பதை சீனா உணரத்தான் போகிறது. என்றாலும் அதற்கு சில காலம் ஆகும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement