Advertisement

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகமாக செய்து வருகிறது உள்ளாட்சித் துறை.

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகமாக செய்து வருகிறது உள்ளாட்சித் துறை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு முன் நின்று, நோயைப் போக்க சுகாதார துறை பாடுபடும்போது, நோயாளி என்ற ஒரு நிலையை மக்கள் எட்டிவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முன்னணியில் நிற்கிறது உள்ளாட்சி துறை. தமிழக உள்ளாட்சி துறையில், நான்கு லட்சத்துக்கு அதிகமானோர் பணி புரிகின்றனர். கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில், போர் வீரர்கள் போல தெருவுக்கு தெரு பம்பரமாக சுழன்று அந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி, பல இடங்களில் அவர்களுக்கு பாத பூஜை செய்து, மக்கள் பெருமைப்படுத்தி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், கொரோனா வைரஸ் தடுப்புக்காக கிருமி நாசினி தெளித்துக் கொண்டிருந்த மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் சுப்புராயலு சொல்கிறார்: “ நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனே, சென்னை மாநகராட்சி ஊழியர்களை அழைத்துப் பேசினார் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி. 'கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை உடனடியாக கண்டறிய வேண்டும்; அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்; தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களை கண்டறிய, வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதையெல்லாம் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கும் கொரோனாவை தமிழகத்தில் இருந்து முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், உள்ளாட்சி துறைதான் முன் நின்று களத்தில் பணியாற்ற வேண்டும். ஏற்கனவே புயல், வெள்ளம், பெரு மழை காலங்களில் பணியாற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் ஆர்வத்தோடு, இதையும் செய்து முடிப்பீர்கள் என முதல்வர் பழனிசாமியிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன். என் வாக்கை காப்பாற்ருவீர்கள் தானே?' என கேட்டார். எல்லோரும் ஒரே குரலில், 'செய்து முடிப்போம்' என கூறினோம். அதை தொடர்ந்துதான், உலகில் எந்த மாநகராட்சியும் செய்யாத பணிகளை, சென்னை மாநகராட்சியில் துவங்கினோம். இது, மாநகராட்சியை கடந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்கிறது. சென்னை முழுவதும் வீடுவீடாக சென்று, ஒவ்வொருவரின் உடல் நிலை குறித்த விவரங்களை, மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வருகின்றனர். கூடவே, விழிப்புணர்வு பிரசாரமும் செய்கின்றனர். இதனால், வீட்டை விட்டு மக்கள் வெளியேறுவது குறைந்துவிட்டது. வீட்டு வீட்டுக்கு ஆய்வுப் பணிக்காக செல்லும் மாநகராட்சி ஊழியர்கள், குறிப்பிட்ட நபருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால், அவர்களுக்கு உடனடியாக, மருத்துவ உதவி செய்து கொடுக்கின்றனர். சென்னையிலுள்ள பதினைந்து மண்டலங்களிலும், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கென்று, 15,000 பணியாளர்களை நியமித்துள்ளது. 30 நாட்களுக்குள், இந்த ஆய்வு பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றனர். வேறு எந்த மாநிலத்திலும், மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு செய்யவில்லை. இதை கேள்விப்பட்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கும் இதை பின்பற்ற உத்தரவிட்டிருக்கிறார். இது எங்களுக்குப் பெருமை” என்கிறார் அவர். உள்ளாட்சி துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதும், அவரை தனிமைப்படுத்தி, அவருக்கு தேவையான உணவுக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம். கூடவே, தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறியும் ஆய்வும் நடக்கிறது. ஒவ்வொரு தெருவிலும், முக்கிய சாலைகளிலும் தீயணைப்பு துறையுடன் இணைந்தும், தனியாகவும் கிருமி நாசினி தெளிப்பு பணியை மேற்கொண்டுள்ளோம். பணிகள் அனைத்தையும் அமைச்சர் வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதுபற்றி மாநகராட்சியை மக்கள் எளிதில் தொடர்பு கொண்டு தேவைகளை தெரிவிக்க, தொடர்பு மையமும் அதற்கென தனி செயலியும் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து விட்டது. மக்கள் எல்லோரும் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால், ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீரும் கூடுதலாக செலவாகிறது. தண்ணீர் த்ட்டுப்பாடு வராமல் தடுக்கவும் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார். கொரோனா தடுப்பு முயற்சிகளில் சுகாதார துறை அட்டகாசமாக செயல்படுகிறது என்று விஜயபாஸ்கர் பெயர் வாங்கி விட்டார். அவரை விட நானும் என் துறையும் முனைப்புடன் செயல்படுகிறோம் என காட்டிக் கொள்ள வேலுமணி வேகமான களமாடுகிறார். இது ஆரோக்யமான போட்டி என்பதால் இருவருக்கும் சேர்த்தே ஓ போடலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement