கோவில் நிலங்களுக்கு இலவச பட்டா கூடாது: கலெக்டரிடம் மனு
கரூர்: ’கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்கக் கூடாது’ என, பூஜாரிகள் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் சதீஸ் கண்ணன், கலெக்டர் அன்பழகனிடம் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஹிந்து கோவில்களில், கும்பாபிஷேகம், தினமும் பூஜை போன்ற திருப்பணிகள் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காக, கோவில்களை கட்டியவர்கள் மற்றும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, நிலம் போன்ற சொத்துகளை கோவில் களுக்கு தானமாக வழங்கினர்.
அரசின் ஹிந்து அறநிலையத் துறை மூலம் அவற்றை பாதுகாத்து பாராமரிக்க வேண்டும். இதை விடுத்து உரிமையாளர்கள் போல், கோவில் நிலத்தை விற்கவோ, தானமாக வழங்கவோ கூடாது. கோவில் இடங்களில் குடியிருப்பவர் களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலம், கோவில் நிலம் இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.
இதனால், எந்த நோக்கத்திற்காக தானம் அளிக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதைக்கப்படும். எனவே, கோவில் சொத்துகளை தானமாகவோ அல்லது இலவச பட்டா வழங்கவோ அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.