பழநி: முருகப்பெருமானின் மூன்றாம்படை வீடு என அழைக்கப்படுவது பழநி மலை. இதன் அடிவாரத்தில் அமைந்துள்ளது திருவாவினன்குடி கோயில். இக்கோயில் புராதன தலம் ஆதிக் கோயிலாகும். நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் இத்தலத்து முருகனை வாழ்த்திப் பாடியுள்ளார். முருகன் மயில்மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அருணகிரிநாதரால் ஜெபமாலை தந்தருளிய திருஆவினன் குடிப்பெருமாள் என, பன்னிரென்டு திருப்புகழ் பாடல்களை பாடப்பெற்றது இத்தலம். பழநியில் பங்குனி உத்திர விழா இக்கோயிலில் நடக்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க திருவாவினன் குடி கோயிலில் மட்டும்தான், ஒரே இடத்தில் (திரு)மகாலட்சுமி, (ஆ) காமதேனு, சூரியன் (இனன்), பூமாதேவி (கு), அக்னி(டி) ஆகிய ஐந்து தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர், என்பது கூடுதல் சிறப்பு. கோயிலில் உட்பிரகாரம் தெற்கு பகுதியில் சன்னதி உள்ளது. கார்த்திகை, பங்குனி உத்திரம், தமிழ்ப் புத்தாண்டு போன்ற தினங்களில் வெள்ளிக்கவசம் சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. கோடை விடுமுறைதான் விட்டாச்சே... குழந்தைகளுக்கு ஆன்மிக சுற்றலாவுக்கு ஏற்ற இடமும் கிடைச்சாச்சு. அப்புறம் என்னங்க... குடும்பத்தோடு நடையை கட்டுங்க... இல்லையில்லை... வண்டிய கட்டுங்க... குழந்தை வடிவில் முருகனை மட்டுமின்றி, மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி தேவன் ஆகியோரை ஒரே இடத்தில் நின்று தரிசித்து வளம், நலம் பெறுங்கள். கோயில் காலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். விழாக்காலங்களில் அதிகாலை 4:00 முதல் நடைதிறக்கப்படும். இரவு நடை சாத்தப்படும் நேரம் மாறுபடும். விபரங்களுக்கு: 04545 - 242 493ல் பேசலாம்.