Advertisement

ராமாயணம் பகுதி-5

அந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தரை நோக்கித் தாழ்ந்தது. மீண்டும் ஆவலுடன் மேலெழுந்து தணிந்தது. அவள் செக்கச் சிவந்த அழகு. அவன் கார்மேனியன். கருப்பும் நீலமும் கலந்தவன். அந்த செம்பொன் மேனியளை நம் அண்ணல் நோக்க அவளும் நோக்கினாள். கண்கள் கலந்து விட்டால் மனங்களும் ஒன்றிணைந்து விட்டதாகத்தானே அர்த்தம். யார் அவள் என்று உங்களுக்கு சொல்லாமலே தெரிந்திருக்குமே! அவள் தான் மிதிலைநகர் இளவரசி ஜனகபுத்ரி சீதாதேவி. ராமன் அவ்விடத்தை கடந்து ஜனகரின் அரண்மனைக்கு விஸ்வாமித்திரருடன் சென்றடைந்தான். ஜனகர் விஸ்வாமித்திரரையும், அவருடன் வந்த தசரத குமாரர்களையும் அன்புடன் வரவேற்றார். தன் புத்ரிகள் சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் திருமணம் செய்ய வேண்டிய மாபெரும் கடமை தம்முன் இருப்பதை விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தார். பெண்ணைப் பெற்றவன் ஏழையாய் இருந்தால் என்ன... பணக்காரனாக இருந்தால் என்ன? தன் மகளுக்கு ஒரு குணவான் அமைய வேண்டும். எந்த கெட்ட வழக்கமும் இருக்கக்கூடாது. மகளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பலசாலியாக இருக்க வேண்டும், தெய்வப்பற்றுள்ளவனாக இருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணுவது சகஜம்தானே! ஜனக மகாராஜாவும் இதே கவலையில் தான் இருந்தார். போதாக்குறைக்கு சிவபெருமானால் அருளப்பட்ட சிவதனுசு என்னும் வில்லும் அவரிடம் இருந்தது. அதை ஜனகரைத் தவிர வேறு யாராலும் அசைக்கக்கூட முடியாது. அதை யார் ஒருவன் தூக்கி நாணேற்றி அம்பெய்கிறானோ, அனனுக்கே தன் மகளை மணம் முடித்துக் கொடுப்பேன் என்பது ஜனகரின் நிபந்தனை. ஏன் இந்த நிபந்தனை? ஜனகர் ஒருமுறை யாகம் ஒன்றைச் செய்தார். ஒரு கலப்பையால் யாககுண்டம் அமைப்பதற்கான நிலத்தை உழுதபோது, கலப்பை ஏதோ ஒரு இடத்தில் தட்ட, அவ்விடத்தை அகழ்ந்து பார்த்த போது, அங்கே அழகிய பெண் குழந்தையைக் கண்டார். அவளே சீதா. அவள் லட்சுமியின் அவதாரமல்லவா? அவளை கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர வேறு யாரால் திருமணம் செய்ய இயலும்? எனவே தான் சிவபெருமான் சிவதனுசுவை ஜனகரிடம் கொடுத்து, இதை யாரால் தூக்க இயலுகிறதோ அவளுக்கே இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி மறைகிறார். இங்கே கிருஷ்ண பரமாத்மா மானிட வடிவெடுத்து, ராமனாய் பூமிக்கு வந்துள்ளார். தன் தேவியை அடைய இங்கு வந்திருக்கிறார். அவர் பூமியில் பிறக்கிறார் என்றால் வைகுண்டத்தில் அவரைத் தன் மடியில் சுமந்திருக்கும் ஆதிசேஷனுக்கு என்ன வேலை? கிருஷ்ணா! நானும் உன்னோடு பூமிக்கு வருகிறேன், என்கிறான் ஆதிசேஷன். அவனைத் தம்பி என அழைக்கும் கிருஷ்ணர், சேஷாத்திரி! நீ பூமியில் என் தம்பி லட்சுமணனாய் பிறப்பாய் என்கிறார். அடுத்து சங்கு, சக்கரங்கள் ஓடி வந்து கேவிக்கேவி அழுகின்றன. ஆதிசேஷனும், நீங்களும் பூமிக்கு போன பிறகு எங்களுக்கென்ன வேலை? நாங்களும் உங்களோடு வருகிறோம், என கண்ணீர் சிந்தினர். அவர்கள் தன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த பகவான் விஷ்ணு, சங்குநாதா! நீ பரதன் என்ற பெயரில் என் தம்பியாய் வருக, சக்கரத்தாழ்வாரே! நீ சத்ருக்கனன் என்ற பெயரில் கடைக்குட்டி தம்பியாய் வருக, என அருள்பாலித்தார். இவர்கள் அனைவரும் தசரத குமாரர்களாக அவதரித்தனர். நான்கு சகோதரர்களுக்கு வெவ்வேறு குடும்பங்களில் பெண் எடுத்தால் பிரச்னை தானே மிஞ்சும்! எனவே ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தால் நல்லது தானே என்று விஸ்வாமித்திரர் நினைத்திருக்கக்கூடும். அவர் முற்றும் உணர்ந்த ஞானியல்லவா? ஆம்! ஜனகரின் தம்பி குசத்வஜன். அவர் சாங்காஸ்யா தேசத்து அரசர். அவரையும் விஸ்வாமித்திரர் நினைவில் வைத்திருந்தார். அவருக்கும் இரண்டு புத்திரிகள். மாண்டவி, சுருதகீர்த்தி என்னும் திருநாமம் கொண்டவர்கள். இவர்கள் பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் நிச்சயிக்கப்பட்டால், ஒற்றுமையான சகோதர, சகோதரிகள் பிரியவே மாட்டார்கள் என்பது அவரது கணிப்பு. இதெல்லாம் இருக்கட்டும்! முதலில் போட்டியில் வென்றாக வேண்டுமே! ராமனால் மட்டும தான் அந்த வில்லில் நாணேற்ற முடியும் என்பதை விஸ்வாமித்திரர் அறிந்து தானே வைத்திருந்தார். ஜனகரிடம் அவர் தன் விருப்பத்தைச் சொன்னார். ஜனகா! வில்லில் நாணேற்றும் போட்டிக்கு ஏற்பாடு செய். யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளட்டும். நான் வந்திருக்கும் இந்த சமயத்தில் போட்டி நடந்தால் மிகவும் மகிழ்வேன், என்றார். ஜனகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். பல நாட்டு வில்லாதி வில்லர்களெல்லாம் வந்தனர். சிவதனுசுவை அசைக்கக்கூட முடியாமல், அவமானத்தால் தலையை தொங்க விட்டுக் கொண்டு சென்றனர். இச்சமயத்தில், ராமனை தன் கண்ணசைவால் ஏவினார் விஸ்வாமித்திரர். அவரது குறிப்பை உணர்ந்த ராமன், பீடு நடை போட்டு சிவதனுசின் அருகில் சென்றார். வில்லுக்கு மரியாதை செலுத்தினார். ஒற்றைக் கையால் தூக்கினார். நாணை இழுத்தார். அவரது பலத்தில் பாதிக்கும் குறைவாகவே அந்த வில் அமைந்திருந்தது. நாணை இழுக்கவும் மிகப்பெரிய ஓசையுடன் இரண்டாக ஒடிந்தது. அந்த ஓசை இடி ஓசைக்கும் மேலானது. உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ஓசை கேட்டு ஒரு கணம் நடுங்கி விட்டன. ஜனகர், விஸ்வாமித்திரர், லட்சுமணன் நீங்கலாக அங்கு கூடியிருந்த அரசர்கள் கூட நடுங்கி விட்டார்கள்.ஜனகராஜனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வில்லொடித்த வாலிபனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மகளுக்கேற்ற மணாளன் கிடைத்த மகிழ்ச்சி அடங்க வெகுநேரம் ஆயிற்று. சீதைக்கும் இத்தகவல் எட்டியது.என் மனதுக்கு பிடித்த அந்த அழகரா சிவதனுசை ஒடித்தார்? அவள் கண்களில் காதல் பார்வை பொங்கியது.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement