Advertisement

கன்னி: அர்த்தாஷ்டம சனி கவனமா இருங்க இனி

Share

நீதிவழி தவறாமல் நடக்க விரும்பும் கன்னி ராசி அன்பர்களே!

சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருந்து நன்மை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக பொருளாதார வளம் கொடுத்து, முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றிருப்பார்.
தற்போது 4-ம் இடத்திற்கு சனிபகவான் அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. அர்த்தாஷ்டம சனி என்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு, ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். சனி, சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பான இடத்தில் விழுகிறது.

குரு பகவான் இப்போது ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ஆனால் 2018 பிப்.14-ல் 3-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது நன்மை பெற இயலாது. குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது, முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. வீடு, தொழில் நடைமுறையில் தேவையற்ற மாற்றம் ஏற்படலாம். இருப்பினும் இந்த காலக்கட்டத்தில் குருவின் 5,7 மற்றும் 9-ம் இடத்து பார்வை சிறப்பான இடத்தில் விழுகின்றன. இதனால் கெடுபலன்கள் குறைந்து நன்மை மேலோங்கும்.

ராகு தற்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான, கடகத்தில் இருப்பது சிறப்பான இடம் ஆகும். அவர் பொருளாதாரத்தில் வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். கேது தற்போது 5-ம் இடமான மகரத்தில் இருக்கிறார். இந்த இடத்தில் இருக்கும் போது அரசு வகையில் பிரச்னை ஏற்படலாம். பயணபீதி, திருட்டு பயம் ஏற்படலாம்.

2018 ஜனவரி – 2019 பிப்ரவரிபெண்களால் நன்மை காண்பீர்கள். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. சமூகத்தில் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஆடம்பர வசதி அதிகரிக்கும். கணவன், -மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வீடு, -மனை வாகனம் வாங்க யோகமுண்டாகும். 2018 பிப்.14க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படலாம். கணவன், -மனைவி விட்டுக்கொடுத்து போக வேண்டும். குரு பகவான் 2018 ஏப். 9 -முதல் செப். 3- வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைஅறிந்து நிறைவேற்றலாம்.

தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் இடையே ஒற்றுமை மேம்படும். ஆனால் அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிது. பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சக பணியாளர்களின் மத்தியில் திறமை பளிச்சிடும். சிலருக்கு முக்கிய பொறுப்பு, பதவி கிடைக்கும். 2018 பிப். 14 க்கு பிறகு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. அளவுக்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். குரு பகவான் 2018 ஏப். 9- முதல் செப்.3- வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை உண்டாகும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தொடர்ந்து கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவியும், பணமும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு இனி கடந்த காலத்தில் இருந்த தேக்கநிலை இருக்காது. மேல் வகுப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
குருபகவானின் வக்ர காலத்தில் சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள் புதிய தொழில் நுட்பம் மூலம் நல்ல மகசூலை பெறுவர். நவீன இயந்திரம் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும்.
பெண்கள் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். குருபகவான் வக்ரத்தில் நன்மை மேலோங்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுபநிகழ்ச்சி இனிதே கைகூடும். உடல்நிலை சீராக இருக்கும்.

2019 மார்ச் – 2020 மார்ச் ராகு கடகத்தில் இருந்து 10ம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார். கேது, மகரத்தில் இருந்து 4ம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். இது சுமாரான நிலையே. பொருள் இழப்பு, சிறு உடல் உபாதையை ராகு கொடுப்பார். பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். கேது 4-ம் இடத்திற்கு வருகிறார். அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிக்கலாம்.

குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். சுபவிஷயத்தில் தடை ஏற்படலாம். சமூக மதிப்பு சுமாராக இருக்கும்.

வியாபாரத்தில் லாபம் மிதமாக கிடைக்கும். திடீர் செலவால் வீண் விரயம் ஆகலாம். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். எதிரி வகையில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய வியாபார முயற்சி தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினால் போதும்.

பணியாளர்களுக்கு கடந்த காலத்தை விட வேலைப்பளு அதிகரிக்கும். பணி விஷயமாக அலைச்சல் உண்டாவதை தவிர்க்க முடியாது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை முயற்சியின் பேரில் கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால் தான் வளர்ச்சி காண்பர்.
விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். பெண்கள் திருப்திகரமாக வாழ்வு நடத்துவர்.
குடும்பநலனுக்காக கடினமாக பாடுபட வேண்டியதிருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கையில் கவனமாக இருப்பது நல்லது. கேதுவால் உடல் உபாதை வரலாம்.

2020 ஏப்ரல் – டிசம்பர் இந்த காலத்தில் குருபகவான், தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு மாறுவதால் நற்பலன் கொடுப்பார். குடும்பத்தில் குதூகலமான அனுபவம் உண்டாகும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பொருளாதாரத்தை படிப்படியாக அதிகரிக்க செய்வார். பெண்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் குடும்பத்தேவை பூர்த்தியாகும். கணவன்,- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். உறவினர் வகையில் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை உண்டாகும். சிலருக்கு வீடு, மனை வாங்க யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கணினித் தொழில், அச்சுத் தொழில், பத்திரிகை, தரகு, ஆன்மிகம் தொடர்பாக தொழில்கள் சிறப்பாக இருக்கும்.

பணியாளர்களுக்கு பதவி, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை.வேலை இன்றி இருப்பவர்கள், சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். 2020 ஜூலை 7- முதல் அக்.14- வரை வக்ரம் அடைகிறார். அப்போது சிலர் அதிக செலவை சந்திக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் புகழ், பாராட்டு கிடைக்க பெறுவர். மாணவர்கள் சிலர், வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர்.
விவசாயிகள் நிலம் வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரப்பாடல்:

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு
அங்க முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

பரிகாரம்:
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம்
● தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு அர்ச்சனை
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 
Advertisement