Advertisement

ராமாயணம் பகுதி - 11

அவள் சாட்சாத் கைகேயியே தான். வீரப்பெண்மணியான அவளைத் திருமணம் செய்ததற்காக அப்போது தசரதர் பெருமைப்பட்டார். வீட்டில் சமையலும் செய்யாமல், வேலைக்கும் போகாமல் வெட்டியாய் உட்கார்ந்திருக்கும் மனைவிக்கே நம்மவர்கள் என்ன வேணுமடி கேளடி என்று கேட்பார்கள். இங்கே உயிரையே காப்பாற்றி இருக்கிறாள் இந்த உத்தமி. விடுவாரா தசரதர். கண்ணே! என்ன வேணும் கேளடி? என்றார். கைகேயிக்கு அப்போது ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. ஆனாலும், ஒன்றைச் சொல்லி வைத்தாள். அன்பரே! இப்போதைக்கு நான் வேண்டுவது ஒன்றுமில்லை. ஆனால், என் வாழ்நாள் முடிவதற்குள் நான் என்றாவது ஒருநாள் உங்களிடம் நான் விரும்புவதைக் கேட்பேன். நீங்கள் மறுக்காமல் தர வேண்டும், தசரதர் சம்மதித்தார். ஒருவர் நமக்கு எவ்வளவு தான் நன்மை செய்தவர் ஆயினும் கூட, நம்மிடம் ஏதோ கோரிக்கை வைக்கிறார் என்றால் கேட்ட அன்றே செய்துவிட வேண்டும், அல்லது மறுத்துவிட வேண்டும். தாமதம் செய்வது நல்லதல்ல. ராமாயணம் எவ்வளவு பெரிய நீதிகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறது என்பதை கவனித்துக் கொண்டே படித்து வாருங்கள். ஆக, இரண்டு இடங்களில் தசரதர் சிக்கிக் கொண்டு விட்டார். ஒன்று கைகேயியிடம். மற்றொன்று கைகேயியின் தந்தையிடம். கூனி தொடர்ந்தாள். அடியே கைகேயி! நான் சொன்னது இப்போதாவது உனக்கு புரிகிறதா? உன் திருமணத்தின் போது உன் தந்தைக்கு தசரதர் கொடுத்த உறுதிமொழியைப் பயன்படுத்தி பரதன் நாடாள வேண்டும் என்று கேள். அவன் நிம்மதியாக அரசாள வேண்டுமென்றாள் ராமன் இங்கிருக்கக் கூடாது. அவனை 14 வருடங்கள் காட்டிற்கு போகச் சொல். இந்த இரண்டும் நடந்து விட்டால் அயோத்தியின் எஜமானி நீ தான்,. கள்ளமில்லா வெள்ளை உள்ளம் படைத்த கைகேயியின் உள்ளத்தில் இப்போது விஷம் பரவி விட்டது. ஆம் ! இந்த மந்தரை சொல்வது சரிதான். நம் தந்தைக்கு தசரதர் செய்து கொடுத்த சத்தியத்தை நினைவூட்டப் போகிறோம். நமக்கு தசரதர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லப் போகிறோம். எப்படிப் பார்த்தாலும் என் பக்கத்தில் தான் தர்மம் இருக்கிறது. அது மட்டுமல்ல, என் மகன் பரதனும் நாடாண்டால் தான் என்ன? ராமனுக்கு அவன் எவ்வகையில் குறைவு? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டாள். இறுதியில் திட்டத்தை நிறைவேற்றுவது எப்படி என்று சிந்தித்தாள். மந்தரை அவளது மன ஓட்டத்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அடியே! உன் மணாளன் இன்னும் சற்று நேரத்தில் வருவார். நீ என்ன சாதாரணமான அழகுள்ளவளா? உன்னிடம் உலகத்து அழகெல்லாம் கொட்டிக் கிடக்கிறது. அதை முழுதாகப் பயன்படுத்தினால் அவர் பெட்டிப்பாம்பாய் அடங்கி விட மாட்டாரா என்ன? உன் அழகில் லயித்துக் கிடக்கும் அந்த வேளையில் கோரிக்கையை எழுப்பு. இந்த நேரத்தில் உனக்கு மரகத மாலைகளையும், பொன்னையும், உனக்கு விருப்பமான பொருட்களையும் தந்து உன்னை வசப்படுத்தப் பார்ப்பார் தசரதர். இந்த தற்காலிக இன்பங்களுக்கு ஏமாந்து விடாதே. மந்த புத்தியுடன் இருக்காதே. நீ என்ன செய்வாயோ? ஏது செய்வாயோ? அழுவாயோ, புரள்வாயோ, எப்படியோ பரதனிடம் நாட்டை ஒப்படைக்கச் சொல்லி விடு, ராமன் காட்டிலிருந்து வருவதற்குள் பரதன் அயோத்தியை மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வான், என்றாள்.கைகேயி இப்போது முழுமையாக மாறி விட்டாள். அவள் கண்களில் இருந்து தசரதர் மறைந்தார். அயோத்தி மறைந்தது. மற்ற ராஜகுமாரர்கள் மறந்தனர். கவுசல்யா,சுமித்திரை ஆகிய தன் சகோதரிகள் மறந்தனர். நாட்டு மக்களை மறந்தாள். விவஸ்வான் முதல் தசரதர் வரை அயோத்தி மண்ணை ஆண்ட சரித்திரத்தை மறந்தாள். எல்லாமே அவளுக்கு மறந்து விட்டது. மந்தரை எல்லாம் புரிந்தவளாய் வெளியேறிவிட்டாள். கைகேயி வேஷத்திற்கு தயாரானாள். கோபத்தை வலுவில் வரவழைத்துக் கொண்டாள். அலங்காரத்தைக் கலைத்தாள். அழுக்கு புடவையை உடுத்தினாள். ஆபரணங்கள் ஆங்காங்கே பறந்தன. கூந்தலை கலைத்து தலைவிரிகோலமானாள். (பெண்கள் கூந்தலை விரித்துப் போடக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வது இதற்காகத் தான். குடும்பம் பிரிந்து போய்விடும் என்பது நம்பிக்கை). மகாராஜா தசரதர் கைகேயியின் அறைக்கு வந்தார். அவளது கோலம் அவரது புருவத்தை உயர்த்தியது. அந்தக் கோலத்திலும் கூட அவள் பேரழகியாகவே அவரது கண்ணுக்குத் தெரிந்தாள். காம உணர்வு கிளர்ந்தெழுந்தது அவருக்கு. மகாராணி! கைகேயி! இன்று உனக்கு என்னாயிற்று? நீ இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்து இப்படி இருந்ததே இல்லையே! உன் உடலுக்கு என்னம்மா? மருத்துவரை வரச் சொல்லட்டுமா? உனக்கு ஏதேனும் தேவையிருக்கிறதா? என்ன நடந்தது? அரண்மனையில் யாரேனும் உன்னை ஏதேனும் சொன்னார்களா? அவர்கள் யாரென்று சொல். அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறேன், என்று படபடவென பேசினார். காம உணர்வுடன் பேசும் ஒருவன் உளறத் தொடங்கி விடுவான். அவன் பேரரசனாக இருந்தாலும் சரி..., சமூகத்தின் கடைக்கோடியிலுள்ள சுப்பனாக இருந்தாலும் சரி.. இதற்கு யாருமே விதி விலக்கல்ல. கணவன் தன்னிடம் சரணடைந்து விட்டான் என்பதை கைகேயி நன்றாகவே புரிந்து கொண்டாள். அழுக்குப் பொதி போன்ற ஆடைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் இந்த உடலையே இவன் இப்படி ரசிக்கிறான் என்றால், இவனிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டாள். என் உடம்பெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. நான் சொல்லி நீங்கள் கேட்கவா போகிறீர்கள்? எனக்கு வேண்டும் சிலவற்றை உங்களிடம் கேட்கப் போகிறேன். நீங்கள் எனக்கு அதை தர வேண்டும். கைகேயி கொஞ்சலாக இதைச் சொல்ல, அந்தப்புரத்தில் அந்த அழகி வீசிய காமவலையில் சிக்கிக் கொண்ட தசரதர், கண்ணே! இதைக் கேட்கவா இவ்வளவு தயக்கம். நீ கேட்டு நான் என்றாவது இல்லை எனச் சொன்ன துண்டா? நீ கேட்பது உடனே கிடைக்கும், என்றார் தாபத்துடன். சிலந்தி பின்னிய வலையில் சிக்கிய ஈ தான் எங்கிருக்கிறோம் என்பதை அறிய முடியாத நிலையில் இருப்பது போல, நடக்கப்போவது தெரியாமல் பிதற்றிக் கொண்டிருந்தார் தசரதர்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement