dinamalar telegram
Advertisement

அரிவாள் தாய நாயனார்

Share

கணமங்கலம் என்னும் ஊர் சோழவள நாட்டின் செழிப்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ள வளம் பொருந்திய தலங்களிலே ஒன்றாகும் ! நீர்வளமும், நிலவளமும், இறைவளமும் ஒருங்கே அமையப் பெற்ற தலத்திலே தாயனார் என்னும் சிவனடியார் அவதாரம் செய்தார். இவர் வேளாண் மரபைச் சேர்ந்தவர். சிவனடியார் களிடத்துப் பேரன்பு மிக்க இத்தொண்டர், இறைவனுக்குச் சம்பா அரிசியின் அமுதும், செங்கீரையையும், மாவடுவையும் நிவேதனப் பொருட்களாகத் தினந்தோறும் தவறாமல் அளித்து வந்தார். தாயனார் கோவிலுக்குச் செய்துவந்த திருப்பணிகள் பலவற்றுள் இதை ஒரு முக்கியத் திருப்பணியாகக் கொண்டிருந்தார். இவரது மனைவியும் இவரைப் போலவே இறைவனிடம் பக்தி கொண்டிருந்தாள். கணவனும் மனைவியும் தெய்வப் பணியை மட்டுமே வாழ்க்கையில் முக்கியமாகக் கொண்டிருந்தனர் ! இவ்வாறு இறைவனுக்குத் தவறாமல் பணிபுரியும் இவ்வன்பர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக் கண்டு அடியார் சற்றும் மனம் தளரவில்லை. தாம் செய்துவரும் தெய்வத் திருப்பணியை மட்டும் எப்பொழுதும் போல் தவறாது செய்து வந்தார். வறுமை நாளுக்கு நாள் அதிகமாயிற்று. அந்த நிலையிலும் அடியார் சற்றுகூட மனம் தளரவில்லை. கூலி ஆட்களை வைத்து வேலை வாங்கிய நாயனார் கூலிக்கு நெல் அறுக்கும் பணியில் இறங்கலானார். கூலி வேலை செய்து கிடைக்கும் நெல்லில் செந்நெல்லைக் கோயில் நைவேத்தியத்துக்கும், கார்நெல்லை தம் உணவிற்கும் வைத்துக் கொள்வார். இங்ஙனம் வறுமையையும் ஒரு பொருமையாக எண்ணி வாழ்ந்துவரும் நாளில் இவருக்கு இறைவனின் சோதனை ஏற்பட்டது. தொண்டர்க்குக் கிடைத்த கூலி முழுவதும் செந்நெல்லாகவே கிடைத்தது. நாயனாருக்குப் பெருமிதம் தாங்கவில்லை. செந்நெல் முழுவதையுமே கோயிலுக்கு வழங்கினார். இதனால் இவரது குடும்பத்திற்கு அரிசி இல்லாமற் போனது. அடியார் கீரையைப் பக்குவம் செய்து சாப்பிடத் தொடங்கினார். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் வந்தது. அந்த சமயத்தில் அடியார் தண்ணீரைக் குடித்துக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டார். இறைவனுக்கு திருவமுது படைப்பதற்காகவாவது நல்ல செந்நெல் கிடைக்கிறதே என்ற மனக்களிப்போடு தமது கடமையைத் தவறாது நடத்தி வந்தார் அடியார். ஒருநாள் நாயனார் இறைவனுக்கு திருவமுது படைப்பதற்கான செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஓர் கூடையில் சுமந்துக்கொண்டு புறப்பட்டார். பசியால் ஏற்பட்ட சோர்வு அவரை மிகவும் வருத்தியது. அடியாருடன் அவரது மனைவியும் பஞ்சகவ்வியம் எடுத்துக்கொண்டு நடக்க முடியாமல் சென்று கொண்டிருந்தாள். நாயனார் பசியினால் நிலத்தில் விழப்போனார். அம்மையார் தாங்கிக் கொண்டார். கூடையில் சுமந்து வந்த நிவேதனப் பொருள்கள் கீழே விழுந்து சிதறின. நாயனார் மனம் கலங்கினார். திருவமுது தரையில் வீழ்ந்த பின்னர் திருக்கோயிலுக்கு சென்றுதான் என்ன பயன்? என்று எண்ணித் துடித்தார்.அடியார் உலகத்தில் உயிர் வாழவே விரும்பவில்லை. தம்மிடம் இருந்த அரிவாளால் கழுத்தை அரிந்துகொள்ள துணிந்தார்.அவரது பக்தியின் ஆவேசத்தைக் கண்டு உடன்வந்த மனைவியார் செய்வதறியாது திகைத்தாள். அவள் கழுத்தில் கிடக்கும் மாங்கல்யத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றியவாறு இறைவனை வணங்கி நின்றாள். அடியாரின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட அம்பலத்தரசன் தொண்டரைத் தடுத்தாட் கொண்டார். திருவமுது சிந்திய நிலவெடிப்பிலிருந்து உருத்திராக்ஷமாலையும், திருவெண்ணீரும் அணியப் பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது. அத்திருக்கரம் நாயனாரின் கையைப் பற்றியது. இறைவனின் ஸ்பரிசத்திலே மெய் உருகி நின்றார் நாயனார். அவர் கை நின்றும் அரிவாள் தானாக நழுவியது. லத்தில் இருந்து வெடுக் வெடுக் என்று ஒலி கேட்டது.அவ்வொலியைக் கேட்ட நாயனார் தான் நிலத்தில் கொட்டிய மாவடுவை எம்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அறிகுறியாகத்தான் இவ்வோசை கேட்கிறது என்று உணர்ந்து அகமகிழ்ந்தார். நினைத்த மாத்திரத்திலேயே எழுந்தருளி அடியார்கள் துயர்துடைக்கும் இறைவனின் திருவருட் கருணையை எண்ணி எண்ணி மனம் உருகிய நாயனாரும் அவர் மனைவியாரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அடியவரை ஆட்கொண்ட இறைவன் சக்தி சமேதராய்த் தம்பதியர்க்குப் பேரானந்த காட்சி அளித்தார். இறைவன் நாயனாருக்கும் அவர் தம் மனைவியாருக்கும் என்றென்றும் தம் அருகிலேயே இருந்து மகிழ்ந்து வாழும் பேரின்பப் பேற்றினை அருளினார். அரிவாளால் தம் கழுத்தை அரியத் துணிந்தமையால் இவருக்கு தாயனார் என்ற நாமத்துடன் அரிவாள் தாய நாயனார் என்னும் சிறப்பு திருநாமம் ஏற்பட்டது. அரிவாள் தாய நாயனாரும் அவரது மனைவியாரும் உலகில் நெடுங்காலம் வாழ்ந்து, இறைவனுக்குப் பற்பல அரிய திருப்பணிகளைச் செய்தனர். இருவரும் பிறவாப் பெருவாழ்வு பெற்று இறைவனின் திருவடி நிழலிலே ஒன்றினர்! குருபூஜை: அரிவாள் தாய நாயனாரின் குருபூஜை தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. எஞ்சாத வாட்டரயன் அடியார்க்கும் அடியேன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement