Load Image
Advertisement

ரிஷபம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025

கார்த்திகை; கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ராகு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும் சஞ்சரித்து வந்தார். கேது கார்த்திகை முதல் பாதத்தினருக்கு சப்தம ஸ்தான கேதுவாகவும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ருண ரோக சத்ரு ஸ்தான கேதுவாகவும் சஞ்சரித்து வந்தார். இதனால் முதல் பாதத்தினர் சங்கடங்களையும், 2,3,4 ம் பாதத்தினர் கேது பகவானால் எண்ணற்ற நன்மைகளையும் அடைந்து வந்தீர்கள். இந்த நிலையில் அக்.8,2023 அன்று நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறது?

உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு கேது பகைவர்கள் என்றாலும் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய ஸ்தானப் பலன்களை வழங்க வேண்டியவராகிறார்கள்.

கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ராகு விரய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஆறாம் இடத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஐந்தாம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேது நன்மை வழங்க கூடியவராகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகு லாபங்களை வழங்கும் நிலையிலும் சஞ்சரிக்கின்றனர்.

கார்த்திகை முதல் பாதத்தினர் உற்சாகமுடன் செயல்பட்டு, எதிர்ப்புகளை வீழ்த்தி, நினைத்ததை சாதித்துக் காட்டுவர். 2,3,4 ம் பாதத்தினர் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய உள்ளனர், சமூகத்தில் மதிப்பு உயரும் நிலை பெறுவர். வரவுகள் பல வகையிலும் வரும். தேவையனைத்தும் நிறைவேறும்.

சனி சஞ்சாரம்: ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் நாளில் மகரத்தில் வக்கிர நிலையிலும், அக்.23, 2023 அன்று வக்கிர நிவர்த்தியாகி ஆட்சியாகவும் சஞ்சரிப்பவர் டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து கார்த்திகை முதல் பாதத்தினருக்கு எதிர்பார்த்த லாபங்களையும் தொழிலில் முன்னேற்றம், செல்வாக்கை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் சில சங்கடங்களையும், பணியிடத்தில் பிரச்னைகளையும் ஏற்படுத்துவார். வருமானத்தில் தடை, எதிர்பாராத சங்கடத்தை அதிகரிப்பார். இக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்.

குரு சஞ்சாரம்: மேஷ ராசியில் ஏப்.30, 2024 வரை சஞ்சரிக்கும் குரு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம குருவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பதால் குழப்பம், செலவு, அலைச்சல் என்ற நிலை இருந்தாலும் அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்கிரம் அடைவதால் பாதகமான நிலைகள் மாறும். மே1, 2024 முதல் கார்த்திகை முதல் பாதத்தினருக்கு தன, குடும்ப குருவாகவும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாகவும் சஞ்சரிப்பதால் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் முன்னேற்றமான நிலையும், பொருளாதாரத்தில் வளர்ச்சியும் அடைவர். மற்ற பாதங்களில் பிறந்தவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும், வேலைப்பளு கூடும் என்றாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பருவ வயதினருக்கு திருமண யோகமும் உண்டாகும், நிதானித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.

பொதுப்பலன்: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு லாபச் சனியாலும் 6 மிட கேதுவாலும் காரிய அனுகூலம் ஏற்படும், மனதில் உற்சாகம் உண்டாகும், மே1, 2024 க்குப் பிறகு வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவாலும், தைரிய, லாப ஸ்தானங்களைப் பார்க்கும் கேதுவாலும் முயற்சிக்கேற்ற பலன் உண்டாகும், எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும், துணிச்சலாக செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள்.

தொழில்: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு லாபச் சனியாலும், 2, 3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவாலும் வருமானம் அதிகரிக்கும், தொழிலில் இருந்த தடை விலகும், புதிய முயற்சி வெற்றியாகும், ஏற்றுமதி. இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும், இன்டஸ்ட்ரியல், ஹார்ட்வேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் வணிகம் கை கொடுக்கும். எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

பணியாளர்கள்: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும், உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வேலையின் அவசரம் அறிந்து செய்து முடித்து நிர்வாகத்தின் நன்மதிப்பை அடைவீர்கள், மறைமுக தொல்லை விலகும்.
பெண்கள்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும், நட்பினால் நன்மை உண்டாகும், புதிய சொத்து சேர்க்கை ஏற்படும், உடலில் இருந்த சங்கடம் தீரும், பிற ஆண்களின் பழக்கத்தில் எச்சரிக்கை அவசியம்.

கல்வி: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஏப்.30, 2024 வரையிலும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.30, 2024 முதல் சிறப்பான பலன்கள் உண்டாகும், வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

உடல்நிலை: முன்பிருந்த பிரச்னைகள் மாறும், உற்சாகம் அதிகரிக்கும், சோர்வு விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

குடும்பம்: நெருக்கடி விலகும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும், முயற்சியின் காரணமாக விருப்பம் நிறைவேறும்.

பரிகாரம்:செவ்வாயன்று கேதுவை வழிபட்டு அர்ச்சனை செய்ய நன்மை அதிகரிக்கும்.
ரோகிணி; பொன் பொருள் சேர்க்கை

சந்திரன் ஆதிக்கத்தில், சுக்கிரன் ராசியில் பிறந்த உங்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டாக ராகு விரய ஸ்தானமான 12ம் இடத்திலும், கேது ருண ரோக சத்ரு ஸ்தானமான 6ம் இடத்திலும் சஞ்சரித்தனர்.

ராகு, கேது உங்கள் நட்சத்திர நாதனுக்கு பகைவர்கள் என்றாலும் உங்கள் ராசிநாதனுக்கு நட்பானவர்கள், 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து எதிர்பாராத அலைச்சல், விரயம், ஆடம்பரச் செலவை ஏற்படுத்திய நிலையில் 6ம் இடத்தில் சஞ்சரித்த கேது ஆரோக்கியம், தொழிலில் லாபம், வழக்கில் வெற்றி, எதிரி தொல்லையில் இருந்து விடுவித்தும் வந்தார்.

இந்த நிலையில் ராகு11 ம் இடமான லாப ஸ்தானத்திற்கும், கேது 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அக்.8, 2023ல் பெயர்ச்சியாகின்றனர்.

ராகுவின் 11 ம் இட சஞ்சாரத்தால் உங்கள் மனதிலுள்ள சங்கடங்கள் விலகும், நம்பிக்கை அதிகரிக்கும். சரியான திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்துவீர்கள். உங்கள் முயற்சி எல்லாம் சாதகமாக அமையும். அரசு வகையில் உதவி கிடைக்கும், தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும், தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக அமையும்.

கேதுவின் 5ம் இட சஞ்சாரத்தால் பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமாக வழக்குகள் ஏற்படும், இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை சிலருக்கு உண்டாகும். உறவினர்களுடன் பிரச்னை, மனக்கசப்பு தோன்றும். எதிலும் வீண் அலைச்சல் நீடிக்கும். பிள்ளைகளின் வழியில் சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

சனி சஞ்சாரம்: பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிப்பவர் அக்.23, 2023 அன்று வக்கிர நிவர்த்தியாகி உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். டிச.20, 2023ல் பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாவதால் தொழிலில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். பணியாளர்களுக்கு எதிர்பாராத பணி, இடமாற்றம் உண்டாகும். சிலர் மறைமுகமாக தொல்லை அளிப்பர். பணியில் வீண் பிரச்னைகள் தோன்றும்.

குரு சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு ஏப்.30, 2024 வரை 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வீண் செலவுகள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும், மதிப்பு, மரியாதைக்கு பாதிப்பு ஏற்படும். அக்.8. 2023 முதல் டிச.20, 2003 வரை வக்கிரம் அடைவதால் நன்மை உண்டாகும். மே1, 2023 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரித்தாலும் 5,7,9 பார்வையால் அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சிகள் வெற்றி பெறும். பூர்வீக சொத்து பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு நல்ல வரன் தேடி வரும், வேலைத் தேடுவோருக்கு தகுதியான வேலை ஏற்படும் குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

பொதுப்பலன்: பணியில் கவனம் செலுத்தி அதை முழுமையாக முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராகுவின் அருளால் நெருக்கடிகள் விலகும். வருமானத்தின் காரணமாக தாராளமாக செலவு செய்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். புதிய இடம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.

தொழில்: கம்ப்யூட்டர், திரைப்படம், தொலைக்காட்சி, மோட்டார் சாதனங்கள் தயாரிப்பு, வாகனங்கள் உற்பத்தி, தோல் தொழிற்சாலை, கிரானைட் தொழில்கள் முன்னேற்றம் அடையும், ஏற்றுமதி இறக்குமதி தொழில், விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: இயந்திரப் பணியாளர்கள், திரைப்பட, தொலைக்காட்சி ஊழியர்கள், கலைஞர்கள், பதிப்புத்துறைப் பணியாளர்களின் நிலை உயரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிர்வாகத்தின் முடிவிற்கேற்ப செயல்பட்டால் முன்னேற்றம் காணலாம்.

பெண்கள்: பணவரவு அதிகரித்தாலும் இதுவா அதுவா என்ற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகும், பிள்ளைகள் பற்றிய கவலைகள் தோன்றுவதுடன் தாய்வழி பாட்டனாரின் ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படும், எதிர்பாலினரிடம் விலகி இருப்பது நன்மையாகும்.

கல்வி: புத்தி ஸ்தானத்தில் கேது சஞ்சரித்து புதனின் காரகம் பெறுவதுடன், மே 1, 2024 முதல் குருபகவானின் பார்வையும் அங்கே பதிவதால் மாணவர்களின் கனவு நனவாகும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலைக் கேட்டு செயல்படுவதால் மதிப்பெண்கள் கூடும்/ விரும்பிய மேற்படிப்பில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: நீண்ட நாள் நோயிலிருந்து விடுதலை உண்டாகும். மருத்துவ செலவு குறையும்.

குடும்பம்: வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், பொருளாதார நெருக்கடி நீங்கும். பிள்ளைகளின் நிலையில் முன்னேற்றம் தோன்றும், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

பரிகாரம்: கீழப்பெரும்பள்ளம் கேதுவை தரிசியுங்கள். கேதுவுக்கு அதிபதியான விநாயகரை வழிபட்டால் வாழ்வு வளமாகும்.

மிருக சீரிடம்: லாபம் பாதி செலவு மீதி

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மிருகசீரிடம் 1 2 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவாகவும் சஞ்சரித்து வந்தார். கேது பகவான் 1, 2 ம் பாதத்தினருக்கு சத்ரு ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரித்து வந்தார். இதனால் 1, 2 ம் பாதத்தினர் கேதுவால் நன்மையும், 3,4 ம் பாதத்தினர் ராகுவால் நன்மையும் பெற்று வந்தீர்கள். இந் நிலையில் அக்.8, 2023 ராகு கேது பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது?

நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிட வேண்டியவராகிறார்கள்.

1, 2 ம் பாதத்தினருக்கு ராகு லாப ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது 1, 2 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2 ம் பாதத்தினருக்கு ராகுவாக வருவாயை வழங்க இருக்கிறார், செல்வாக்கை உயர்த்துவார். 2,3 ம் பாதத்தினருக்கு தொழிலின் மீது அக்கறையை உண்டாக்குவார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு முயற்சியில் வெற்றி தருவார்.

இந்த நேரத்தில் கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு எதிர்மறை பலனைத் தரும் நிலையில் உள்ளது. 1, 2 ம் பாதத்தினர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படலாம். அண்டை வீட்டார், உறவினருடன் பிரச்னை, மனக்கசப்பு வரலாம். வீண் அலைச்சல், பணச்செலவு, பிள்ளைகள் வழியில் சங்கடம் உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு மருத்துவ செலவால் கையிருப்பு கரையும். தொழிலில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும், பணியாளர்களுக்கு வேலையில் முழுகவனம் செலுத்த முடியாமல் போகும். தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். உடலில் கோளாறுகள் அடிக்கடி தோன்றும். மனதில் குழப்பம் அதிகமாகும். வீடு, வாகனத்தில் மராமத்து செலவு ஏற்படும்.

சனி சஞ்சாரம்: ராகு கேது பெயர்ச்சியின் போது அக்.23, 2023 வரை மகரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் சனி அதன்பின் வக்கிர நிவர்த்தியாகி டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். 1,2 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் 1,2 ம் பாதத்தினருக்கு தொழிலில் கூடுதல் கவனம் தேவை. 3,4 ம் பாதத்தினருக்கு லாபம் அதிகரிக்கும். வாழ்வில் உயர்வு உண்டாகும்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு, ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு செலவு, அலைச்சலை ஏற்படுத்துவார். மிதுன ராசியினருக்கு லாப குருவாகி வருமானத்தை பெருக்குவார். செல்வாக்கு உயரும். ஆனாலும் அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை வக்கிரமடைவதால் இதில் மாற்றம் உண்டாகும். மே1, 2023 முதல் ரிஷப ராசியினருக்கு ஜென்ம குருவாகவும் மிதுன ராசியினருக்கு விரய குருவாகவும் சஞ்சரிக்க இருப்பதால் ரிஷப ராசியினருக்கு அலைச்சல் மூலம் ஆதாயத்தையும், மிதுன ராசியினருக்கு செலவால் நெருக்கடியையும் ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்: நினைத்ததை சாதிப்பதற்காக துணிச்சலுடன் செயல்படும் உங்களுக்கு இக்காலத்தில் இரண்டு விதமான பலன்கள் உண்டாகும், ரிஷப ராசியினருக்கு ராகு நன்மைகளை வழங்குவார், கேதுவால் குழப்பம், சங்கடங்கள் அதிகரிக்கும், மிதுன ராசியினருக்கு தொழில் ரீதியாக ராகு சங்கடங்களையும், கேது நெருக்கடிகளையும் உண்டாக்குவார். சனி, குரு சஞ்சாரத்தால் முயற்சிகள் வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட லாபம் அதிகரிக்கும்.

தொழில்: ராகு ஒரு பக்கம் சனி மறு பக்கம் என்று உங்களுக்கு நன்மைகளை வழங்க இருப்பதால் தொழிலில் தடைகள் விலகும், விவசாயம், பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளர்கள், பில்டர்ஸ் ஆகியோர் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு புதிய தொழில் உண்டாகும்.

பணியாளர்கள்: வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப வருமானம் வரும். அலுவலகம் சார்ந்த ரகசியங்கள், மேலதிகாரிகள் பற்றிய குறைபாடுகளை உங்களுடன் பணிபுரிபவர்களிடம் கூறுவதால் சங்கடங்களுக்கு ஆளாக நேரும்.

பெண்கள்: பணியில் ஈடுபடுபவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சிலருக்கு உடல் நிலையில் சங்கடம், பிள்ளைகளால் பிரச்னைகள் தோன்றக்கூடும். ஆனாலும் விரைந்து கு தீர்வு காண முடியும். நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

கல்வி: ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் உயர்கல்வியில் சேர்வீர்கள். மருத்துவம், பொறியியல் துறையில் சேரும் கனவு நிறைவேறும். சிலர் அரசு தேர்வில் வெற்றி பெற்று உயர்வை எட்டுவர்.

உடல்நிலை: ரிஷப ராசியினருக்கு ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும். மிதுன ராசியினருக்கு சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதுடன், ஆயுள் ஸ்தானத்தின் மீது ராகுவின் பார்வை பதிவதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. சரியான உணவும் உறக்கமும் இக்காலத்தில் அவசியம், வாகன பயணத்தில் நிதானம் தேவை.

குடும்பம்: திட்டமிட்டு செயல்பட்டால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும், பிள்ளைகள் மீது பெற்றோரின் கண்காணிப்பு தேவை, வருமானம் தேவையான அளவிற்கு வரும். கடந்த கால பிரச்னைகள் இல்லாமல் போகும், சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் நிலை உண்டாகும். புதிய வாகனம், வீடு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும்.

பரிகாரம்: காளஹஸ்தியில் ராகு, கேது பரிகாரம் செய்வதுடன் சனிதோறும் சனீஸ்வரருக்கு தீபமேற்றுவது நல்லது.

Advertisement
Advertisement
 
Advertisement