காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் நேற்று காலை 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாள் நேற்று காலை ஏகாம்பரநாதர் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் 10 நாள் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் தினசரி காலை இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும், 30ம் தேதி வெள்ளி அதிகார நந்தி சேவையும் அன்று இரவு ஸ்ரீகைலாச பீட ராவண வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்க இருக்கிறது. 31ம் தேதி காலை ஏகாம்பரநாதர் ஏழவார் குழலி அம்பாள் மலர் அலங்காரத்தில் முன்னே செல்வர். அறுபத்து மூவர் நாயன்மார்கள் பின் தொடர்ந்து நான்கு ராஜவீதிகளில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வரும் 1ம் தேதி முக்கிய உற்சவமான திருத்தேர் திருவிழா நடக்கிறது. அன்று இரவு சுவாமிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. 4ம் தேதி சபாநாகர் தரிசனம் நடக்கிறது. 5ம் தேதி அதிகாலை பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், இரவு யானை வாகனத்தில் புறப்பாடுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவங்கம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்