திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி, ஆதிசேஷ தீர்த்த குளத்தில், உற்சவர் சந்திர சேகரர் – திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன்படி, 2016ம் ஆண்டிற்கு பின், கடந்த டிசம்பர் மா தம் பெய்த மழையில், கோவில் குளத்தில் 7 அடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கியது. இதையடுத்து, தெப்போற்சவம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து, 20க்கு 20 என்ற அடியில் தெப்பம் தயார் செய்தனர். நேற்றிரவு, உற்சவர் சந்திரசேகரர் – திரிபுரசுந்தரி அம்மன் விசேஷ மலர் அலங்காரத்தில், கயிலாய வாத்தியங்கள் முழங்க, தெப்பத்தில் எழுந்தருளினர். பின், பஞ்ச தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர், நீராழி மண்டபத்தை ஐந்து முறை வலம் வந்தனர். அப்போது, கூடியிருந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘தியாகேசா ஒற்றீசா...’என விண்ணதிர முழங்கினர். தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமியை, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் நாராயணன் ஆகியோர் தரிசனம் செய்தனர். பின், தியாகராஜ சுவாமி பிரமாண்ட மலர்அலங்காரத்தில் எழுந்தருளி, சாம்பிராணி துாப மிட, கையிலாய வாத்தியங்கள் முழங்கிட, மாடவீதி உலா உற்சவம் வந்தார்.