Load Image
Advertisement

மீனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023

பூரட்டாதி: சனி பகவான் உங்களின் இருபத்தி ஆறாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குருவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். உழைப்பால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். விடாமுயற்சியால் நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைக்கு கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுவீர்கள். கடினமாக முயற்சி செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதே சமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.

தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.
பணியாளர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் ஓரளவே நன்மை உண்டாகும். சக ஊழியர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது அதிக கவனத்துடன் செயல்படவும். கூட்டுத்தொழில் புரிவோர் சற்று உஷாராக இருப்பது நல்லது. சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் ஓரளவு வருமானத்தைப் பெற முடியும்.
அரசியல்வாதிகள் நல்ல புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பர்.
கலைத்துறையினரைத் தேடிப் புதிய ஒப்பந்தங்கள் வரும். ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.
பெண்களுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதே சமயம் கணவருடன் வாக்கு வாதம் ஏற்படலாம். பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடவும். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு
+ உழைப்பால் உயர்வு
- கடன்படும் சூழ்நிலை
உத்திரட்டாதி: சனி பகவான் உங்களின் இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குரு – சனி ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் திடீர் டென்ஷனை உண்டாகும். நண்பர்கள், உறவினர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். நீண்ட நாளாக வாங்க வேண்டும் என எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது. உங்களின் வாக்குவன்மை உயரும். உங்களின் ஆன்மிக சிந்தனைகள் மெருகேறும். புதிய கோயில்களைத் தேடிச் சென்று வழிபடுவீர்கள். குடும்பத்தின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு பெருகும். உறவினர், நண்பர்களை அனுசரித்து நடப்பீர்கள். எவரிடமும் அனாவசிய பேச்சு வேண்டாம். மற்றவர் பேச்சு, நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து அதற்கேற்ப செயல்படுங்கள். ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். திடீரென தொலை துாரப் பயணம் செல்லும் நிலை உருவாகும். உடல்நலனில் எந்தக் குறைபாடும் ஏற்படாது. யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலத்தையும், மன வளத்தையும் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். போட்டியாளர்கள் பின் வாங்குவார்கள். அரசு வகையில் சலுகை தேடி வரும்.
மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும், பயங்களும் முற்றிலும் நீங்கிவிடும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் குறைகளைக் கண்டறிந்து திருத்துவீர்கள். உங்களின் செயல்களுக்கு நண்பர்கள், கூட்டாளிகளிடம் வரவேற்பு கிடைக்கும். பெரியோரைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நேர் ழியில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். உங்களின் முடிவுகளை பயமின்றி செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். போட்டியாளர்கள் உங்களை ஏமாற்ற முடியாது. உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். தெளிந்த சிந்தனையுடன் பிறருக்கு அறிவுரைகளை வழங்குவீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பீர்கள்.
வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். காணாமல் போன பொருட்கள் மீண்டும் கை வந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
பணியாளர்கள் ஓரளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அதேநேரம் வேலைப் பளு அதிகரிக்கும். எனவே பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளுங்கள். அலுவலக ரீதியான பயணங்கள் செல்ல நேரிடும்.
வியாபாரிகள் அதிக முதலீடு செய்யாமல் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உபரி வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பீர்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் உங்கள் செயல்களைச் செய்து நற்பெயர் வாங்குவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கும். எனவே வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டி வரும். சக கலைஞர்களின் உதவிகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
பெண்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திருமணம் நடக்கும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். முக்கியப் பிரச்னைகளில் மவுனமாக இருந்து பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
மாணவர்கள் அலட்சியம் காட்டாமல், திட்டமிட்டபடி படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சலுகை, கல்வி மானியம் கிடைக்கும்.

பரிகாரம்: முன்னோர் வழிபாடு
+ அரசு வகையில் சலுகை
- அடிக்கடி மனஅழுத்தம்
ரேவதி: சனிபகவான் உங்களின் இருபத்தி நான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குரு – புதன் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் வீண் மனக்கவலை ஏற்படலாம். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதுாகலம் நிறையும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்த நண்பர்கள் மனம் மாறி மீண்டும் நட்புடன் பழகத் தொடங்குவார்கள். கடினமான காரியங்களையும சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவர். வசதி படைத்தவர்கள் உங்களின் நண்பர்கள் ஆவார்கள். எளிமையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். சமூகத்தில் பெயரும், புகழும் படிப்படியாக உயரும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று வசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய சூழ்நிலைகளில் வாழ உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள்.
பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள்.

பணியிடத்தில் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ளவும். நண்பர்கள் உங்கள் மீதுள்ள பொறாமையால் பகைமை பாராட்டுவார்கள். அதைப் பெரிது படுத்த வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்வீர்கள். பழைய வழக்குகள் முடிவதில் தாமதம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். உங்களின் செயல்களைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். தற்போது வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள். எளியவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.
புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வீர்கள். புதிய இடங்களில் சிறப்பான வரவேற்பு கிடைக்கும். ஆடம்பர கேளிக்கைகளில் குடும்பத்தாருடன் பங்கேற்று மகிழ்வீர்கள். உங்களை நம்பி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். அனைத்துப் பிரச்னைகளையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கும் காலகட்டம் இது.
பணியாளர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் உங்களின் வேலைகளை தாமாகவே முன் வந்து பகிர்ந்து கொள்வார்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும், பணமும் கிடைக்கும். சக கலைஞர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ரசிகர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். நிதானத்துடன் செயல்படவும். ஆரோக்யத்தில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு, விளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது அவசியம்.

பரிகாரம்: முருகன் வழிபாடு

+ பணவரவில் திருப்தி
- வாய்ப்பேச்சால் வம்பு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement