Load Image
Advertisement

கும்பம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023

அவிட்டம்: சனி பகவான் உங்கள் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடக்கலாம். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரவு கூடும். வீண் அலைச்சல், திடீர் கோபம் உண்டாகலாம். சமூக மதிப்பும், அந்தஸ்தும் உயரும். சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல்நிலை சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதே நேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதை தவிர்க்கவும். சில நேரத்தில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு உருவாகும். பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள்.

சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடினமாக உழைக்க வைக்கும் சனி பகவான், அதற்கேற்ற பெரும் பலனைத் தருவதற்கும் தயங்க மாட்டார். வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவு செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்கு செலவழிப்பீர்கள். புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். பயணங்களால் நன்மை காண்பீர்கள். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தி பெறும்.

பணியாளர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வேலைகளை முன் கூட்டியே யோசித்துச் செய்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செய்வது அவசியம். பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. மற்றபடி வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் ஆதரவு தருவார்கள்.

பெண்கள், மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை திருப்திகரமாக நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

மாணவர்கள் உற்சாகமான மனநிலையுடன் படிப்பர். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும். வருங்கால வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம்: சிவன் வழிபாடு
+ சகோதரர் ஒற்றுமை
- புதியவர்களிடம் கவனம்
சதயம்: சனி பகவான் உங்களின் இருபத்தி ஏழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சனி - ராகு ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் விருப்பங்கள் கைகூடும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனஅழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள், நண்பர்கள் மூலம் நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும்.

வியாபாரங்கள் சூடுபிடிக்கும். துார தேசத்தில் இருந்து மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். வெளிநாட்டுப் பயணம் செல்வீர்கள். சேமிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதுாறாகப் பேசியவர்களைக் கண்டறிந்து விலகுவீர்கள். பெற்றோர், நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தம் தீரும். எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரி தொல்லை ஏற்படாது. வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடிபுகுவர். களவு போன பொருள் திரும்ப கிடைக்கும்.

பணியாளர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நட்பு அதிகரிக்கும்.

வியாபாரிகள் போட்டி, பொறாமையை சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். சமயோஜித புத்தியால் பிரச்னைகளில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் சிரமம் உண்டாகாது.

அரசியல்வாதிகள் கட்சியின் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கவுரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சி காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாட்டில் இருந்து இன்பகரமான செய்தி வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடப்பீர்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மாணவர்கள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதே நேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: வாரகி வழிபாடு

+ சுபநிகழ்ச்சி நடக்கும்.
- உடல்நலனில் கவனம்
பூரட்டாதி: சனி பகவான் உங்களின் இருபத்தி ஆறாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குருவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். உழைப்பால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். விடாமுயற்சியால் நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைக்கு கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுவீர்கள். கடினமாக முயற்சி செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதே சமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.
தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.
பணியாளர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் ஓரளவே நன்மை உண்டாகும். சக ஊழியர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது அதிக கவனத்துடன் செயல்படவும். கூட்டுத்தொழில் புரிவோர் சற்று உஷாராக இருப்பது நல்லது. சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் ஓரளவு வருமானத்தைப் பெற முடியும்.
அரசியல்வாதிகள் நல்ல புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பர்.
கலைத்துறையினரைத் தேடிப் புதிய ஒப்பந்தங்கள் வரும். ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.
பெண்களுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதே சமயம் கணவருடன் வாக்கு வாதம் ஏற்படலாம். பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடவும். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு
+ உழைப்பால் உயர்வு
- கடன்படும் சூழ்நிலை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement