Load Image
Advertisement

கன்னி : சனிப்பெயர்ச்சி பலன் 2023

உத்திரம்: சனி பகவான் உங்களின் பன்னிரெண்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை. உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். செயல் திறன் உயரும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்களின் ஞாபக சக்தி உங்களின் அனைத்துச் செயல்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும். தொழில் நன்றாக நடந்தாலும் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்திலும் எதிர்மறையான பேச்சுகள் உங்கள் காதுகளை எட்டும். அதனால் எவரிடமும் உணர்ச்சி வசப்பட்டு வேண்டாத வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்.

உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு தாமதப்படுத்தாமல் உடனடியாக செய்து முடிப்பீர்கள். பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். மறைமுக எதிரிகளிடம் ஒரு கண் வைத்திருப்பீர்கள். ஆரோக்யம் நல்ல முறையிலேயே தொடரும். மருத்துவச் செலவுகள் எதுவும் ஏற்படாது. பகைவர்களாக இருந்தவர்கள் தங்களின் முக்கிய விஷயங்களுக்காக உங்களின் உதவியை நாடி வருவர். வருமானம் தடைபடாது.

எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல பதில் கிடைக்கும். மனதில் இருந்த எதிர்மறையான சிந்தனைகள் மறையும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். துணிந்து செய்யும் காரியங்களில் பணிவுடன் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாது. வருமானம் சீராக இருந்தாலும் பழைய சேமிப்புகளிலிருந்து சிறிது செலவு செய்ய நேரிடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அவற்றை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். இருப்பினும் உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். உங்களின் பொருளாதார நிலை உயரும். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். நண்பர்கள் உண்மையான நட்புடன் பழகுவார்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய சந்தைகளை நாடி பொருட்களை விற்பனை செய்வீர்கள். அரசு வழியிலும் நன்மைகள் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு இடையூறுகள் தோன்றினாலும் கவுரவத்திற்குக் குறைவு ஏற்படாது. அதே சமயம் ரகசியமாக எதையும் செய்ய வேண்டாம். தொண்டர்களிடம் உங்கள் பேச்சுக்கு வரவேற்பு இருக்கும். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து உங்களின் பெருமையைக் கூட்டிக் கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலம் புகழும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். துறையில் பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். சமுதாயப் பணி செய்து உங்களின் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் கணவரின் அன்பால் அவற்றிலிருந்து மீள்வீர்கள். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.

மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்வது அவசியமாகிறது. அதனால் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். பெற்றோர், ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். உடல் ஆரோக்யத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு
+ ஆரோக்கிய வாழ்வு
- செலவு அதிகரிக்கும்
அஸ்தம்: சனி பகவான் உங்களின் பதினோராவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

புதன் - சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.
ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களின் தேகத்தை பொலிவடையச் செய்வார். மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்து கொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும். நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். தற்பெருமை பேசுபவர்கள்கூட உங்களின் பெருந்தன்மையை உணர்ந்து, பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என பெயரெடுப்பீர்கள்.

வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள்.

அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்து கொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்க்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதுாறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பணவரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்களுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பணவரவு சீராக இருக்கும். உடல்நிலை சிறப்பாக அமையும். எங்கும், எப்போதும் பேச்சில் நிதானம் தேவை.

மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, பிராணாயாமம் மூலம் மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

பரிகாரம்: அனுமன் வழிபாடு

+ வெளிநாட்டுப் பயணம்
- எதிரிகளால் அவதுாறு

சித்திரை: சனிபகவான் உங்களின் பத்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் அம்சத்தில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.
மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம். சிலருக்கு ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். பல சாதகமான நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. சனிபகவான் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். நீரிழிவு, கல்லீரல் நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய பெயர்ச்சி இது.

அனைத்துச் செயல்களிலும் சந்தோஷத்தோடு ஈடுபடுவீர்கள். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்வீர்கள். அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும் பெயர்ச்சியாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறையும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

பணியாளர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருத மாட்டீர்கள். பணவரவில் தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத்திறன் பளிச்சிடும்.

வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் அந்தஸ்து உயரும்.

அரசியல்துறையினர் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடக்கவும்.

பெண்கள் கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.

மாணவர்கள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.

பரிகாரம்: காவல் தெய்வ வழிபாடு

+ மனதில் உற்சாகம்
- வருமானத்தில் தடை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement