Load Image
dinamalar telegram
Advertisement

சிம்மம் : புரட்டாசி மாத பலன்

மகம்:
சொந்த முயற்சியால் வெற்றிகளைக் குவிக்கும் உங்களுக்கு இந்த மாதம் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். செவ்வாயின் சஞ்சாரத்தால் தடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகலாம். பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் பிரச்னை தலைதுாக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் வருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவர். தடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: திருப்பதி பெருமாளை வணங்க கவலை நீங்கும்.
சந்திராஷ்டமம்: அக். 8, 9
அதிர்ஷ்ட நாள்: அக். 02

பூரம்:
முயற்சிகளில் சோர்வடையாத உங்களுக்கு இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என நினைப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை வரும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பர். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் நிம்மதி கிடைக்கும். உறவினர், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்கள் எதை பற்றியாவது நினைத்து கவலைப்படுவர். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவர். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: பவுர்ணமியன்று அம்மனை வணங்க பிரச்னை தீரும்.
சந்திராஷ்டமம்: அக். 9, 10
அதிர்ஷ்ட நாள்: அக். 3, 4

உத்திரம் 1:
காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எடுக்கும் முடிவு மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். தனவாக்கு ஸ்தானத்தில் இருக்கும் சூரியனால் திடீர் கோபம் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரவு திருப்தி தரும். பணியாளர்களுக்கு உழைப்பு வீணாகும். அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். செல்வாக்கு உயரும். பணவரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும்.
பரிகாரம்: வாராகியை வணங்க முன்வினை பாவம் நீங்கும்.
சந்திராஷ்டமம்: அக். 10, 11
அதிர்ஷ்ட நாள்: அக். 3, 4

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement