Load Image
dinamalar telegram
Advertisement

கலை, பண்பாடு, மானுடவியலை விளக்கும் அருங்காட்சியமாகத் திகழும் கோயில்கள்

ராமநாதபுரம்:பழங்கால மக்களின் வாழ்க்கை முறை, சிற்பக்கலை, ஓவியம், தெய்வ வழிபாடு, நாணயவியல், விலங்கியல் என அனைத்தும் அடங்கிய ஒரு அருங்காட்சியகமாக இன்றும் பல கோயில்கள் உள்ளன. அவற்றின் சிறப்பை இன்றைய சர்வதேச அருங்காட்சியகம் தினத்தில் தெரிந்துகொள்வோம்.

அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தினை விளக்கும் விதமாக, ஆண்டு தோறும் மே 18 சர்வதேச அருங்காட்சியகங்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.1977 முதல் சர்வதேச அருங்காட்சியக சங்கம் நடத்துகிறது. 2022ம் ஆண்டிற்கான கருப்பொருள் “அருங்காட்சியகங்களின் சக்தி” அறிவித்துள்ளது.கலை, பண்பாடு, தொல்லியல், மானுடவியல், கலைப்பொருட்கள், சிற்பவியல், தாவரவியல், விலங்கியல், நாணயவியல் உள்ளிட்டவைகளை சேகரித்து, பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காக அருங்காட்சியகங்கள் காட்சிப்படுத்துகின்றன. பல துறை சார்ந்தவை ஒரே இடத்தில் இருப்பதால் கல்வி, ஆராய்ச்சிக்கு இவை உதவுகின்றன. இதுபோலவே தமிழகத்தில் பல கோயில்கள் பண்பாடு, அறிவியல், மருத்துவம், கல்வி, கலை, வரலாறு, கட்டடக்கலை ஆகியவற்றின் அடையாளமாக அதாவது ஒரு அருங்காட்சியகம் போல விளங்குகின்றன. ராமநாதபுரம் தொல்லியல்ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:

கட்டடக்கலை அறிவியல் : கோயில் கட்டுமான மரபுகள்நம் முன்னோர்களின் அறிவியல், கணித அறிவிற்கு உதாரணமாக உள்ளன. தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம், தாராசுரம், கழுகுமலை கோயில்கள் சில சான்றுகள். கோயில், அரண்மனை அமைக்கும் முறைகளை நெடுநல்வாடை குறிப்பிடப்படுகிறது. மரம், செங்கல் போன்ற அழியக்கூடியவற்றால் கோயில்கள் கட்டப்பட்டன. மலையைக் குடைந்து கோயில்கள் அமைக்கப்பட்டன. கற்களை ஒன்றன்மேல் ஒன்றை அடுக்கி கற்றளிகள் உருவாக்கப்பட்டன. இது போன்றவை நுணுக்கமான முன்னோர்களின் அறிவை வெளிப்படுத்துகின்றன.கோயில் கருவறையைச் சுற்றி உள்திருச்சுற்று அமைத்து இடைவெளி விடும் தொழில்நுட்பம் காஞ்சி கைலாசநாதர், தஞ்சை, சாயல்குடி உள்ளிட்ட கோயில்களில் உள்ளன. இதன்மூலம் கருவறை எப்போதும் குளிர்ச்சியுடன் காணப்படும். விமானம், கோபுரங்களில் பல நிலைகளை அமைத்து அதில் சிற்பக்கலையின் பல்வேறு உத்திகளைப் புகுத்தியுள்ளனர்.

பண்பாடு : இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 சதவீதம் தமிழ்நாட்டுக் கோயில்களில் தான் உள்ளன. அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளை கோயில்களில் உள்ள கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மன்னர்கள் வரிக் குறைப்பு செய்தது, கோயில்கள் மக்களுக்கு பணம், பொருள் உதவி செய்து பாதுகாத்தது போன்றவற்றால் மக்கள் வாழ்க்கைமுறை கோயில்களோடு பின்னிப்பிணைந்திருந்தது. திருவாடானை கோயில் வழிபாட்டுக்காக தளவாய் ரகுநாத சேதுபதியின் அரசப்பிரதிநிதி திருமலையன் மக்களுக்கு வரி விதித்த விபரம் கல்வெட்டில் உள்ளது. திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொடை கொடுத்த கல்வெட்டும், தீர்த்தாண்டதானம் கோயிலுக்கு முஸ்லிம் அஞ்சுவண்ணத்தார் கொடை கொடுத்த தகவலும் கல்வெட்டு ஆதாரம் உள்ளது.

வாழ்க்கை முறை : அக்காலத்தில் இருந்த மக்களின் வாழ்க்கைமுறை, ஆடை, அணிகலன்கள், உடல் அமைப்பு ஆகியவற்றை அறிய சிற்பங்கள், ஓவியங்கள் உதவுகின்றன. கோயில் விழாக்கள் மக்களை ஒருங்கிணைக்க உதவின. கோயில்கள் நடனம், இசை, நாடகம் ஆகிய கலைகளை வளர்த்துள்ளன.இயற்கைச் சமநிலையை உருவாக்க, மழை பொழிய கோயில்களில் தல மரங்கள், நந்தவனம் ஆகியவை தல விருட்சமாக வளர்த்து பாதுக்காக்கப்பட்டன. தமிழ் மொழியின் எழுத்து வளர்ச்சியை அறிய கோயில் கல்வெட்டுகள் உதவுகின்றன. கோயில் துாண்களின் மேலுள்ள போதிகை என்ற அமைப்பு காலத்தைக் கணக்கிட உதவுகின்றன. இவ்வாறு கோயில்கள் கலை, அறிவியல், பண்பாடு, மருத்துவம், கல்வி, வரலாறு, வணிகம், தொல்லியலை அறிய உதவும் ஒரு அருங்காட்சியகமாகத் திகழ்கின்றன, இவ்வாறு அவர் கூறினார்.

பழங்கால கோயில்களை காப்போம் : இத்தகையை வரலாற்று சிறப்புமிக்க பழங்கால கோயில்கள் காலப்போக்கில்பராமரிக்கப்படாமல் அழிந்து, அவ்விடங்களில் கண்டெடுக்கும் கற்சிலைகள், பூஜை பொருட்களே அரசு அருங்காட்சியகங்களில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. ஆகையால் நமது கலை, அறிவியல், பண்பாடு பறைசாட்டும் கோயில்களின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்து, நம்ம ஊர்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுகாக்க இந்த சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தில் உறுதிஏற்போம்.

Telegram Banner
Advertisement
Advertisement
 
Advertisement