Load Image
Advertisement

கும்பம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023

அவிட்டம் 3, 4ம் பாதம்: செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்

அவிட்டத்தில் பிறந்தவர் தவிட்டை தொட்டாலும் தங்கமாகும் என்பார்கள். அதற்குரிய காலம் இப்போது உங்களுக்கு வரப்போகிறது.
உடல் உறுதிக்கும் மன உறுதிக்கும் காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாகவும், நீண்ட ஆயுளை வழங்கிடக் கூடிய சனியை ராசி நாதனாகவும் கொண்டவர்கள் நீங்கள். செவ்வாய், சனி இரண்டுமே பாப கிரகங்கள் என்பதால் நெஞ்சுறுதி மிக்கவராக இருப்பீர்கள். அஞ்சாமை நிறைந்தவர்களாக ஆற்றல் மிக்கவர்களாக நீங்கள் செயல்படுவீர்கள். ஏழரை சனியின் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நிலையில் கடந்த 5 மாதங்களாக ஜென்ம குருவாக உங்கள் ராசியில் சஞ்சரித்து உங்களை அலைச்சல்களுக்கு ஆளாக்கிய குரு பகவான் 2022 ஏப்.13 முதல் உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் ஆட்சியாக சஞ்சரித்து உங்களுக்கு நற்பலன்கள் வழங்க உள்ளார். இந்த நேரத்தில் உங்கள் நட்சத்திராதிபதியின் ஆட்சி வீடான மேஷத்தில் ராகு 3ம் இட சஞ்சாரம் மேற்கொள்வதால் உங்கள் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். உங்களுடைய செயல்களில் வேகமும் முன்னேற்றமும் உண்டாகும்.

நிதி: 2ம் வீட்டில் ஆட்சியாக சஞ்சரிக்கும் குரு பொருளாதார நிலையை உயர்த்துவார். கடன்கள் பெற்று தேவைகளை நிறைவேற்றிய நிலையில் அதை அடைத்திட வழி உருவாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை, ஸ்திர சொத்துகள் வாங்கும் யோகமும் சிலருக்கு உண்டாகும். எதிர்பார்த்து வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார நிலை உயர்வதால் மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். எதிர்காலத்தை மனதில் வைத்து புதிய முதலீடுகள் செய்வீர்கள். குடும்பத்திற்குத் தேவையான வசதிகளை உருவாக்குவீர்கள்.

குடும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். அதனால் உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகளும், உறவினர்களால் உண்டான சங்கடங்களும் விலகும். 3 ல் உள்ள ராகு சகோதர வகையில் நன்மை தருவார். 9 ல் உள்ள கேது தந்தையின் உடல்நிலையில் சில பாதிப்பை தருவார். தந்தை வழியில் இருந்து நீங்கள் எதிர்பார்த்தவற்றில் தடைகளை உண்டாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். உங்களை எதிர்த்தவர்கள் பலமிழந்து போவார்கள் என்பதால் உங்கள் செயல்பாடுகள் யாவும் வெற்றியாகி குடும்ப நிலை உயரும்.

கல்வி: வாக்கு ஸ்தானமான 2ல் சஞ்சரிக்கும் குருவால் முன்னேற்றம் உண்டாகும். தேர்வில் உங்கள் திறமை வெளிப்படும். ஆசிரியர்களின் ஆலோசனையால் முன்னேறுவீர்கள். உயர்கல்வி குறித்த லட்சியம் நிறைவேறும். மருத்துவம், பொறியியல் கனவு நிறைவேறும். வேலைவாய்ப்புத் தேர்வுகளிலும் அனுகூலம் காண்பீர்கள். ஏழரைச்சனி சில பாதிப்புகளை உண்டாக்கினாலும் அவற்றையெல்லாம் சரிசெய்து முன்னேற்றம் காண குருபகவான் வழங்குவார்.

பெண்கள்: உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். தலைவலியால் சிலர் பாதிப்படைந்தாலும் அதிலிருந்து மீள்வர். ஆரோக்கியம் மேம்படும். 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் உடல்பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளை நடத்தி மகிழ்வீர்கள். அரசு பணியில் இருப்பவர்கள் செல்வாக்கு பெறுவர். உறவினர்கள் வழியே நன்மை உண்டாகும்.

உடல்நிலை: ஏழரைச்சனியால் தலைவலி, நரம்புத்தளர்ச்சி, மயக்கம் போன்றவை உண்டாகும். ரோக, ஆயுள் ஸ்தானங்கள் மீதான குரு பார்வையால் நிவாரணம் பெறுவீர்கள். அடிக்கடி மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வது எதிர் விளைவுகளை உருவாக்கும். கவனக்குறைவாலும் நிதானமின்மையாலும் விபத்துகளை சந்திக்க நேரும். பணிகளின் போதும், பயணத்தின் போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

தொழில்: ஜீவனகாரகமான 10ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலை விருத்தி செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வேலைக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இக்காலத்தில் அதற்குரிய வாய்ப்பு உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு வேலையில் இருந்த பிரச்னைகள் விலகி, நிம்மதியான, ஆதாயமான நிலை உண்டாகும். ஆசிரியர்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஆலோசகர்கள், பெட்ரோல், கெமிக்கல், இயந்திர வகையிலான தொழில்களில் ஈடுபட்டிருப்போர் லாபகரமான நிலையை அடைவர். சுய சிந்தனை மேலோங்கும், அதன்வழியே தொழிலில் இருந்த தடைகளை விலக்குவீர்கள். போட்டியாளர்களால் உண்டான சிரமங்களும் இனி மறையும்.

பரிகாரம்: திருநள்ளாறில் குடியிருப்பவரும் சங்கடம் தீர்ப்பவருமான தர்ப்பாரண்யேசுவரரை மனதில் நினைத்து வேண்டி செயல்களில் ஈடுபட நன்மைகள் உண்டாகும்.

சதயம்: திடீர் வரவு உண்டாகும்.

லாபாதிபதியும், குடும்பாதிபதியுமான குரு 2022 ஏப்.13 முதல் உங்கள் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சியாகவும். உங்கள் நட்சத்திர அதிபதி ராகு மறைவு ஸ்தானமான மூன்றில் சஞ்சரித்து நன்மைகள் வழங்கிட உள்ளனர். உங்கள் ராசி நாதனான சனி ஏழரை சனியாக உங்களுக்குப் பலன்களை வழங்க உள்ளார். ஏழரை சனியில் இரண்டாம் சுற்றான பொங்கு சனியை சந்திப்பவர்களுக்கு இது யோக காலமாகும். முதல் சுற்று மற்றும் மூன்றாம் சுற்றை சந்திப்பவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். குரு பகவானின் பார்வைகள் சத்ரு, ஆயுள், ஜீவன ஸ்தானங்களில் பதிவதால் இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் உங்களுக்கு 4 வழிகளில் நன்மைகளை வழங்கப் போகிறது.

நிதி: எதிர்பார்த்த வகையில் வருவாய் வந்து சேரும். நீண்ட காலமாக தடைபட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அரசு வகையில் நிலுவை தொகை கைக்கு வந்து சேரும். இடம், நிலம் என்று இதுவரை விற்பனை செய்வதற்காக நீங்கள் செய்த முயற்சிகள் வெற்றி பெறும். செலவுகளின் வழியே உங்கள் உடல் நிலையை சரிசெய்வீர்கள். உங்களுக்கு லாபாதிபதியே குருபகவான்தான். குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கும் இக்காலத்தில் வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். வங்கி, நிதி நிறுவனம் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வருவாயை விருத்தி செய்யவும், ஸ்திர சொத்துகள் வாங்கவும், வீடு கட்டவும் அவற்றை முதலீடாக்குவீர்கள்.

குடும்பம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சம் நீங்கும். அவர்களின் எதிர்காலத்தை எண்ணி செயல்படுவீர்கள். சுப நிகழ்வு நடந்தேறும். தந்தையின் உடல்நிலையால் சிலர் சங்கடத்தை சந்திப்பர். வாக்கில் தெளிவு பிறக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் அளவிற்கு நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலைகள் தோன்றும். புதிய வீடு கட்டும் யோகமும், புதிய வீட்டில் குடியேறும் யோகமும் சிலருக்கு உண்டாகும். ஏழரை சனியால் சில சங்கடம், தடைகளை சந்திப்பீர்கள் என்றாலும் குருவின் பார்வையால் அவைகளில் இருந்து மீள்வீர்கள். உங்கள் குடும்ப நிலையை உயர்த்தும் வகையில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். சகோதர வகையில் சிலர் நன்மை காண்பீர்கள்.

கல்வி: குருவருளும் திருவருளும் இக்காலத்தில் உங்களுக்கு உண்டாகும். கல்வியின் மீதான சிந்தனை மேலோங்கும். ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு செயல்படுவீர்கள். அரசுத் தேர்வில் அக்கறை கொள்வீர்கள். மேல் படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு என சிலர் செல்வர். அரசு வழியிலும் தேவையான உதவிகள் கிடைக்கும். உளவியல், மருத்துவம், பொறியியல், கணிதவியல், அறிவியல் பாடம் பயில்வோர் முன்னேற்றம் காண்பர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியாற்றல் பெறுவர். விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.

பெண்கள்: உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு எதிராகி சங்கடங்களை உண்டாக்கலாம். 2ம் இடத்தில் அமரும் குரு உங்களை யோசித்து பேச வைப்பார். உங்கள் வார்த்தைகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிக்கும் நிலையை உண்டாக்குவார். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடத்துவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குத் தேவையானவற்றை உருவாக்குவீர்கள். வேலைகளின் காரணமாக வேறு இடத்தில் வசித்தவர்கள் இனி உங்கள் குடும்பத்தினருடன் சேர்வீர்கள்.

உடல்நிலை: பிரஷர், நரம்புத்தளர்ச்சி, தொற்று நோய்கள் என சிலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பீர்கள். கடந்து ஒரு வருடமாக ஏதேனும் ஏதேனும் ஒரு பாதிப்பு உங்களை முடக்கிப் போட்டிருக்கும். சிலர் விபத்துகளுக்கும் ஆளாகி இருப்பீர்கள். இக்காலத்தில் குருவின் பார்வை ரோக, ஆயுள் ஸ்தானங்களில் பதிகிறது. இனி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆயுள் பற்றிய பயம் நீங்கும். ஏழரை சனியின் முதல் மற்றும் மூன்றாம் சுற்றை சந்திப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மயக்கம், தலைச்சுற்றல், நெஞ்சுவலி என்று ஒரு சிலர் சந்திப்பீர்கள். ஒரு சிலர் கவனக்குறைவால் விபத்துகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எச்சரிக்கையாக இருந்தால் ஆபத்துகளை வெல்வீர்கள்.

தொழில்: தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் முடங்கிப் போன தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் வளர்ச்சி உண்டாவதுடன் அதை விரிவும் செய்வீர்கள். லாபாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பெரிய அளவில் லாபத்தைக் காண்பீர்கள். மறைமுகமாக போட்டியாளர்கள் உங்கள் பாதையில் இருந்து விலகுவர். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களில் ஈடுபட்டிருப்போர், வழக்கறிஞர், ஆசிரியர், இயந்திர சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கெல்லாம் யோக காலமாகும்.

பரிகாரம்: தில்லை காளியை மனதில் நினைத்து செயல்படுங்கள். உங்கள் சங்கடங்கள் தீரும்.

பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: குருவருளால் யாவிலும் வெற்றி

தனகாரகனான குருவை நட்சத்திர அதிபதியாகவும், ஆயுள்காரகனான சனியை ராசி நாதனாகவும் கொண்டவர்கள் நீங்கள். உங்களிடம் அறிவாற்றலும் திட சிந்தனையும் நினைப்பதை நிறைவேற்றும் வலிமையும் நிறைந்திருக்கும். உங்கள் நட்சத்திர அதிபதியே குரு என்பதால் ஜென்ம குருவின் சங்கடங்கள் உங்களை ஏதும் செய்யாது. எதிர் வருவனவற்றை உணர்ந்து செயல்படக்கூடியவர் நீங்கள் என்பதால் நேரத்திற்கு ஏற்ப செயல்பட்டு உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் 2022 ஏப்.13 அன்று உங்களின் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார் குருபகவான். 3ம் வீட்டிலுள்ள ராகுவும் துணிவையும் தைரியத்தையும் வழங்கிட உள்ளார். இவர்கள் இருவராலும் ஒருபக்கம் நீங்கள் நன்மைகளை அடைய உள்ளீர்கள். மறுபக்கம் 9ல் கேது, ஏழரை சனி என்ற நிலையும் உள்ளது. 2ல் சஞ்சரிக்கும் குருவாலும் அவருடைய பார்வைகளாலும் உங்களுக்கு இக்காலத்தில் நடக்கப்போவதை விரிவாக காண்போம்.

நிதி: தன ஸ்தானத்தில் தனக்காரகன் அமர்வதால் பொருளாதார நிலை உயரும். பணவரவு பல வழிகளிலும் வரும். உங்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வந்துசேரும். புதிதாக நிலம், மனை என வாங்கும் நிலை சிலருக்கு உண்டாகும். ஆடை ஆபரணம், வாகனம் என வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை ஒவ்வொன்றாக வாங்கி சேர்ப்பீர்கள்.

குடும்பம்: குடும்ப ஸ்தானாதிபதியான குரு, குடும்ப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கும் இக்காலத்தில் குடும்ப நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தோர் உதவியாக இருப்பர். குடும்பத்திற்குள் இருந்த சங்கடங்கள் விலகும். படிப்பு, வேலைகளின் காரணமாக வெளியூர், வெளிநாடு என சென்றிருந்த உங்கள் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து சேர்வர். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். அவர்களின் பெயரில் முதலீடுகள் செய்வதுடன் ஸ்திர சொத்துகளும் வாங்குவீர்கள்.

கல்வி: சமீபகால சூழலால் கல்வியில் தடைகளை சந்தித்திருப்பீர்கள். தற்போதுள்ள சூழல்களால் உங்கள் கற்றல் திறன் மேலோங்கும். ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று முன்னேறுவீர்கள். மொழியியல், வரலாறு, சட்டம், பொருளாதாரம், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் வளர்ச்சி காண்பர். மேற்கல்வி குறித்த உங்கள் எண்ணம் வெற்றி பெறும். வேலைவாய்ப்பிற்காக பங்கேற்கும் தேர்வில் வெற்றி காண்பீர்கள். அனைத்திலும் உங்கள் அறிவு பளிச்சிடும். தேர்வு முடிவுகளால் குடும்பத்திற்குள் உங்கள் மதிப்பு உயரும்.

பெண்கள்: குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் இதுவரை இருந்த சங்கடங்கள் தீரும். இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவர் ஓரிடம் மனைவி ஓரிடம் என்றிருந்த நிலையில் மாறுதல் உண்டாகும். அரசு பணியாளர்கள் சொந்த ஊருக்கு மீண்டும் திரும்புவர். பிள்ளைகளின் நலனுக்காக சில விஷயங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அறிவு சார்ந்ததாக இருக்கும். நீங்கள் விரும்பியபடி ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

உடல்நிலை: ஏழரை சனியால் உடல் நிலையில் சங்கடம் உண்டாகி இருக்கும். உடலில் ஏதாகிலும் ஒரு பிரச்னையால் சங்கடப்பட்டு வந்திருப்பீர்கள். இதயப்பிரச்சனை, மூட்டுவலி, கொலஸ்ட்ரால், பிரஷர் என ஏதேனும் ஒரு சங்கடத்திற்கு ஆளாகி இருப்பீர்கள். இந்நிலையில் ரோகம், ஆயுள் ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் நோய்கள் தணியும். சிகிச்சையால் ஆரோக்கியம் அடைவீர்கள். கவனக்குறைவால் சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் வாகன பயணத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

தொழில்: தொழில் ஸ்தானமான 10ம் இடத்திற்கு குருபார்வை உண்டாவதால், விவசாயிகள், சுயதொழில் புரிவோர் செழிப்படைவர். தொழிலை அபிவிருத்தி செய்து அதன் வழியே லாபம் காண்பீர்கள். ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வித்துறையினர், அரசியல்வாதிகளின் மதிப்பு உயரும். உற்பத்தித்துறையில் ஈடுபட்டிருப்போருக்கு முன்னேற்றம் ஏற்படும். கடல்கடந்து தொழில் செய்வோருக்கு சங்கடங்கள் விலகும். ஒருசிலர் புதியதாக தொழில் தொடங்குவீர்கள். கவுரவமான வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

பரிகாரம்: ஆலங்குடியில் வீற்றிருந்து அருள்புரியும் குருபகவானை மனதில் எண்ணி செயல்படுங்கள். நன்மைகள் உண்டாகும்.

Advertisement
Advertisement
 
Advertisement