Load Image
Advertisement

தனுசு : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. குருவருளால் நன்மைகள் உண்டாகும்

மூலம்: குருவருளால் நன்மைகள் உண்டாகும்

கேதுவை நட்சத்திர அதிபதியாகவும், குருவை ராசி நாதனாகவும் கொண்டதால் நாளை நடக்கப் போவதை இன்றே அறியக் கூடியவராக இருப்பீர்கள். மற்றவர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் என்றாலும் உங்கள் சுயவாழ்க்கை என்று வரும் போது அதில் தடைகள் குறுக்கிடும். சனி, ராகு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதுடன் குருவும் 2022 ஏப்.13ல் உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான மீனத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் சஞ்சாரத்திற்கு 4ம் இடம் சாதகமான இடம் இல்லை என்றாலும் குருதான் உங்கள் ராசி நாதன் என்பதுடன் அவர் சஞ்சரிக்கும் இடமும் அவருடைய ஆட்சி வீடு என்பதால் உங்களை வேதனைக்கு ஆளாக்க மாட்டார். அத்துடன் அவர் பார்க்கும் இடங்கள் வழியே உங்களுக்கு நன்மைகளை வழங்குவார்.

நிதி: ஏழரை சனியால் உண்டான நெருக்கடி ஒரு பக்கம். 5 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களை அல்லல் படுத்தும் ராகு ஒரு பக்கம் என்றாலும் கிரகங்களில் அதிகபட்ச வலிமை கொண்டவரான நட்சத்திராதிபதி கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் தேவைகளை வழங்குவார். உங்கள் புத்திசாலித்தனத்தால் வருமானம் உயரும். பணத்தின் மதிப்பை இக்காலத்தில் நீங்கள் உணர்வீர்கள். எந்த ஒன்றிலும் தடை, ஏதாகிலும் பிரச்னை என்று தோன்றும் என்பதால் உங்கள் முயற்சியால் அதை தாண்டுவீர்கள். பூர்வீக சொத்துகள் பற்றிய சிந்தனை இக்காலத்தில் வேண்டாம். இருப்பதைக் கொண்டு, வருவதை வைத்து வாழ்வு நடத்துங்கள். விரைவில் உங்களுக்கு நன்மைகள் உண்டாகப் போகிறது. வழக்குகளும் உங்களுக்கு சாதகமாகப் போகிறது என்பதால் இக்காலத்தை மெல்ல நகர்த்துங்கள்.

குடும்பம்: குடும்பாதிபதியான சனி குடும்ப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் சிரமப்பட்டாவது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சங்கடங்களுக்கு நீங்கள் ஆளானாலும் குடும்பத்தில் சுப நிகழ்வுகளை நடத்தி முடிப்பீர்கள். 4ல் சஞ்சரிக்கும் குரு உங்கள் தாயார் நிலையில் சங்கடங்களை உருவாக்கலாம். 5 ல் சஞ்சரிக்கும் ராகுவால் பிள்ளைகள் பற்றிய சிந்தனையும் உண்டாகும். கணவன், மனைவி உறவில் இடைவெளி உண்டாகும். புதிய முயற்சிகள் இக்காலத்தில் வேண்டாம். 2022 மே 25 முதல் சனி வக்ரகதி அடைவதால் இப்போதுள்ள நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். 2022 ஆக.8 முதல் குருவும் வக்ரமடைவதால் நன்மைகள் அதிகரிக்கும். அதன்பின் நீங்கள் எதிர்பார்த்துள்ள நன்மைகளை உங்களால் அடைய முடியும்.

கல்வி: குடும்ப நிலையும், வாழ்க்கை சூழலும் மன அழுத்தத்தை உருவாக்கும் என்றாலும் 11ல் சஞ்சரிக்கும் கேது எல்லா வளத்தையும் அருளுவார். சங்கடப்பட்டாவது நினைத்த இலக்கை அடைவீர்கள். ஏழரை சனியின் இறுதி கட்டத்தில் நீங்கள் இருப்பதால் நெருக்கடிகளில் இருந்து மீள்வீர்கள். கல்வியின் மீதான அக்கறை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதுடன் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்றால் வெற்றி கிடைக்கும். வணிகவியல், அறிவியல், பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மொழியியல் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். கல்வியில் கவனம் செலுத்துங்கள்.

பெண்கள்: குடும்ப சனியால் பொறுப்புகள் அனைத்தையும் சுமக்க வேண்டியதாகும். தாய்வழி உறவினர்களால் சங்கடத்திற்கு ஆளாகலாம். பிள்ளைகள் வழியிலும் உங்களின் தேவை அதிகரிக்கும். 12ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் ஓய்வு, உறக்கம், சுகம் என நிம்மதியாக இருப்பீர்கள். 11ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உங்கள் வழிகாட்டும் ஞானகுருவை நீங்கள் அடையக்கூடும். எதிர்பாராத வகையில் வருமானம் உண்டாகி உங்களுடைய சங்கட நிலையில் மாற்றம் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு வேலையில் இருந்த சங்கடங்கள் அகலும். சுய தொழில் செய்வோரின் நிலை உயரும். கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு உருவாகும். குடும்பத்தின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றுபவர்களாக நீங்களே இருப்பீர்கள்.

உடல்நிலை: அல்சர், ஒவ்வாமை, ஹை பிரஷர், சுகர் பிரச்னைக்கு ஆளாகலாம். இடுப்பு வலி, மூட்டு வலி, கால் வலியால் அவதிப்படுவீர்கள். சிலர் சிறு விபத்துக்கும் ஆளாகலாம். பயணம், வாகனத்தை இயக்குவதில் கூடுதல் கவனம் தேவை. ஆயுள் ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை உண்டாவதால் பயம் ஏற்படும். 2022 ஏப்.13 முதல் குருவின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்கு உண்டாவதால் பிரச்னை தீரும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் உங்களுக்கு உண்டான பிரச்னைகள் சிகிச்சைகளால் விலகும்.

தொழில்: அலைச்சல் அதிகரிக்கும். சுய தொழில் செய்வோர் வருமானத்திற்காக இடம் விட்டு இடம் செல்வர். குரு 4 ல் சஞ்சரிக்கும் காலத்தில் தொழில், வாழ்க்கை, வசதி என்பதற்காக இடம் விட்டு இடம் மாறும் நிலையும் உருவாகும். அரசு பணியாளர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர். சிலருக்கு பதவி உயர்வும் உண்டாகும் என்றாலும் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் தொழில் விருத்தியாகும். டாக்டர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர்கள், மத போதகர்கள், எழுத்தாளர்கள், தமது தகுதிக்கும் கீழான தொழில்களை செய்து வருவோர் எல்லாம் மேன்மை அடைவர். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் அதிகரிக்கும். விரய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் உபரி வருவாயை அசையா சொத்துகளில் முதலீடு செய்யுங்கள்.

பரிகாரம்: அனுமனை நினைத்து செயல்படுங்கள். சனிக்கிழமைகளில் அவரை வழிபட்டால் சங்கடம் யாவும் தீரும்.

பூராடம்: இடமாற்றம் உண்டாகும்

சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும், குருவை ராசி நாதனாகவும் கொண்டவர் நீங்கள். உங்களிடம் இரு தன்மையும் மேலோங்கி இருக்கும். ஒரு பக்கம் சுக்கிரன் உங்களை லீலைகள் புரிய துாண்டினாலும் மறு பக்கம் குரு உங்கள் மனதிற்கு கடிவாளம் போடுவார் என்பதால் உங்கள் வாழ்க்கை சீராகவே சென்று கொண்டிருக்கும். ஆனால் தொடர்ச்சியாக பல வகையிலும் சங்கடங்களை அனுபவித்து வருபவர்களில் நீங்களும் ஒருவர் என்றே சொல்ல வேண்டும். ஏழரை சனியின் இறுதி கட்டத்தில் இருந்து வரும் நிலையில் குரு 2022 ஏப்.13 ல் உங்கள் ராசிக்கு 4ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இது நன்மை தருவதற்கு இல்லை. இந்த நேரத்தில் 6ம் இடத்தில் இருந்து நன்மை வழங்கிய ராகு 2022 மார்ச் 21 முதல் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சரிப்பதும் எதிர்மறையான பலனையே உருவாக்கும். அவசரம், ஆவேசம் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்து, குரு வழங்கும் பார்வைகளின் பலன்களைத் தெரிந்து அதற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்,

நிதி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை தடையின்றி வழங்குவார். குருவின் சுபபார்வை உங்களை லாபத்தை நோக்கி அழைத்துச் செல்லும். அதே சமயம் குரு விரய ஸ்தானத்தையும் பார்ப்பதால் வருமானம் உண்டாகி அதை இழக்க வேண்டிய நிலை உருவாகும். ஆனால் விதியை மதியால் வெல்லும் வழியை பின்பற்றி வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள். இருக்கும் இடத்தை சீரமைப்பது, புதிய இடம் வாங்குவது என அசையா சொத்துகளில் முதலீடு செய்யுங்கள். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கவனமாக இருங்கள். யாருக்கும் எதற்காகவும் ஜாமின் கையெழுத்திட வேண்டாம். அதனால் சிக்கல்கள் உண்டாகும். 2022 மே25 முதல் சனி வக்ரகதி அடைவதால் இப்போதுள்ள நெருக்கடி குறைய ஆரம்பித்து பணபுழக்கம் சரளமாகும்.

குடும்பம்: புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பெற்றோர், பிள்ளைகள் வழியில் சங்கடங்களை வழங்கி சோதிப்பார். பூர்வீக சொத்து வழியே பிரச்னைகள் உருவாகும். குடும்ப ஸ்தானத்தில் உள்ள சனி உங்கள் வீட்டிற்குள் நெருக்கடி, தடைகளை உண்டாக்குவார். வருமானத்திற்காக இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்பதால் உடலும் மனமும் சோர்விற்கு ஆளாகும். எதிர்பார்த்த சந்தோஷங்களை அடைய முடியாத அளவிற்கு சூழல்கள் உருவாகும். கணவன், மனைவிக்குள் அனுசரித்துப் போவது அவசியம். இல்லையெனில் மனக்கசப்பு உண்டாகலாம்.

கல்வி: கிரக நிலைகள் எதிராக உள்ள இக்காலத்தில் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால்தான் வெற்றியை எட்ட முடியும். ஆசிரியர்களின் அறிவுரைகளை முழுமையாக கேளுங்கள். அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முழு கவனத்தையும் கல்வியில் செலுத்துங்கள். அறிவியல், வணிகவியல், பொறியியல் மாணவர்கள் விடாமுயற்சியை மேற்கொண்டால் வெற்றியை எட்டலாம். போட்டித் தேர்வுகளிலும் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். கல்வி மட்டும்தான் வாழ்க்கை, அந்தஸ்து, உயர்வு என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள். வெற்றி உறுதியாகும்.

பெண்கள்: வீட்டில் உங்கள் வேலைகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியே சங்கடம், பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். ஒரு சிலர் வீட்டிலுள்ள பொருட்களை விற்று நிலைமைகளை சரி செய்வீர்கள். 11 ல் சஞ்சரிக்கும் கேது அந்நியர்களின் வழியே உங்களுக்கு ஆதாயத்தை வழங்குவார். கணவன், மனைவி உறவு தாமரை இலையின்மேல் தண்ணீர் போலவே இருக்கும். உறவினர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போகும். சந்தோஷமான எண்ணங்களும் ஆசைகளும் மனதில் உருவானாலும் அதை அடைய முடியாத அளவிற்கு நிலைமை எதிராக அமையும். பயணங்களில் கவனம் அவசியம். வீட்டில் இருந்தாலும் நிதானமாக செயல்படுங்கள். அவசரம், வேகம் என்று செயல்படுபவர்கள் தவறி விழவும் அதனால் மருத்துவ மனைக்கு செல்லவும் நேரும்.

உடல்நிலை: தொடர்ந்து ஏதாகிலும் ஒரு சங்கடம், மூட்டு வலி, கை கால்களில் வலி, அடிபடுதல், மூச்சுப்பிரச்னை, ரத்தக்கொதிப்பு, தொற்றுநோய், மறைமுக பிரச்னைகள் என்று மருத்துவ செலவுகள் உருவாகும். பெண்களுக்கு கர்ப்பப்பை, சிறுநீரக பிரச்சனை என சங்கடம் உண்டாகலாம். ஆயுள் ஸ்தானத்தைப் பார்த்து வரும் சனி உங்கள் ஆரோக்கியத்தில் கேள்விக்குறியை எழுப்பி இருப்பார். இந்த நிலையில் 2022 ஏப்.13ல் நடைபெறும் குருப்பெயர்ச்சியால் உங்கள் ஆயுள் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாகிறது என்பதால் உடல்நிலையில் உள்ள சங்கடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும்.

தொழில்: சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பணி, தொழிலின் காரணமாக உங்களை அலைச்சலில் விடுவார். அரசு பணியாளர்கள் இடமாற்றத்தை சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு 11 ஆம் இட கேது வருமானத்தை அதிகரிப்பார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். பேன்ஸி ஸ்டோர்ஸ், நகைக்கடை, தனியார் பள்ளிகள், கோச்சிங் சென்டர், கடல் கடந்து தொழில் செய்வோர் எல்லாம் இக்காலத்தில் முன்னேற்றம் காண்பர் என்றாலும் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்காமல் நீங்களே கவனமுடன் செயல்படுவது அவசியம்.

பரிகாரம்: திருவாலங்காட்டில் உள்ள காளியை மனதில் நினைத்து செயல்களில் ஈடுபடுங்கள். உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் ஒருமுறை நேரில் சென்று அர்ச்சித்து வணங்கி வாருங்கள்.

உத்திராடம் 1 ஆம் பாதம்: உழைப்பால் லாபம் காண்பீர்கள்

செல்வாக்கிற்கு காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாகவும், விவேகத்திற்கும் காரகனான குருவை ராசி நாதனாகவும் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு சமூகத்தில் தனி செல்வாக்கு இருக்கும். உங்களுடைய ஆலோசனைகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வர். எந்த நிலை வந்தாலும் அதனால் நீங்கள் எப்போதும் தளர்ந்துபோக மாட்டீர்கள். ஏழரை சனி, மூன்றில் குரு என உங்களை சங்கடத்திற்கு மேல் சங்கடத்திற்கு ஆளாக்கினாலும் உங்களின் அறிவின் காரணமாக எல்லாவற்றையும் எதிர்கொண்டு வந்தீர்கள். இந்த நிலையில் 2022 ஏப்.13 அன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு சுகஸ்தானமெனும் 4ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரித்து உங்களுக்கு பலன்களை வழங்க உள்ளார். குரு சஞ்சாரத்திற்கு 4 ஆம் இடமும் ஏற்றதல்ல என்றாலும் அவருடைய பார்வைகளுக்கு ஆளாகும், ஆயுள், தொழில், விரய இடங்களின் வழியே நன்மை அடைய இருக்கிறீர்கள்.

நிதி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களின் நிதி நிலையை சீராக்குவார். இக்காலத்தில் குறுக்குவழி வருமானங்கள். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை அவசியம். குரு அலைச்சலை உருவாக்கினாலும் அதன் வழியே வருமானத்திற்கு வழி காட்டுவார். தொழில் ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் லாபம் அதிகரிக்கும் என்றாலும் செலவும் காத்துக் கொண்டிருக்கும். கையிருப்பு பல வழிகளிலும் கரையும். அறிமுகம் இல்லாத யாருடனும் பண பரிவர்த்தனை வேண்டாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதால் குருவின் 12 ஆம் இடத்தின் மீதான விரய பார்வை சுப விரயமாக மாறும்.

குடும்பம்: இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரித்து வருவதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் நிம்மதியற்ற நிலையை உருவாக்கும். பெற்றோர், பிள்ளைகள் வழியில் சோதனைகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் வீண் பிரச்னைகள் உருவாகும். குடும்ப வகையில் செலவு அதிகரிக்கும். இக்காலத்தில் குடும்பத்தின் மீதான உங்களுடைய கவனம் சிதறும். ஆடம்பர செலவுகள் செய்வதால் குடும்பத்திற்குள் பிரச்னைகள் தலைதுாக்கும். இக்காலத்தில் நிதானமுடன் செயல்பட்டால் குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்கும்.

கல்வி: உங்கள் கவனத்தை முழுமையாக கல்வியில் செலுத்த வேண்டிய காலம் இது. நீங்கள் மனம் வைத்தால் தடைபட்ட விஷயங்களை மாற்றி அமைக்க முடியும். அரசுத் தேர்வில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மொழியியல், எகனாமிக்ஸ், காமர்ஸ் மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். அக்கறையுடன் படித்து தேர்வில் மதிப்பெண்கள் அதிகம் பெற்றால் மட்டுமே நீங்கள் விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெண்கள்: பணிச்சுமையால் தடுமாறுவீர்கள். குடும்ப பொறுப்புகளை நீங்கள் ஏற்க வேண்டி வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் கவலைக்குள்ளாக்கும். பெற்றோரிடம் எதிர்பார்த்த உதவிகள் இக்காலத்தில் கிடைக்காமல் போகும். உடல் ரீதியாகவும் சில சோர்வுகளை சந்திப்பீர்கள். அலுவலகப் பணியிலும் வேலைப்பளு அலைச்சல் என்று சங்கடப் படுவீர்கள். பிறந்த ஜாதகத்தில் கிரக அமைப்பு சாதகமாக இருப்பவர்கள் ஓரளவிற்கு நன்மை காண்பர்.

உடல்நிலை: ஏழரை சனியின் பாத சனியாலும், ஆயுள் ஸ்தானத்தின் மீதான சனியின் பார்வையாலும் உங்கள் உடல்நிலையில் தொடர்ந்து சங்கடங்களை அனுபவித்து வருகிறீர்கள். ஒரு சிலர் விபத்துகளையும் சந்தித்து மீண்டிருப்பீர்கள். நோய்த்தொற்று, உஷ்ண நோய்கள், ரத்தக்கொதிப்பு, மூச்சுத்திணறல் என பிரச்னைகளை பலர் சந்தித்திருப்பீர்கள். சிகிச்சைக்கு கட்டுப்படாத நோய்களால் உங்கள் மனநிலையில் பாதிப்பு உண்டாகி இருக்கலாம். இந்த நிலையில் குரு ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பதால் நோய்களின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும்.

தொழில்: குருவின் 9 ஆம் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் முடங்கியிருந்த தொழில் நிலையில் இனி மாற்றம் உண்டாகும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்கள். 11ல்
சஞ்சரிக்கும் கேது தொழில் வழியான லாபத்திற்கு வழி காட்டுவார். அரசு பணியாளர்கள் இடமாற்றம், டெப்டேஷன், பதவி உயர்வால் வெளியிடம் என்ற நிலைக்கு ஆளாவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களிடம் அனுசரித்து போக வேண்டியிருக்கும். அரசு விவகாரத்தில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

பரிகாரம் திருச்சி உச்சி பிள்ளையாரை மனதில் தியானித்து புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம் உண்டாகும்.

Advertisement
Advertisement
 
Advertisement