Load Image
Advertisement

மேஷம்: குருப்பெயர்ச்சி பலன் 2022 –2023

அசுவினி: செலவுகள் அதிகரிக்கும்

செவ்வாயை ராசிநாதனாகவும், கேதுவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு விரய ஸ்தானாதிபதியான குரு பகவான் 2022 ஏப்.13ல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து பலன் தர இருப்பதால் செலவு அதிகரிக்கும். வீண்செலவுகள் மேலோங்கும். ஒரு பிரச்னையை சமாளித்து மீண்டு வருவதற்குள் அடுத்த பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும். வீண் அலைச்சல், நிம்மதியற்ற சூழல் உருவாகும். நிம்மதியான உறக்கம் இல்லாமல் போகும். மருத்துவம், சிகிச்சை என சிலருடைய இருப்பு கரையும். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் ராகு மனதை அலைபாய வைப்பார். ஆசைகளைத் துாண்டி விட்டு அதன் வழியே மற்றவர்களின் பின்னே செல்ல வைப்பார். ஒரு சிலர் தவறான வழியிலும் செல்வீர்கள். எதிர்பாலினரின் வழியே சிலருக்கு செலவுகள் கூடும். உல்லாசத்திற்காக இன்பச்சுற்றுலா செல்வீர்கள்.

நிதி:
திடீர் திடீரென செலவுகள் ஏற்படும். மருத்துவ செலவு கூடும். என்றாலும் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு வரவுகளுக்கு வழியமைப்பார். பணம் பல வழிகளிலும் வரும். விரயகுருவின் சஞ்சாரத்தால் வீடு, மனை, நிலம் என வாங்கி அவற்றை சேமிப்பாக உருவாக்கிக் கொள்வீர்கள். வீட்டைப் புதுப்பித்து உங்கள் வசதிக்கேற்ப மாற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். தொழில் ஸ்தானத்து சனி முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவார். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுபச்செலவு தோன்றும்.

குடும்பம்:
வரவிற்கு மீறிய செலவுகளால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகலாம். வெளி வட்டாரத்தில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை வீட்டிற்குள் எடுத்து வரவேண்டாம். புதிய நட்புகளின் உறவால் குடும்பத்திற்குள் சில பிரச்சனைகள் உருவாகும். உறவினர்கள் வழியில் நிம்மதியற்ற நிலை உருவாகும். யோசிக்காமல் பேசுவதும் வாக்குகள் கொடுப்பதும் வேண்டாம். அதன் வழியே வீண் சிக்கல்கள் உருவாகும். சுக ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் உங்கள் மனம் விரும்பிய சந்தோஷத்தை அடைந்து மகிழ்வீர்கள்.

கல்வி:
கவனத்தை சிதற விடாமல் கல்வியில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டிய காலம் இது. சிலருக்கு மனதில் எதிர்மறையான சிந்தனை தோன்றக்கூடும். 7 ஆம் இடத்து கேதுவால் காதல், அதன் வழியே மனதில் குழப்பம் என சங்கடங்கள் உருவாகும். எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவம், பொறியியல் அறிவியல் மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். அரசுத் தேர்வுகளுக்கு விடாமுயற்சி தேவைப்படும்.

பெண்கள்:
அமைதியாக இருந்து செயல்பட வேண்டிய காலம் இது. சனிபகவானின் பார்வைக்கு சுகஸ்தானம் ஆளாவதால் தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாகலாம். நட்பு வட்டத்தால் சில படிப்பினைகள் தோன்றும். எதிர்பாலினரால் சந்தோஷம் தோன்றி அதன் வழியே தேவையற்ற பிரச்னைகள், பணஇழப்பு, அவமானம் ஏற்படலாம். மனம் அலைபாயாமல் இருந்தால் வீண் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். பெரியோரின் ஆலோசனை ஏற்பது நல்லது.

உடல்நிலை:
உஷ்ண சம்பந்தமான நோய்கள் தோன்றலாம். சுவாசக் கோளாறு, நோய்த் தொற்றுக்கு வாய்ப்புண்டு. சிலருக்கு இனம் புரியாத நோய்களால் சங்கடம் ஏற்படும் என்றாலும் ரோக, ஆயுள் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் அவற்றில் இருந்து மீண்டு குணம் பெறுவீர்கள்.

தொழில்:
விரயத்தில் குரு சஞ்சரிக்கும் இக்காலத்தில் உங்கள் தொழில் ஸ்தானாதிபதியான சனி தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார் என்பதால் தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள். விரயம் உருவாக வேண்டுமென்றால் கையில் வருமானம் இருக்க வேண்டும். இக்காலத்தில் தொழிலில் பாதிப்பு ஏற்படாது. வழக்கமான வருமானம் வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஆதாயம் கூடும். ஜென்ம ராகுவால் திடீர் வரவுகளுக்கு வழியுண்டு. பணியாளர்களுக்கு இப்போதுள்ள நிலையே தொடரும். சிலர் இடமாறுதல் அடைவர். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். புதிய தொழில் முயற்சியில் இறங்க வேண்டாம். இரும்பு, கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் காணலாம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தவறுகளுக்கு இடம் கொடுத்தால் பாதிப்பு உண்டாகும்.

பரிகாரம்: வினைகள் தீர்க்கும் விநாயகரை வழிபட நன்மைகள் கூடும். ஒருமுறை கீழப்பெரும்பள்ளம் சென்று கேதுவை தரிசியுங்கள்.

பரணி: புதிய நட்புகள் உண்டாகும்

தைரியமும் வீரியமும் கொண்ட செவ்வாயை ராசிநாதனாகவும், கலைக்காரகனான சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு இதுவரை லாபகுருவாக சஞ்சரித்து பலன்களை வழங்கியவர் 2022 ஏப்.13 முதல் விரய குருவாக பலன்களை வழங்கப்போகிறார். உங்கள் ராசிநாதனும் குருவும் நட்பிற்குரியவர்கள் என்பதுடன் உங்களுக்கு பாக்கியங்களை வழங்கிடக் கூடியவரும் குருதான். 12 ஆம் இடத்தில் மறையும் கிரகம் பலனளிக்காது என்பது பொது விதி. ஜோதிடத்தின்படி குரு தான் அமரும் இடத்திற்கு பலன் வழங்க மாட்டார் அவர் பார்க்கும் இடங்களுக்கே அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார் என்பது பொதுவிதி. அதனால் அவரது பார்வைகள்தான் நன்மைகளை உண்டாக்குகிறது. விரய குருவால் பெரிய அளவிற்கு சங்கடங்கள் உண்டாகாது. செலவுகள் மட்டும் பல வழிகளிலும் உண்டாகும். இக்காலத்தில் ராகு வேற்றுமொழி, இனத்தவரின் நட்புகளை ஏற்படுத்துவதுடன் தேவையற்ற ஆசைகளை உண்டாக்கி தடுமாற வைப்பார். தகுதிக்கு குறைவானவர்களுடன் இணைத்து வைத்து அதன் வழியே உங்களை திசை திருப்புவார் என்பதால் சபலத்திற்கு ஆட்படாமல் இருப்பது உங்களுக்கு நன்மை தரும்.

நிதி:
ஒரு பக்கம் வழக்கமான வருமானம் வந்து கொண்டிருக்கும். திடீர் வருவாய்க்கும் வழியுண்டு என்றாலும் மறுபக்கம் எதிர்பார்க்காத வகையில் செலவும் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் கூடும். குடும்பத்தில் ஒருவர் விட்டு ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுவர நேரும். குறுக்கு வழியில் சம்பாதிக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை இழக்க வேண்டியிருக்கும். சேமிப்பு பல வகையிலும் கையை விட்டுப் போகும் காலம் என்பதால் அசையா சொத்துகளுக்காக அவற்றை செலவு செய்வதும். வீடு, மனை என்று வாங்குவதும், புதிய வீட்டிற்கு குடி போவதும், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடத்துவதும் எதிர்காலத்தை சுபிட்சமாக்கும்.

குடும்பம்: ஏழில் சஞ்சரிக்கும் கேதுவும், ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவும் ஆசைகளை உண்டாக்கி மனதில் மயக்கத்தை தோற்றுவிப்பதால் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் போகும். கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை குறையும். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கினால் கவுரவம், அந்தஸ்து போன்றவற்றுக்கு சங்கடம் உண்டாகலாம். உறவினரால் அனுகூலம் இருக்காது. பிள்ளைகள் பற்றிய சிந்தனைகளையும் மறந்து உங்கள் சந்தோஷத்தை மட்டுமே எண்ணி செயல்படுவீர்கள்.

கல்வி:
மோட்சக்காரகனின் பார்வைக்கு நீங்கள் ஆளாவதால் கல்வியில் மந்தமான நிலை உண்டாகும். கடல் கடந்து சென்று படிக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களும், மருத்துவம் பயில்பவர்களும் கவனமுடன் படித்தால் வெற்றி உறுதி. அரசுத் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் மற்ற சிந்தனைகளை ஒதுக்க வேண்டும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடைகளை உருவாக்கும் வகையில் சில புதிய நட்புகள் தோன்றும். அவற்றை விலக்குவதின் மூலம் வாழ்வில் நன்மை காணலாம்.

பெண்கள்:
ஏழாம் இடத்து கேது மனதில் சஞ்சலத்தை உண்டாக்குவார். ஒரு சிலருக்கு வேறு சிந்தனையை உருவாக்குவார். ஆசைகளைத் துாண்டி உங்கள் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்குவார். விரய குருவால் படுக்கை, உறக்கம் என்பதில் முழுமையைக் காண முடியாமல் போகும். உறவுகளிடம் எச்சரிக்கை வேண்டும். தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்து செல்வதால் நன்மை உண்டாகும். சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ஜாதகத்தின் தசா புத்தி நன்றாக இருந்தால் நன்மையே நடக்கும்.

உடல்நிலை:
ஆயுள்காரகன் சனியின் பார்வைக்கு விரய ஸ்தானம் ஆளாவதும். குரு விரய குருவாக சஞ்சரிப்பதும் சிறிய அளவில் விபத்துக்கு ஆளாக நேரும். தொற்று நோயால் பாதிப்பு ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் வந்துகொண்டே இருக்கும். தவறான பழக்கக்கத்தால் மறைமுக நோய் உண்டாகும் என்றாலும் ஆறாம் இடத்தை குரு பார்ப்பதால் எந்த நோய் வந்தாலும் அது வந்த வழியே போய்விடும் என்றே சொல்லலாம்.

தொழில்: திட்டமிட்டு செயல்படுபவற்றில் லாபம் காணலாம். அதே சமயம் கவனக்குறைவால் சிலவற்றில் நஷ்டத்தை சந்திக்க நேரும். புதிய முதலீடுகள் வேண்டாம். ஆகஸ்ட் வரையில் தொழில் ஏற்றம் இறக்கமாகவே இருக்கும். 2022 மே 25ல் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்ரமடைவதால் நிதானம் வேண்டும். யோசிக்காமல் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அலுவலகப் பணியிலும் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்காமல் போகும். ரியல் எஸ்டேட், கெமிக்கல், கமிஷன் தொழில், பெட்ரோல், சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றில் முன்னேற்றம் தோன்றும். கூட்டுத் தொழிலில் சங்கடம் உண்டாகும்.

பரிகாரம்: துர்கை வழிபாட்டால் துன்பம் தீரும். எதிர்ப்பு விலகும். ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபடுங்கள்.

கார்த்திகை 1 ஆம் பாதம்: முயற்சியால் வெற்றி

ராஜ கிரகமான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டு, செயல்பாட்டிற்குரிய செவ்வாயை ராசி நாதனாக கொண்டவர்களே. சூரியன் உங்கள் ராசியில்தான் உச்சம் பெறுகிறார் என்பதால் எப்போதும் எங்கும் முதன்மையாளராக இருக்க விரும்புவீர்கள். வேகம், தைரியம், துணிச்சல் என்பது பிறவி சொத்தாக இருக்கும். நினைத்ததை அடைய எப்போதும் முயற்சி செய்வீர்கள். ராசிக்கு 12 ஆம் வீட்டில் 2022 ஏப்.13 முதல் குரு சஞ்சரிப்பதால் சில தடைகள், தோல்விகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதிகமான செலவுகளால் ஒரு பக்கம் திணறுவீர்கள். மறு பக்கம் ஓய்வு உறக்கம் இல்லாமல் உழைக்கும் காலமாகவும் இருக்கும். நட்புகளிடையே பிரச்னை தோன்றலாம். வாழ்க்கைத் துணைக்கு சில சங்கடம் உண்டாகலாம். அந்நியர்களால் அவதிக்கு ஆளாகலாம்.

நிதி: தனகாரகன் குரு 12ல் மறைவதால் வருமானத்தில் தடையை ஏற்படுத்தும். வழக்கமான வருவாய் வந்து கொண்டிருந்தாலும் செலவு அதை விட பன்மடங்கு கூடும். நவீன சாதனங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆடம்பரத்தால் இருப்பு கரையும். மருத்துவ செலவு அதிகரிக்கும். தொழில், பணியில் இருக்கும் நிலையே நீடிக்கும். செலவுகளுக்கேற்ப ஜென்ம ராகு வருமானத்தை வழங்குவார். திடீர் அதிர்ஷ்டங்களை உருவாக்கி சங்கடங்களை நீக்குவார். குறுக்கு வழியில் சென்று பணம் சம்பாதிக்கும் ஆசை உண்டாகலாம் கவனம்.

குடும்பம்: கணவன், மனைவிக்குள் சச்சரவு தோன்றி மறையும். பிள்ளைகளுக்காக செலவு செய்து அவர்களுடைய எதிர்காலத்திற்குரிய வழிகளை உருவாக்குவீர்கள். தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் போனால் மட்டுமே நிம்மதியை எதிர்பார்க்கலாம். புதிய நட்புகளால் குழப்பம், நிம்மதியற்ற நிலை உருவாகலாம்.

கல்வி: சின்னச்சின்ன தடைகள் உண்டானாலும் உங்கள் முயற்சியால் வெற்றியை எட்டுவீர்கள். மனதில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் கவனமுடன் படித்தால் தேர்வுகளில் வெற்றி உறுதி. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற ஒரு சிலரின் கனவுகள் இக்காலத்தில் நிறைவேறும். மேல்நிலை மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவர். விருப்பமான பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். வெளி நாடு, மாநிலம் சென்று கற்கும் நிலையும் சிலருக்கு உண்டாகும்.

பெண்கள்: புதிய நட்புகளால் சங்கடங்கள் உண்டாகும். நீங்கள் விலகி விலகிச் சென்றாலும் உங்களை நெருங்க சிலர் முயற்சிப்பர். அடிக்க அடிக்க இரும்பும் இளகும் என்பதுபோல் உங்கள் மனம் மாறவும் வாய்ப்புண்டு. அதனால் குடும்பத்தில் சிக்கல் உருவாகும். கணவன் மனைவி பிரச்னையில் மூன்றாவது நபருக்கு இடமளிக்க வேண்டாம். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் தேவை. அடுத்தவருடைய ஆலோசனையால் வீண் பிரச்னை ஏற்படலாம். பெற்றோர், பெரியோர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். ஆன்மிக சிந்தனையை வளர்த்துக் கொள்வதின் வழியாக பிரச்னையில் இருந்து விலக முடியும்.

உடல்நிலை: ஆயுள் காரகனின் விரய ஸ்தான பார்வையினால் உடல் பாதிப்பு உண்டாகலாம். விரய குருவும் மருத்துவ செலவை ஏற்படுத்தலாம். ஏழாம் இடத்தின் மீதும் சனியின் பார்வை விழுவதால் உங்கள் துணையின் உடல்நிலை பாதிக்கப்படலாம். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. சிறுநீரகப் பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு உடல் அசதி, மூட்டுவலி ஏற்படலாம். ஆனால், ரோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் விரைவில் நிவாரணம் உண்டாகும்.

தொழில்: செய்யும் தொழில் நிதானமாக செல்லும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. சிலர் கூட்டாளிகளால் சிக்கல்களை சந்திப்பர். அரசுப் பணியாளர்கள் நிதானமுடன் செயல்படவும். சிலருக்கு இடமாறுதல் ஏற்படும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். கமிஷன் தகராறு காரணமாக பில் பாஸாகாமல் இழுபறி நீடிக்கும். புதிய தொழில் பற்றிய சிந்தனை வேண்டாம். நியாயமான வருவாய்க்கு மாறாக வருமானம் ஈட்ட நினைப்போர் சட்ட சிக்கல்களுக்கு ஆளாகலாம். புதிய ஒப்பந்தம் இப்போது வேண்டாம். அரசியல் வாதிகள் தங்கள் கவுரவத்தை உயர்த்திக்கொள்ள செலவுகள் செய்ய வேண்டியதாக இருக்கும்.

பரிகாரம்: இருளகற்றி ஒளி வழங்கும் சூரியனை தினமும் வணங்குங்கள். நன்மை உண்டாகும்.

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
 
Advertisement