சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பஞ்சலோக சிலைகள் மற்றும் அரிய பொக்கிஷங்கள் கிடைத்துள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மேற்கு கோபுரம் கற்பக விநாயகர் கோவில் உள்ளது, இதன் எதிரில் உள்ள பைரவர் கோவிலுக்கு கீழ் புதிய பூங்கா அமைக்க 5 மாதங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு பழங்கால மண்டபம் தென்பட்டுள்ளது. இப்பணிகள் இரவு நேரத்தில் நடந்துள்ளதால் இது தொடர்பான தகவல் யாருக்கும் தெரியவில்லை.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளம் தோண்டும்போது பழங்கால பஞ்சலோக சிலைகள் கிடைத்துள்ளன. சில அரிய பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. அதனை கோவில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.இது குறித்து சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களிடம் கேட்ட போது, அப்படி எதுவும் கிடைக்கவில்லை. மேற்கு கோபுர உள் வாயிலில் கீழ் மட்டத்தில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் இருந்திருக்கலாம். நாளடைவில் கோவில் மட்டம் உயரும் போது கீழ் உள்ள மண்டபம் மண்ணால் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளம் தோண்டும் போது அரிய பொருட்கள் கிடைத்து உள்ளதாக சிலர் தவறாக வதந்தி பரப்பியுள்ளனர் என தெரிவித்தனர். இந்த தகவல்களால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடராஜர் கோவிலில் அரிய பொக்கிஷம்? சமூக வலைதள தகவலால் பரபரப்பு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்