Load Image
dinamalar telegram
Advertisement

வளர்ந்து வரும் மண்டைக்காடு பகவதி அம்மன் புற்று: தேவ பிரசன்னத்தில் தகவல்

மணவாளக்குறிச்சி: சுயம்புவாக புற்று வடிவில் காட்சி தரும் மண்டைக்காடு பகவதி அம்மன் வளர்ந்து வருவதால் கோயில் மே ற்கூரை மற்றும் அகலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவே தீ விபத்து ஏற்பட்டதாக தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோயிலின் கருவறை மேற்கூரை எரிந்து சேதமானது. ஆனால் சுயம்புவான அம்மன் புற்றில் அப்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை தேவ பிரசன்னம் மூலம் அறிய வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் தேவபிரசன்னம் பார்ப்பதற்கு, குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது.

இதற்காக கேரள மாநிலம் வயநாடு பகுதியை ச் சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீநாத் மற்றும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேவ பிரசன்னம் பார்க்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று காலை மண்டைக்காடு கோயிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியை தொடங்கினர். தேவபிரசன்னம் பார்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்பதால், பக்தர்கள் மண்டைக்காடு கோயில் முன்பு திரளாக குவிந்தனர். கொரோனா ஊரடங்கால் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கோயிலினுள் அனுமதிக்கப்பட்டனர். தேவ பிரன்னத்தில், மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் உருவாகும் முன்பு மேற்கே சாஸ்தா கோயில் மூல கோயிலாக இருந்துள்ளது. கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இடையே விரோத மனப்பான்மை ஏற்பட்டு, அதனால் பிரச்னைகள் நடந்து வருகிறது. அம்மனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் சுத்தமாக இல்லை . இங்கு தீ விபத்து ஏற்படும் முன்பே ஏற்கனவே புற்றில் பாதிப்பு ஏற்பட்டது. அதை சுத்தமான சந்தனத்தால் நிவர்த்தி செய்யவேண்டும். இங்கு பூஜை காரணங்கள் முறையாக நடக்கவில்லை. யாராவது நல்ல காரியம் செய்ய வந்தாலும் தடைசெய்கிறார்கள். கோயில் அசுத்தமாக உள்ளது. கோயிலுக்குள் வியாபாரம் நடக்கிறது. கோயிலை சுற்றி நாக நடமாட்டம் அதிகமாக உள்ளது. கோயிலில் வேத ஜெபம் இல்லை . மந்திர ஜெபம் செய்வதில்லை. முன்பு மாசிக்கொடையின் போது நடந்த ஒரு பூஜை சடங்கு சமீபகாலமாக நடத்தப்படவில்லை. கோயிலில் ஆச்சார்ய அனுஷ்டானங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், பூஜாரிகள் பக்தியுடன் வேலை செய்யவில்லை.

கோயிலுக்குள் அம்மனை வைத்து வியாபாரம் நடக்கிறது. பட்டுகள் பூக்கள் அம்மனுக்கு சார்த்தாமலேயே வெளியில் செல்கிறது. குளம் பராமரிக்கப்படவில்லை. கோயில் பிரகாரத்தில் ஒரு முனிவரால் பூஜைசெய்யப்பட்டதாக கூறப்படும் ஸ்ரீசக்கரத்திற்கு பூஜைகள் முறையாக நடக்கவில்லை. கோயில் தீவிபத்து சுயம்புவான அம்மன் புற்று வளர்ந்து வருவதையும், அதனால் கோயிலின் மேற்கூரை மற்றும் அகலத்தை மீண்டும் அதிகப்படுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதற்கான அறிகுறியாகவே நடந்துள்ளது, என கூறப்பட்டுள்ளது. அம்மன் புற்று வளர்ந்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே இரண்டு முறை கோயில் உயரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாறசாலை ராஜேஷ் போற்றி கோயிலில் சிறப்பு கணபதி ஹோமம் நடத்தினார். தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோயில் தந்திரி சங்கர நாராயணன், குமரி மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சிவகுற்றாலம், தேவசம் உதவி ஆணையர் ரெத்னவேல் பாண்டியன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து இன்ஜினியர் ஐயப்பன், ஆய்வாளர் கோபாலன், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமத் தலைவர் சை தன்யானந்த மகராஜ், மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், பேரூராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன், நாகர் கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் மீனாதேவ் மற்றும் மாவட்ட இந்து கோயில்களின் கூட்டமைப்பு, இந்து முன்னணி, ஹைந்தவ சேவா சங்கம், தேவி சேவா சங்கம், பெ ரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு ஆகிய அமை ப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement