சிதம்பரம்: புரெவி புயல் காரணமாக கொட்டி தீர்த்த, 34 செ.மீ., அதிகன மழையால், சிதம்பரம் நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது.
உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், 43 ஆண்டுகளுக்கு பின், 5 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக் கடலில் உருவான புரெவி புயலின் தாக்கத்தால், கடலுார் மாவட்டத்தில், மூன்று நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி முதல், நேற்று காலை, 8:30 வரையில் சராசரியாக, 18 செ.மீ., மழை பதிவானது.
அதிகபட்சமாக சிதம்பரத்தில், 34 செ.மீ., மழை கொட்டியது.இதனால், சிதம்பரம் நகரமே வெள்ளக்காடாக மாறியது. நகர வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது; வயல்கள் தண்ணீர் சூழ்ந்து, குளமாக காட்சியளிக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவில், 48 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்குள்ள, சிவகங்கை குளம் நிரம்பியது. தண்ணீர் வடிய வழியின்றி, கோவிலுக்குள் புகுந்தது. நடராஜர் வீற்றிருக்கும் சித்ரசபையை சுற்றிலும், 5 அடி உயரத்திற்கும், கோவில் வளாகம் முழுதும் இடுப்பளவிற்கும் தண்ணீர் தேங்கியது.இதற்கு முன், 1977ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், நடராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. 43 ஆண்டுகளுக்கு பின், தண்ணீர் சூழ்ந்துள்ளதாக கோவில் தீட்சிதர்கள் கூறினர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சூழ்ந்த தண்ணீர்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.