dinamalar telegram
Advertisement

பாம்பு பயத்திலிருந்து காக்கும் மானசா தேவி!

Share

நாம் செய்யும் செயல்களின் பலனை அனுபவிப்பதே, வினைப் பயன் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என, வள்ளுவப் பெருந்தகையும் இக்கருத்தையே வலியுறுத்துகிறார். எனவே, நாம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி, நல்லதையே சிந்தித்தும், நல்லதையே செய்தும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதே, ஆன்றோர் தரும் அனுபவ மொழியாகும். பரத வம்சத்தில் பிறந்த பரீட்சித்து என்ற மன்னன், பாரத தேசத்தை ஒரே குடையின் கீழ் ஆண்டு வந்தான். ஒரு நாள் வேட்டையாடுவதற்காக காட்டிற்குச் சென்றான். பகல் வெகுநேரம் காட்டில் திரிந்த மன்னன், உடன் வந்தவர்களைப் பிரிந்து, தனியே சென்று கொண்டிருந்தான். அப்போது, அவனுக்கு தாகம் மிகுதியாக எடுத்தது.

எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்காத பரீட்சித்து, மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்; அவரை அணுகி, தாகத்திற்கு தண்ணீர் கேட்க நினைத்தான். தியானத்திலிருந்த முனிவரின் காதுகளில், மன்னன் பலமுறை அழைத்தும் விழவில்லை. மிகப் பெரிய சக்கரவர்த்தியாகிய தான் வந்தும், மதிக்காத முனிவரை அவமதிக்க எண்ணிய மன்னன், அங்கு செத்துக் கிடந்த ஒரு பாம்பை எடுத்து, அவர் கழுத்தில் போட்டு, சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்து, முனிவரின் குமாரர் அங்கு வந்தார். அவரும் பெரிய தவயோகி. தம் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பு கிடப்பதைப் பார்த்து, அதை உடனே அகற்றி, தந்தைக்கு இப்படிச் செய்தவர் யார் என்பதை, ஞானக்கண்ணால் அறிந்தார். தவறு செய்தவன், பரீட்சித்து மன்னன் என்பதை அறிந்து, பாம்பால் தந்தையை அவமதித்த மன்னன், இன்றிலிருந்து
ஏழு நாட்களுக்குள் பாம்பு தீண்டி இறப்பானாக... என, சபித்து விட்டார். முனி குமாரரின் சாபத்தைப் பலிக்கச் செய்ய, நாகலோகத்தில் ஆலோசனை நடக்கத் துவங்கியது. தட்சகன் என்ற நாகம், அரசனைக் கொல்வது என முடிவாகிப் புறப்பட்டது.இச்செய்தி மன்னனுக்கும் சென்றது; பயத்தால் நடுங்கினான். மந்திர மாயங்கள் எல்லாம் செய்தான்; தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது நீதியாதலால், ஒன்றும் பலிக்கவில்லை. கடலின் நடுவே மிகப்பெரிய பாதுகாப்புடன் கூடிய வசிப்பிடம் தயாராகியது. சுற்றிலும், ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாத்து நின்றனர்.

மந்திர தந்திரங்களில் கை தேர்ந்தவர்கள், விழிப்புடன் தயார் நிலையில் இருந்தனர். நாட்கள் இரண்டாகியது. மன்னன் துாக்கமின்றித் தவித்தான். எளிதில் பாம்பு நெருங்காத வண்ணம், ஒற்றைச் சங்கிலியில் தொட்டில் கட்டி, அதில் அமர்ந்த வண்ணமே இருக்கத் துவங்கினான். ஒரு நாள், யாரோ சில முனிவர்கள், மன்னனைக் காண மாம்பழங்களுடன் வந்திருப்பதாக அறிவித்தனர்; உடனே, அவர்களை அழைத்தான். நடுவில் நின்ற முனிவர், ஒரு மாம்பழத்தை எடுத்து, மன்னா... இதைச் சாப்பிட்டால் எந்த விஷமும் உன்னைக் கொல்லாது... என்று, ஒரு பழத்தை அவனிடம் வழங்கினார். முனிவர்களாக வந்தவர்கள் நாகர்கள் என்பதையும், மாம்பழத்தின் உள்ளே வண்டு வடிவில், தட்சகன் என்ற நாகம் மறைந்துள்ளதையும் யாரும் அறியவில்லை. மன்னன் அந்த மாம்பழத்தை உண்பதற்காக கத்தியால் நறுக்க, அதனுள் இருந்த வண்டு, மிகப்பெரிய நாகமாக மாறி அவனைத் தீண்ட, மன்னன் மாண்டு விட்டான்; முனிவரின் சாபம் பலித்ததும், வந்திருந்த நாகர்கள் மறைந்தனர்.

இச்செய்திஅறிந்து பரீட்சித்து மன்னனின் மகன் ஜனமேஜயன் ஓடி வந்தான். தந்தை இறந்ததையறிந்து, அழுது புலம்பினான். உடனிருந்தோர் அவனைத் தேற்றி, ஈமக்கிரியைகளைச் செய்ய வைத்து, ஜனமேஜயனை அடுத்த மன்னனாக்கினர். தந்தையைக் கொன்றது ஒரு பாம்பு எனக் கோபப்பட்ட அவன், எல்லாப் பாம்புகளையும் அழித்து, பழி வாங்க சபதமெடுத்தான். மிகப்பெரிய சர்ப்ப யாகம் ஒன்று செய்தான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ஜனமேஜயன் கேளாததால், அரசாணைக்குப் பயந்து, அந்தணர்கள் யாகத்தைத் துவங்கினர். கூட்டம் கூட்டமாக, யாகத் தீயில் நாகங்கள் விழுந்து, சாம்பலாகத் துவங்கின. பரீட்சித்தைக் கொன்ற தட்சகன் நாகம் பயந்து, இந்திரனிடம் தஞ்சமடைந்தது. இந்திரனும், என் சிம்மாசனத்தைச் சுற்றிக் கொள்; உன்னை யாக மந்திரத்தால் இழுக்க முடியாது... என, அபயம் அளித்தான். இதை, யாகம் செய்தவர்கள் அறிந்து, இந்திரனுடன் சேர்ந்து தட்சகன் வரக்கடவது... என, மந்திரம் சொல்லி யாகம் வளர்த்தனர். இது ஒருபுறம் இருக்க, ஆஸ்தீகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவரது மனைவியின் பெயர், மானசாதேவி. அவள் அம்பிகையின் வரத்தால், சக்தி அம்சம் பொருந்தியவள். தாய்மையின் கருணை பூரணமாக உடையவள். தம் கணவரும், மகா தபஸ்வியுமான ஆஸ்தீக முனிவரை வணங்கி, தாங்கள் சென்று யாகத்தை நிறுத்த வேண்டும்... என்று வேண்டினாள். தந்தை மரணத்திற்குப் பழிவாங்க ஜனமேஜயன் யாகம் செய்கிறான்; அவனை தடுத்து நிறுத்தும் சக்தி, யாருக்கும் கிடையாது... என்று மறுக்கிறார்.

மானசாதேவி கணவரை அன்புடன் நோக்கி, தங்களுக்குத் தெரியாத தர்மமில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உரியவர்கள் என்பது, வேதம் போதிக்கும் நீதியல்லவா? பரீட்சித்து சுயநலத்திற்காக முனிவரை அவமதித்து தவறு செய்தான்; தண்டிக்கப்பட்டான்.
ஜனமேஜயன் ஏதும் அறியாதவன். அற வழியைப் போதிக்கும் வேதங்களை கற்ற தாங்கள் தான், அவனுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லி, இந்த அபத்தமான யாகத்தை நிறுத்தியருள வேண்டும். தங்கள் சொல், அவன் மனதை மாற்றும்; அஞ்ச வேண்டாம்... எனக் கூறுகிறாள்.
பராசக்தியின் அம்சம் பெற்ற மானசாதேவி கூறினால் அது பலிக்கும் என்று முனிவருக்கும் தெரியுமாதலால், சர்ப்ப யாகம் நடக்கும் யாகசாலைக்குச் சென்று, ஜனமேஜயனிடம், உடனடியாக யாகத்தை நிறுத்து. இப்படிச் செய்தால், இதன் பாவம் உன் சந்ததிகளையும் பாதிக்கும்; நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்... என்றார்.
யார் சொல்லியும் கேளாத மன்னனின் மனம், மானசாதேவியால் அனுப்பப்பட்ட ஆஸ்தீக முனிவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டது.

இருப்பினும், மகா சக்கரவர்த்தியாகிய தன் தந்தையின் மரணம், வீர மரணமாக இல்லாமல், பாம்பு தீண்டி நிகழ்ந்ததை எண்ணி, முனிவரைப் பார்த்து, வணக்கத்துடன், பெருமானே... பொறுத்தருள வேண்டும். என் மனம் ஆறவில்லை; பழிக்குப்பழி வாங்குவது என்பது க்ஷத்ரியர்களின் இயல்பு. தாங்கள் இதில் தலையிடாதீர்கள்... என, வேண்டினான்.
ஆஸ்தீக முனிவர் வேதங்களையும், நீதி நுால்களையும் எடுத்துக் காட்டி, நீண்ட அறிவுரை வழங்கினார். ஒரு முனிவரை, அதுவும் தவத்திலிருந்ததால், தன்னைச் சுற்றி நிகழும் எதையும்
அறியாமலிருந்தவரை அவமதிப்பது, தெய்வக் குற்றமாகும். இந்த மகாபாவத்தைச் செய்தும், உன் தந்தை உயிரோடிருந்தால், அறத்தின் வாய்மைக்கு அர்த்தமில்லாமல் போய் விடும். நீயும், மக்களும், இந்நாடும் சுபிட்சம் இழந்து வாடியிருப்பீர்கள். நடந்ததெல்லாம் தெய்வச்செயல்; கெட்டதையெல்லாம் மறந்து, நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்ய, முதலில் யாகத்தை நிறுத்து... என, உபதேசித்தார்.
பரத வம்சத்தில் பிறந்தவனாதலாலும், மாந்தாதா, யது, ஸ்ரீராமன் போன்றோரை முன்னோராகப் பெற்றிருந்தவனாதலாலும், நீதிக்கு கட்டுப்பட்டு, மானசாதேவியின் அருளால், ஆஸ்தீக முனிவர் கூறிய
அறிவுரைகளை ஏற்று, சர்ப்ப யாகத்தை நிறுத்தினான்.

அப்போது, அங்கு மானசா தேவியும் வருகை தந்து, தன் சக்தியால், யாகத்தீயில் பொசுங்கிய நாகங்களை, மீண்டும் உயிர்த்தெழச் செய்து, தட்சகன் உட்பட அனைத்து நாகங்களையும் காப்பாற்றினாள்; நாகலோகமே மகிழ்ந்தது. பாம்புகள், தேவியை பூஜித்து வழிபட்டனர்.
மானசா தேவியை வழிபடுபவர்களை, இனி தீண்ட மாட்டோம்... என, பிரமாணமும் செய்தனர்.யாகத்தை நிறுத்தினாலும், தந்தையின் மறைவு தந்த வேதனையால், ஜனமேஜயன் மட்டும் மனம் ஆறாமலும், சோகத்துடனும் இருந்தான். அவனை சாந்தப்படுத்த, அன்னை பராசக்தியின் அருள்
வரலாறுகளைக் கூறினார் முனிவர். அசுரர்களை அழித்து மூவுலகையும் காப்பாற்றியது, இந்திரன் மனைவி சசிதேவியின் கற்பைக் காத்தது என, நாம் தொடர்ந்து சிந்தித்து வரும் கதைகளையெல்லாம் கூறினார். இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்க கேட்க, அவனது மனம் கோபமும், சோகமும் நீங்கி
சாந்தமடைந்தது.

நவராத்திரி வழிபாட்டின் மகிமைஅறிந்து, அன்னையை ஆராதிக்க விரும்பினான். ஆஸ்தீக முனிவரும், மானசா தேவியும் உபதேசிக்க, மன்னன் ஜனமேஜயன் விரதமிருந்து, அன்னையை வழிபட்டு, வரங்கள் பல பெற்று, திருமணம், புத்திர பாக்கியம் என, எல்லா மங்களங்களும் பெற்று நல்லாட்சி செய்தான்.
இந்த வரலாறு, பல விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக ஸ்ரீமத் தேவீபாகவதம் எனும் நுாலில் அமைந்துள்ளது. எக்காரணம் கொண்டும் பெரியவர்களையும், பெற்றோரையும், வழிகாட்டும் குருநாதர்களையும், வேதம் கற்றவர்களையும், அறிஞர்களையும் அவமதிக்கக் கூடாது.
நியாய தர்மங்களை சீர்துாக்கிப் பார்க்காமல், கோபத்தாலும், அவசர புத்தியாலும் மதியிழக்கக் கூடாது. எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது. இவற்றை ஏற்று, நல்வழியில் வாழ்ந்தால், நமக்கும், நாம் வாழும் நாட்டிற்கும் நல்லது. எந்தச் சூழலிலும், அறிவுத் தடுமாற்றம் ஏற்படாமல், நிதானத்துடன் செயல்பட, இது போன்ற அன்னையின் அற்புத வரலாறுகளைப் படித்தும்,
கேட்டும் இன்புற வேண்டும்.இக்கதையைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படாது. குணப்படுத்த முடியாத நோய்களெல்லாம் குணப்படும்.
ஸ்ரீ மானசா தேவியை வழிபடுபவர்களுக்கு, நாகதோஷம் நீங்கும். ஹரித்வாரில் கங்கைக் கரையில் தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள் ஸ்ரீ மானசா தேவி.

பூஜிக்கும் முறை: பெரிய தாம்பாளத்திலோ அல்லது துாய்மையான தரையிலோ நடுவில் அறுகோணமும், அதை நாகம் சுற்றியிருக்குமாறும் கோலமிட்டு அலங்கரித்து, நடுவில் திருவிளக்கேற்றி சுற்றி எட்டு தீபங்கள் ஏற்றவும். ஓம் ஸ்ரீ மானசாதேவ்யை நமஹ... என்று அர்ச்சனை செய்யவும்.

நிவேதனம்: கற்கண்டு, திராட்சை, ஏலக்காய், குங்குமப்பூ கலந்து காய்ச்சிய பசும்பாலும், கொத்துக்கடலை சுண்டலும் நிவேதனம் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு: சுமங்கலிகளுக்கு ஊதா நிற ரவிக்கைத் துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி, ஆரத்தி எடுத்து, பூஜையை நிறைவு செய்யவும்

சுலோகம்
நர்மதாயை நம:ப்ராத: நர்மதாயை நமோநிசி|
நமோஸ்து நர்மதே துப்யம் ரக்ஷமாம் விஷஸர்ப்பத|
ஓம் மானஸா தேவ்யை நம:
- ஸ்ரீதேவீபாகவதம்

பொருள்: காலை, மாலை, இரவு என முப்போதும், நர்மதா நதியையும், மானசாதேவியையும் எண்ணி வணங்குகிறேன். சர்ப்பம் முதலிய விஷ ஜந்துக்கள் தீண்டாமல், பாதுகாத்து அருள வேணும். இந்த சுலோகத்தை உச்சரிப்புடன் கற்று சொல்லி வருபவர்களுக்கு எவ்வித பயமும் ஏற்படாது.

நவராத்திரி எட்டாம் நாளுக்கான நிவேதனம்

கல்கண்டு பால்!

தேவையான பொருட்கள்
செய்முறை

நவராத்திரிக்கு நிவேதன உணவு
செய்யச் சொல்லிக் கொடுக்க, ஜி.ஆர்.டி.,
ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம்
பிரசாத் முன் வந்தார். ஒவ்வொரு பெயராகச்
சொல்லச் சொல்ல, நிமிட நேரங்களில்
எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார்.
இனி தினமும், சீதாராம் பிரசாத் சொல்லிக்
கொடுப்பார்.சீதாராம் பிரசாத்

கறுப்பு கொண்டைக் கடலை சுண்டல்!

தேவையான பொருட்கள்

செய்முறை

கறுப்பு கொண்டைக்கடலை - 500 கிராம்
எண்ணெய் - 20 மில்லி
கடுகு - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2
கறிவேப்பிலை, - 1 ஈர்க்கு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - 10 கிராம்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 150 கிராம்
கறுப்பு கொண்டைக் கடலையை, எட்டு மணி நேரம் ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் தாளிக்கவும்.இதில், வேக வைத்த கறுப்பு கொண்டைக் கடலை, உப்பு சேர்க்கவும். பின், அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய் சேர்க்கவும்.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 2365.2; கார்போஹைட்ரேட், 221.5; புரதம், 106.3; கொழுப்பு, 112.7.இரண்டு உணவு வகைகளையும், தலா ஐந்து பேர் சாப்பிடலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
 
Advertisement