Load Image
Advertisement

பரதக்கலைக்கு நல்ல எதிர்காலம்: 'கேரியர்' ஆகவும் கற்கலாம்

சந்தியா சங்கர்



கட்டுரையாளர், பரத நாட்டியம் குறித்தஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். திருப்பூரில் சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம்நடத்தி வருபவர். கடந்த 2009 முதல், 1,500க்கும் அதிகமான பரதக் கலைஞர்கள் மற்றும் ஆசிரியர்களை உருவாக்கியவர். பரதக்கலை, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. தென்னகத்தின் பாரம்பரிய கலையான பரதம் உயர்ந்த மதிப்புள்ள கற்றல் கலையாக விளங்குகிறது. முந்தைய காலத்தில், பெண்களை பரதம் கற்க அனுப்பமாட்டார்கள். இன்று, பரதக்கலை, வாழ்வில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து அவசியம் கற்க வேண்டுமென பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். 'பத்து உருப்படிகளை' தனித்தனியாக ஆட, ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் தேவை. அதற்கு, மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக வேண்டும். சிறப்பு தகுதி பெற்று நடனமாட வேண்டியிருக்கும்.
மேடையில் உள்ள அஷ்ட திக்பாலகர்களிடம் ஆசிபெறுதல், தடையின்றி நடனம் முடிப்பது(கவுத்தம்), உடல் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கான அலாரி, அடவுகள், ஜதி, சுரம் என, 10 வகை உருப்படிகளை தனியே கற்க வேண்டும். பிடித்த கடவுளை புகழ்ந்து பேசவும், பாடவும் கீர்த்தனம்; பதம் என்பது, ஒரு கருத்தை எடுத்து, உணர்வை மேன்மைப்படுத்தி காட்டுவது; இருவரிடடையே நடக்கும் உரையாடல் போன்றது பதம்.

தில்லானா 'க்ளைமாக்ஸ்'



சினிமாவில், 'கிளைமாக்ஸ்' போன்றது 'தில்லானா'; விறுவிறுப்பானது. இறுதியாக, காவடிச்சிந்து, மயிலாட்டம் போன்றவையும் அவசியம்; இவற்றை கற்றுத்தேர்ந்த பிறகுதான் சலங்கை பூஜை மேற்கொண்டு, அரங்கேற்றம் நடத்த வேண்டும். ஆடுவது எளிது என்றாலும், உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனை மிக அவசியம். பரதநாட்டியம் ஆடும் போது, அந்த பாத்திரமாகவே மாறிவிட வேண்டும்.

அரங்கேற்றம் செய்தால், பரதத்தில் முழுமை பெற்றதாக அர்த்தம் இல்லை. அரங்கேற்றம் தான் ஆரம்பமே. அதற்கு முன் கற்பது எல்லாமே, அஸ்திவாரம் போன்றது. அரங்கேற்றத்துக்கு பிறகுதான், நாட்டியத்தை அடுத்த உயர்வான நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

அரங்கேற்றம் செய்த பிறகு, மாணவியருக்கான தகுதியை பெற்று விடுகின்றனர். பிறகு, நடனக்கலை ஆசிரியருக்கான பயிற்சியும் துவங்கிவிடும். மாணவிகளுக்கு பரதம் நன்கு தெரியும்; பரதம் கற்பிக்க தெரியாது; அதற்காகவே, ஆசிரியர் நிலை பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம், 15 ஆண்டுகள் பயின்றால், முழுமையான பரதக்கலைஞராக மாற முடியும்.

பாதை ஒழுங்காகும்



ஊருக்கு ஊர், சிவாலயங்களில் மூலவர் பெயர் மாறியிருக்கும். ஆனால், கனகசபையில் ஆடும் நடராஜர் பெயர் ஒன்றுதான். ஏனெனில், ஆடலுக்கு அரசனாக விளங்குபவர் நடராஜப்பெருமான். தாண்டவத்தில், 108 வகை தாண்டவங்கள் உள்ளன; அதற்கு பிறகு, ஏழு சிறப்பு தாண்டவம், சிவன் - பார்வதி ஆடும் தாண்டவங்களும் ஏராளமாக உள்ளன. பரதநாட்டியத்துக்கு உள்ளே வந்துவிட்டால், மற்ற அனைத்து நல்ல விஷயங்களும் தானாகவே வந்துவிடும். ஒழுக்கத்துடன் மாணவ, மாணவியர் உள்ளே வரும் போது, அவர்களது பாதை ஒழுங்கானதாக அமைந்துவிடுகிறது.

இன்றைய காலகட்டத்தில், நேர மேலாண்மை அவசியம். பரதநாட்டியம் கற்றவர்கள், நேர மேலாண்மையில் சிறந்து விளங்குவர். வழக்கமான கல்வி, நடன பயிற்சி, தேர்வுகளுக்கான பயிற்சி என, நேர்த்தியாக நேரத்தை செலவு செய்து வெற்றி பெறுவர். பரதக் கலைக்கான தேர்வு, ஜூன் - ஜூலை மாதங்களில் நடக்கும்; 200 மதிப்பெண்களுக்கான தேர்வு நடக்கும். பரதத்தின், ஆறு பிரிவுகளை முடித்தவருக்கு, 'பரத கலா' என்ற பட்டத்துடன், டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். ஐந்தாம் வகுப்பில் இருந்து, பரத நாட்டிய பயிற்சியை துவக்கினால், கல்லுாரி முடிக்கும் போது, பரதக்கலையிலும் பட்டம் பெற்று, சிறந்த பரதநாட்டிய கலைஞராக உருவெடுக்க முடியும்.

கல்வி மேம்படும்



பரதம் கற்க வரும் மாணவிகள், ஆடி பழகும் போது, கை, கால் அசைவுகளால், மூளை அதிக அளவு வேலை செய்யும். இரண்டு கரங்களில், மாறுபட்ட முத்திரைகளை மாற்றி காண்பித்து ஆட வேண்டும்; அதற்காக மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய துவங்கும். இதன் மூலம், வழக்கமான கற்றல் பணி எளிதாக மாறும்; தேர்வுகளில், வெற்றியாளராக மாற முடியும்.

பரதம் ஆடும் போது, கலைஞர்களின் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்கு செயல்படும்; இது, முழு நேர உடற்பயிற்சி செய்தவர்களுக்கு இணையான ஆரோக்கியத்தை வழங்கும். இதில், ஒரு மணி நேரம் 50 நிமிடம் வரை, தொடர்ச்சியாக ஆடி பழகுவது, சிறப்பான யோகா மற்றும் மூச்சு பயிற்சி செய்ததற்கு இணையான பலன்களை அளிக்கும்.

உடல், மன உற்சாகம்



பரதக்கலைஞரை பொறுத்தவரை, எவ்வளவு துன்பம் வந்தாலும், எளிதாக கோபத்தை கையாண்டு, காய் நகர்த்திவிடுவார்கள். நாட்டிய கலையால், மனமும், உடலும் எப்போதும் உற்சாகமாகவே இருக்கும். நாட்டிய கலைக்கு வந்துவிட்டால், தானாகவே திறமைகள் வளர்ந்துவிடுகின்றன. இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிப்பது பரதநாட்டியம். பரத நாட்டியம் கற்றவருக்கு பள்ளி, கல்லுாரி பாடங்களும் எளிதாக மாறிவிடும். சிற்பங்களை பார்த்தாலே, அதன் வரலாறுகளை கூறும் அளவுக்கு, பரதக்கலைஞர் வல்லமை பெறுவர்.

நடனக்கலைஞர் என்றாலே, நமது சமுதாயத்தில் உயர்வான மதிப்பும் உள்ளது.

பொழுதுபோக்கிற்காக, சிலர் பரதம் கற்கின்றனர். பரதக்கலையை, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல, பரதக்கலையை 'கேரியர்' ஆகவும் எடுக்கலாம்.

மன அழுத்தம் இருக்காது



இளம் தலைமுறையினர், சிறு வயதில் இருந்தே பரதம் கற்கும் போது, மனம் பக்குவப்படுகிறது. கற்றலில் ஆர்வம் பெருகுவது போல், எத்தனை சோதனை வந்தாலும், மன அழுத்தம் இருக்காது. எப்படியெல்லாம், கோபத்தை கையாள வேண்டும் என்பது அத்துப்படியாகிவிடும்.

பரதக்கலை கற்க, பெற்றோரின் ஊக்குவிப்பு மட்டும் இருந்தால் போதும், கல்வியிலும், கலை வளர்ப்பதிலும் சிறப்பு வாய்ந்தவராக மாறமுடியும். நேர மேலாண்மை செய்வதிலும், திறமைசாலிகளாக மாறிவிடுவர். ஆசிரியர்களுக்கான பக்குவம், மாணவ பருவத்திலேயே கிடைத்துவிடும்.

'அல்சைமர்' தொந்தரவு வராது



பரதநாட்டியம் பயின்ற பெண்களுக்கு, 40 வயதுக்கு மேல் வரும் தொந்தரவுகள் இருக்காது என்கிறது, அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வறிக்கை. பொதுவாக, பெண்களுக்கு, 40 வயதுக்கு மேல், ஞாபகமறதி ஏற்பட துவங்கிவிடும். 'அல்சைமர்', பரதம் ஆடுபவருக்கு வராது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement