Load Image
Advertisement

41 தொழிலாளர்கள் மீட்பில் பாடம் கற்பது அவசியம்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் நடை பெற்ற சில்க்யாரா சுரங்கப்பாதை பணியின் போது, அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, ௪௧ தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அதாவது, சுரங்கத்தின் வெளிவாயிலில் இருந்து, ௨௦௦ மீட்டர் துாரத்தில், பாறைகள் இடிந்து விழுந்ததால், ௪௧ தொழிலாளர்களும் வெளியில் வர முடியாமல் சிக்கினர்.
இதையடுத்து, ௧௭ நாட்களாக நடைபெற்ற தீவிர மீட்பு பணிக்குப் பின், கடந்த செவ்வாயன்று இரவு, அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன் வாயிலாக, சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என, பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஒட்டுமொத்த நாடே நிம்மதி பெருமூச்சு விட்டது என்றே கூறலாம்.

இதற்காக இரவு பகலாக பணியாற்றிய, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தலைமையிலான மத்திய, மாநில மீட்புக் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏனெனில், மீட்பு பணியில் ஈடுபட்ட பல்வேறு குழுவினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் வாயிலாக, எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. பல்வேறு இயற்கை இடர்பாடுகளின் போது மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளை ஒப்பிடுகையில், உத்தரகண்டில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த தொழிலாளர்கள் மீட்பு நடவடிக்கையில், ஒவ்வொரு முறையும் பல்வேறு சிக்கல்களை சந்தித்தாலும், இறுதியில், 'ராட் ஹோல் மைனிங்' எனப்படும், எலி துளை சுரங்கம் தோண்டும் பணியில் அனுபவம் வாய்ந்த, 12 பேர் களமிறக்கப்பட்டதன் வாயிலாக, 41 உயிர்கள் தப்பின.
அதுமட்டுமின்றி, தாங்கள் எப்படியும் மீட்கப்படு வோம் என, சுரங்கத்தில், 17 நாட்களாக காத்திருந்த தொழிலாளர்களும், அவர்களது உறவினர்களும் காட்டிய பொறுமையும் பாராட்டத்தக்கது.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஒவ்வொருவருக்கும், தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவியையும், உத்தரகண்ட் மாநில முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும், மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியது, அவர்களுக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்துள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கைகளை பாராட்டும் அதேநேரத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழ காரணம் என்ன? சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட நிறுவனத்தின் கவனக்குறைவா அல்லது இந்த சுரங்கப்பாதை பணியில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்டனவா? என்பது உட்பட பல கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கு எல்லாம் விடை காண வேண்டியது மிகவும் அவசியம்.
தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது குறித்தும், முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். நாட்டின் மற்ற பகுதிகளில், இதுபோன்ற சுரங்கப் பாதை பணிகள் நடைபெற்றால், அவற்றை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், உரிய வழிமுறைகளை, விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பதை, மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அப்போது தான் இதுபோன்ற விபரீத சம்பவங்கள், மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும், சுரங்கப்பாதை அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பான பணி சூழலையும் ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களுக்கான தங்கும் வசதிகள் சரிவர செய்யப்படுவதுடன், போதுமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.
மொத்தத்தில், உத்தரகண்ட் விபத்தில் இருந்து மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்களும், சாலைப் பணிகளில் ஈடுபடும், குறிப்பாக சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணியில் ஈடுபடும் நிறுவனங்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்கும் வகையில் பணியாற்றுவது அவசியம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement